சம்சார சாகரம்

in கவிதை

கரையிலிட்ட மீன்களாய்
சம்சார சாகரத்தில் எத்தனைப் பேர்
தத்தளிக்கிறார்கள் பாருங்கள்
நிஜ மீன்கள் உருவகத்திற்கு வெளியே
அநேகமாய்ச் சொகுசாக இருக்க
எத்தனைப் பேர் தத்தளிக்கிறோம் பாருங்கள்
விதிமீனவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
பெரிய கடல், வற்றாத உப்புநீர், எனினும்
இவன்/இவள் குடித்தது போதும் எனக்
காலித் தூண்டிலைப் போட்டு
ஒவ்வொருவராய் வெளியே எடுக்கிறான்
தமதல்லாத் தூண்டிலைப் பிடிக்க
நடுக்கடலில் என்னவொரு முண்டியடிப்பு
மண்டைகள், மண்டைகள், எங்கும் மண்டைகள்
பெரிதும் சிறிதும் நல்லதும் கெட்டதுமாய்
உருப்படாத ஆற்றில் மிதக்கும்
அணைந்த அகல்களைப் போல்
மண்டைகள், மண்டைகள், மண்டைக் கடலில்
வெயிலைக் கொட்டும் வானத்திற்கடியிலே
ஒழுங்கற்ற வரிசையில் திணறத் திணறக்
காத்திருந்தது போதும் ஐயா
நுரையீரலுக்குள் தண்ணீர் போய்விட்டது
சட்டைப்பை ரூபாய் நோட்டு நனைந்துவிட்டது
தத்தளிப்பாளர்களின் உப்புநீர் வாந்தி
கடலை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது
உருவகத்திற்கு வெளியே என்னைக்
கொண்டு விடு மீனவா
உனக்குப் புண்ணியமாய்ப் போகும்(?).

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar