ஒரு ஞாயிறு

in கவிதை

நண்பர்கள் போலத் தெரிந்த
மூன்று இளைஞர்களில்
ஒருவன் இன்னொருவனை
அடித்துக்கொண்டிருந்தான்
நான் இருந்த தேநீர்க் கடை வாசலில்
வாடிக்கையாளர்கள் வெளியே வந்து
வேடிக்கை பார்த்தனர்
ஞாயிறு என்பதால் தெருவில்
நடமாட்டம் அதிகம் இல்லை
அடித்தவன் குத்து மழை
பொழிந்துகொண்டிருந்தான்,
அடி வாங்கியவன் செய்த துரோகம் பற்றி
சும்மா இருந்த நண்பனிடம்
சில வார்த்தைகள் பேசினான்
அடித்தவனின் குத்துகள் ஒவ்வொன்றும்
அடி வாங்கியவனை நிலைகுலையச் செய்தன
அவன் விட்டுவிடும்படி கைகூப்பிக்
கெஞ்சினான், மன்னிப்புக் கேட்டான்
அடித்தவன் இன்னும் கொஞ்சம் கொடுத்த பின்
நிறுத்திவிட்டு அவன் மேல் துப்பினான்
இனி அவளுக்கு ஃபோன் செய்தால்
மவனே நீ செத்தாய் என எச்சரித்து நகர்ந்தான்
அடி வாங்கியவன் வீங்கிய முகத்தில்
ரத்தக் காயத்துடன் தள்ளாடி நடந்தான்
எங்களைக் கவனிக்கவில்லை
சற்றுத் தூரத்தில் ஒரு மாடு
சுவரை நோக்கி நின்றிருந்தது
அழுக்குப் புட்டத்தைக் காட்டியபடி
அதன் உலகத்தில் இருந்து
அசை போட்டுக்கொண்டிருந்தது
இவன் அந்தப் பக்கம் வந்தபோது
திரும்பிப் பார்க்காமல்
மென்மையாக வாலைச் சுழற்றியது
வால் முனையின் உரசலுக்குத்
திடுக்கிட்டுத் திரும்பிய இளைஞன்
தன் ஓய்ந்த நடையைத் தொடர்ந்தான்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar