ஒரு நாவலுக்கான கதை

in கட்டுரை

குறிப்பு: இது நான் எழுதப்போகும் ஒரு நாவலுக்கான கதை. ‘ஆயிரம் கிடைத்தாலும் ஞாயிறு கிடைக்காது’ என்பது நாவலின் தலைப்பு.

சென்னையைச் சேர்ந்த 38 வயது பாலு, ஒரு ஞாயிறு காலை வாக்கிங் போகிறான். காலைக் காற்று அவனைத் தழுவுகிறது, தலைமுடியைக் கலைத்துப் புதிதாக மொக்கு விடத் தொடங்கியிருக்கும் முன்வழுக்கையை முத்தமிடுகிறது. ஊரின் ஒப்பீட்டு அமைதியில் அவன் லயிக்கிறான். வாரநாட்கள் ஆயுள் முழுக்க ஞாயிற்றுக்கிழமையிடம் பிச்சை வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான். மூடப்பட்ட கடை வாசல்களைப் பார்த்துப் புன்னகைத்தபடியே நடக்கிறான்.

அப்போது அவனுக்கு ஒரு செல்பேசி அழைப்பு வருகிறது. பாலுவின் மனைவி அழைக்கிறாள். அவன்தான் பாலு. வரும்போது அரை லிட்டர் தயிர் பாக்கெட் ஒன்றும் இட்லி மாவு ஒன்றும் வாங்கிவருமாறு மனைவி சொல்கிறாள். அவன் வாரத்தில் இருநூறு நாட்கள் மாவு வாங்கும் கடை அது என்றாலும் மனைவி அந்தக் கடைக்கு வழி சொல்கிறாள். பாலு அப்படியே நின்றுவிடுகிறான். யாரோ தன் மண்டையைப் பிடித்து சுவரில் மோதிய மாதிரி இருக்கிறது அவனுக்கு. வாழ்த்து அட்டை நீரோடை போல் ஓடிக்கொண்டிருந்த அவன் ரத்தம், அடைமழை நேரத்துத் தெருவோர நீர்ப்பெருக்கு போல் ஓட ஆரம்பிக்கிறது. இதுவா என் ஞாயிறு? இதற்காகவா கண் விழித்தேன்? என்று தன்னைக் கேட்டுக்கொள்கிறான்.

ஜீவனெல்லாம் வேதனை ஏறக் கால் போன போக்கில் நடக்கத் தொடங்குகிறான் பாலு. பிறகு ஒரு முடிவுக்கு வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அஷோக் நகரை அடைகிறான். அங்கே டெபிட் கார்டில் பணம் எடுக்கிறான். செல்பேசியை ஒரு பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிடுகிறான். ஒரு வெளியூர் பேருந்தைப் பிடிக்கிறான், மட்டமான பூரி-கிழங்கு கிடைக்கும் விக்கிரவாண்டி நிறுத்தத்தில் இறங்கி அருகே ஒரு குக்கிராமத்திற்குச் செல்கிறான். சட்டை பனியனைக் கழற்றிக் கீழே கிடக்கும் ஒரு பாலிதீன் பையில் போட்டுக்கொண்டு சென்னைக்கார உருவத்தை மறைத்துக்கொள்கிறான்.

ஊருக்குள் நுழைகிறவன், உயிருள்ள எல்லோரிடமும் வேலை கேட்கிறான். தன் பெயர் சின்ராசு (திண்டிவனம்) என்று சொல்லிக்கொள்கிறான். கடைசியில் அவனுக்குக் கொத்து வேலை கிடைக்கிறது. கைவசம் உள்ள பணத்தை வைத்து ஒரு குடிசை கட்டிக்கொள்கிறான். ஊர் பரிச்சயமாகிச் சிக்கல் இல்லாத கிராமத்து வாழ்க்கையைப் பழகிக்கொள்கிறான் பாலு. இன்னும் பல சிறு உடல் வேலைகளைக் கற்றுக்கொண்டு வளர்கிறான். சின்னதாக ஒரு செல்பேசிகூட வாங்குகிறான்.

இதற்கிடையில் ஒரு பெண்ணுடன் அவனுக்கு உறவு ஏற்படுகிறது. திருமணம் செய்துகொள்ள பாலுவும் பெண்ணும் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் பெற்றோர் சின்ராசு என்ற பாலுவின் வறுமை, ஜாதி அடையாளம் அறியாமை ஆகியவற்றை மீறிச் சம்மதிக்கிறார்கள், ஆனால் தாலி அவன்தான் வாங்கிக் கட்ட வேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்கள். தாலி வாங்க பாலுவிடம் காசில்லை. தலைகீழாக நின்றாலும் கடன் தர யாரும் தயாராக இல்லை. ஒரு அற்பத் தங்க செயினால் திருமணம் நிற்கப்போகிறதே என்று பாலு வருந்துகிறான்.

அப்போது பாலுவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தாலி கிடைக்கும் ஒரே இடம் அவனது மனைவி. முன்னூறு, நானூறு செலவுசெய்து சென்னைக்குப் போய் மனைவியைப் பார்த்து எப்படியாவது தாலியை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம் என்று உற்சாகமடைகிறான் பாலு. அவன் சென்னைக்குப் போகிறான்.

கடைசி அத்தியாயம் பிரெஞ்சு நியூ வேவ் சினிமா பாணியில் முடிகிறது: வீட்டுக் கதவைத் தட்டுகிறான் பாலு. பள்ளிச் சீருடையில் மகன் பின்தொடர வந்து கதவைத் திறக்கும் மனைவி, அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிற்கிறாள். பாலு மௌனமாகத் தயிர், இட்லி மாவு மற்றும் மீதிச் சில்லறையை அவளிடம் நீட்டுகிறான். முற்றும் வருகிறது.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar