மழைப் பேட்டி

in கட்டுரை

சமீபத்தில் ஓர் இளைஞர் என்னைப் பேட்டி எடுக்க வந்தார். ‘தாக்கம்’ என்று ஒரு புதிய சிற்றிதழின் நவம்பர் 2015 இதழுக்கு என்றார். அவர் கேள்வி கேட்டதும் நான் பதில் சொன்னதுமாக இரண்டு மணிநேரம் நடந்தது பேட்டி. ஆனால் இயந்திரம் போல் கேள்வி கேட்டார், இயந்திரம் போலவே பதில்களைப் பரபரவென்று எழுதிக்கொண்டார். சுரத்தே இல்லை. சிற்றிதழாளர் என்றால் ஒரு மலர்ச்சி, ஒரு தளுக்கு வேண்டாமா?

பேட்டி முடிந்ததும் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார். ஒரு புன்னகைகூட இல்லை. காசுதான் பெயராது, வெறும் பப்ளிசிட்டிதான். அதுவும் புரூஃப்ரீடர் படித்த பின் நேராக எடைக்குப் போகிற பத்திரிகை. ஒரு புன்னகையாவது செய்துவிட்டுப் போயேன்! இதற்காகவா ஒரு மாடி ஏறினாய்?

நான் என் எழுதும் இருக்கைக்குப் போய் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தேன். உரத்த மழை. இவர் நடைபாதையில் நடக்கக் கிடைத்த ஒற்றையடிப் பாதையில் நடந்துகொண்டிருந்தார். பிறகு ஓர் இடத்தில் நின்று சிறிது நேரம் மழைநீரை வெறித்துக்கொண்டிருந்தார். Presently, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து அதே வெறிப்போடு புகைத்தார். சிகரெட் தீர்ந்த பின் பூண்டு வெடியைப் போல் தெருவில் வீசினார்.

அடுத்துத் தன்னுடைய முதுகுப் பையிலிருந்து ஒரு ஃபோல்டரை எடுத்தார். என்னுடைய பேட்டியின் கையெழுத்துப் பிரதி அது. தாள்களை அதிலிருந்து வெளியேற்றி ஃபோல்டரைப் பைக்குள் வைத்து முதுகில் மாட்டிக்கொண்டார். பிறகு தாள்களை இரண்டாக, நான்காகக் கிழித்துக் கடாசினார். கப்பலாவதற்கு முன்பே மிதக்க வந்துவிட்டது போல் மழைநீரில் மிதந்த அந்தக் காகிதங்களைப் பார்த்து ஏதோ கத்தினார். எனக்குக் காதில் விழவில்லை.

கார் சத்தம் கேட்டு இடப்பக்கம் திரும்பிப் பார்த்தார். சடாரென்று அதன் முன்னே பாய்ந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார், கார் தன் மேல் ஏறட்டும் என்பது போல. கார்காரர் விடுவாரா? சரியான சமயத்தில் பிரேக் போட்டு நிறுத்தினார். உடனே காரிலிருந்து இறங்கினார். அந்த வேகம் – அவர் சிற்றிதழாளரை அடித்து நிமிர்த்திவிடுவார் என்றது என் உள்ளுணர்வு. நான் இன்னும் அருகில் சென்று பார்க்க முகத்தை ஜன்னல் கம்பிகள் மேல் பதித்துக்கொண்டேன்.

சிற்றிதழாளர் தன் மேல் கார் ஏறும் என்ற நம்பிக்கையில் இன்னும் சாஷ்டாங்கித்திருந்தார். கார்காரர் அவரை ஒரு காலரைப் பிடித்துத் தூக்கி எழுப்பி நிற்கவைத்தார். அடுத்தபடியாக, இரு காலர்களையும் பிடித்து ஆளை உலுக்கினார். இருவரும் நல்ல மழையில் நனைந்துகொண்டிருந்தார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். குரோசாவா பாதிப்பில் எடுத்த மோசமான ஒரு தமிழ்ப் படக் காட்சியைப் பார்ப்பது போல் இருந்தது.

இளைஞர் ஏதோ சொல்லியபடி கைகூப்பிக் கெஞ்சுவது தெரிந்தது. மண்டையை மண்டையை உருட்டி ஆர்க்கெஸ்ட்ரா நடத்துநர் போல் கைகளைப் பலரகமாய் ஆட்டி நிறைய விளக்கினார். கார்காரர் பிடியை விட்டார். இளைஞர் சற்றுத் திரும்பிக் கை நீட்டி என் வீட்டைக் காட்டினார். கார்காரர் என்னைப் பார்த்தார். நான் திடுக்கிட்டுச் சட்டென்று குனிந்து மேஜை விளிம்பில் இடித்துக்கொண்டேன். பரவாயில்லை.

பிறகு என் மனைவியை மீறி எவனும் வீட்டுக்குள் வந்துவிட முடியாது என்ற தெளிவில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இருவரும் காரில் ஏறுவதைப் பார்த்தேன். மனம் நிம்மதியடைந்தது; பின்பு நான் கொடுத்த பேட்டிக்குத் திரும்பிச் சென்றது. அப்படி என்ன சொல்லிவிட்டேன் பேட்டியில்? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar