லபக்குதாசின் ‘வெளியாள்’

in கட்டுரை, மொழியாக்கம்

சமீபத்தில் ஒன்று நடந்தது. ஆல்பேர் காம்யூவின் The Outsider நாவலை லபக்குதாஸ் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் முன்பே வந்ததுதான். ஆனால் அவருக்கு அதில் திருப்தி இல்லை. அதனால்தான் மொழிபெயர்ப்பு.

லபக்குதாசின் மொழியாக்கத்தைப் படித்தேன். மரண கொடூரமாக இருந்தது. கதை முற்றிலும் மாறி ஆள் பெயர், ஊர் பெயர் எல்லாம் வேறு பஸ் ஏறிவிட்டிருந்தன. நான் லபக்குதாசிடம் சொன்னேன். ‘மூலத்திற்கும் நீங்கள் பண்ணியிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. காம்யூ எழுதியது என்றால் நம்ப மாட்டார்கள். போலீஸ் வரும்’ என்றேன்.

பிறகு அவருக்கு ஒரு யோசனை சொன்னேன்: ‘இது உங்கள் கதை. உங்கள் பெயரிலேயே போட்டுக்கொள்ளுங்கள். வேண்டுமென்றால் இது உங்களுக்கு நடந்தது என்று சொல்லிக்கொள்ளுங்கள்.’ லபக்குதாசுக்குப் பெரிய அளவு இலக்கியத் திருட்டுகளில் ஆர்வம் இல்லை. பயம்கூடப் படுவார். எனவே நான் விளக்க வேண்டியதாயிற்று. உதாரணமாக, காம்யூவின் நாவலில் நாயகனாகிய மெர்சோவுக்குக் கடைசியில் நீதிபதிகள் மரண தண்டனை கொடுக்கிறார்கள். லபக்குதாசின் மொழிபெயர்ப்பில் நீதிபதிகள் அவனை எச்சரித்து விட்டுவிடுகிறார்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் அதுதான் லபக்குதாஸ். சொந்தப் பெயரில் போட்டுக்கொள்ளும் எண்ணம் அவருக்கும் பாதி இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் என் யோசனையைக் கேட்டதும் அவர் முகம் லேசாக மலர்ந்தது.

லபக்குதாஸ் தமது நாவலுக்கு ‘வெளியாள்’ என்று தலைப்பிட்டு அதனைத் தம் பெயரில் வெளியிட்டார். அதே சூட்டோடு அவரது அல்லக்கை ஒருவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர, லபக்குதாஸ் டயமண்ட் பப்ளிஷர்ஸ் என்கிற மாதிரி ஒரு பதிப்பகத்தைப் பிடிக்க, ‘The Third Party’ என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கம் வெளிவந்தது. இது இரண்டாவது மூல ஆசிரியர் எழுதிய மாதிரி வரவில்லை.

லபக்குதாஸ் உடனே ‘தேர்டு பார்ட்டி’யைத் தமிழாக்கம் செய்வதில் தீவிரமானார். இது எனக்குத் தெரியாமல் நடந்தது. மூன்றே நாளில் லபக்குதாசின் அடுத்த நாவலான ‘பிறன்’ தயாராகி இருவாரங்களில் வெளியீட்டு விழா இல்லாமல் வெளியானது.

‘பிறன்’ தேர்டு பார்ட்டியிலிருந்து மாறுபட்ட அனுபவத்தையும் தகவல்களையும் அளித்தது. தேர்டு பார்ட்டியில் நாயகனின் அம்மா இறந்ததும் நாயகன் தன் முதலாளியிடம் “என் அம்மாவை நான் கொல்லவில்லை” என்கிறான். ‘பிற’னில் “என் அம்மா நிரபராதி” என்று வந்திருக்கிறது. பிறனும் அல்லக்கையின் மொழியாக்கத்திற்கு உட்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார் லபக்குதாஸ். The Stranger என்ற தலைப்பில்.

ஒரு நாவலை மொழிபெயர்க்கப்போய் இரண்டு நாவல்கள் கிடைத்துவிட்டது லபக்குதாசுக்கு. இது இன்னும் எவ்வளவு தூரம்தான் போகும் என்று கேட்டேன். “ரெண்டுதானே ஆயிருக்கு. ஒரு மண்டலத்துக்கு நாப்பத்தெட்டு” என்றார்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar