நன்மையும் தீமையும்

in கவிதை

கெட்ட விசயங்கள் நடக்கும்போது
அவை பெரும் அளவில் நிகழ்கின்றன:
யுத்தங்கள், பஞ்சங்கள், படுகொலைகள்,
பெரும் நோய்கள், ஒடுக்குமுறைகள், பேரழிவுகள்…
(தனிமனிதன் அனுபவிக்கும் பிரச்சினைகளையும்
இதில் கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறேனே)

நல்ல விசயங்கள் நடக்கும்போது
அவை மிகச் சிறிய அளவில் நிகழ்கின்றன:
சாகக் கிடந்தவர் குணமாகிறார்.
தொலைந்த குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்.
பேருந்து ஓட்டுநர் மாரடைப்புக்கிடையில்
ஐம்பது பேரைக் காப்பாற்றிவிட்டுச் சாகிறார்
(1-ஐவிட 50 பெரிதல்லவா).
ஆட்டோவில் விட்ட லட்ச ரூபாயை
நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்
திரும்பக் கொண்டுவந்து தருகிறார், இத்யாதி.

கெட்ட விசயங்கள் நடக்கும்போது
முக்கியமான கேள்விகள் எழுவதில்லை
நல்லது நடக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
உலகத்தில் நல்லதும் நடக்கிறது
என்று மனங்கள் சமாதானம் அடைகின்றன.
உலகில் நல்லதும் நடப்பதுதானே பிரச்சினை?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar