தமிழ்த் துரோகி நோபல்

in கட்டுரை

தமிழுக்கு மிகப்பெரிய அளவில் துரோகம் இழைப்பவர்கள் யாரென்று பார்த்தால் அது நீங்களோ நானோ அல்ல. சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவும் போவதில்லை. இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். நோபல் பரிசுக் குழுவே ஒரு நூற்றாண்டாக அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டுவருகிறது.

இது வரை இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவர்கள் தகுதியுள்ளவர்கள்தானா? இல்லை. இனிமேல் பெறப்போகிறவர்கள் தகுதியுள்ளவர்களாக இருப்பார்களா? நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: அவர்கள் தமிழராக இருக்க மாட்டார்கள். ஆதாரம்: கடந்த கால வரலாறு. ரவீந்திரநாத் தாகூர், ஆல்பர்ட் கேம்பஸ், ட்ரான்ஸ்ஃபார்மர், சிம்போர்ஸ்கா, ஆலிஸ் மன்றோ… இவர்களில் யாரையாவது தமிழர் என்று சொன்னோமானால், உண்மையான மீசை வைத்த தமிழ்ப் பெண்மணி என்று சொன்னோமானால், இன்னும் தவழத் தொடங்காத குழந்தைகூட எழுந்து நின்று கெக்கலி கொட்டிச் சிரிக்கும்.

ஒரு பலகால மொழியின் இலக்கியத்தை எழுதும் உலகத் தரமான எழுத்தாளர்களிடம் பாராமுகமாக இருப்பது அறியாமையில் நடக்காது. இலக்கிய நோபல் ஒரு தமிழனுக்குக் கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டு சதிசெய்யும் தமிழன் ஒருவன் பரிசுக் குழுவில் இருக்கிறான் என்று நான் சந்தேகப்படுகிறேன். அவனுடைய அபிமான எழுத்தாளன் மூன்றாந்தர எழுத்துக்குச் சொந்தக்காரன் என்றும் அதனால் அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்காத நோபல் பரிசு வேறு எந்தத் தமிழனுக்கும் கிடைக்கக் கூடாது என அவன் திட்டமிட்டுள்ளான் என்றும் சந்தேகப்படுகிறேன். ஆதாரம் கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். என்னிடம் ஒரே ஒரு ஆதாரம்தான் இருக்கிறது: தமிழர்களுக்குப் பல ஆண்டுகளாக இலக்கிய நோபல் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய நோபல் அறிவிக்கப்படும்போது அது நம்மவருக்கா என்று ஆவலோடு அறிய முயலும் பழக்கத்தைக் கைவிட்டு, இந்த முறையும் நமக்கில்லையே என்று ஆள் பெயர் அறியுமுன்பே ஏமாற்றமடையும் பழக்கம் வந்திருப்பது தமிழ்ச் சூழலின் அவல நிலை. சினிமா எடுத்தால் பிரான்சில் காட்டுகிறீர்கள், புத்தகம் எழுதினால் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன் என்கிறீர்களே ஐயா!

நாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் போடாத புத்தகமா? பெங்குவினைக் கேளுங்கள், ஓரியன்ட் லாங்மேனைக் கேளுங்கள், தெரிந்தவர்கள் யாரையாவது கேளுங்கள். என்னுடைய புத்தகங்களே இருபது இருபத்தைந்து ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. எனக்குக் கொடுங்கள் என்று நான் எங்குமே சொல்லவில்லை. என்னை விட்டால் வேறு தமிழ் எழுத்தாளர்கள் கிடையாதா? பலர் இருக்கிறார்கள். நோபல் பரிசு கொடுத்தால் அதற்குப் பிறகு அடங்கிவிடுவார்கள். அதில் கிடைக்கும் பணத்தில் உலகம் சுற்றி ஆளுயரக் கோட்டு மஃப்ளரில் பனிக்கு மத்தியில் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவதற்கு மாறிவிடுவார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இது ஒரு வரவு. இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டுதான் கேட்கிறோம், தமிழனுக்குத் தா!

இந்த முறை முடியாது. ஸ்வெட்லானா அலெக்சியெவிச்சுக்குக் கொடுத்தாயிற்று. அடுத்த முறை; சரியா? இலக்கியம்தான் என்று இல்லை. இலக்கிய நோபல் கொடுக்கத் தமிழில் ஆளில்லை என்று நீங்கள் நினைத்தால் – அது தவறு என்றால்கூட – வரலாறு, தத்துவம் போன்ற நோபல்களையும் தரலாம். கல்லூரிப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்து எண்ணற்ற மாணவர்கள் கணக்கு, இயற்பியல், வேதியியல் போன்றவை கிடைக்காமல் இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று சேருவார்கள். அது மாதிரிதான் இதுவும். இலக்கியத்திற்கு இல்லையா? விடு கழுதை, வரலாற்றுக்குக் கொடு. இங்கே இல்லாத வரலாறா? பரிசுக் குழுவினர் பார்வையை விசாலித்துக்கொண்டு இந்தப் பக்கம் கொஞ்சம் பார்த்தால் போதும். ஒலிம்பிக்சில் ரஷ்யாவே, கொரியாவே அத்தனைப் பதக்கங்களையும் அள்ளுவது போலத் தமிழ் எழுத்தாளர்களும் அத்தனை நோபல்களையும் அள்ளிவிடுவார்கள். எங்களுக்குத் தேவை இரண்டே விசயங்கள்: ஒரு வாய்ப்பு, அப்புறம் அந்தக் கருங்காலியின் தலை.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar