சஞ்சலம்

in கட்டுரை

வாக்கிங் போகக் கிளம்புவதற்கான முஸ்தீபுகளின் ஒரு பகுதியாக தடபுடலாகக் கனைத்தபடி என் அறையை விட்டு வெளியே வந்தபோது மனைவி பேசினார். “இந்தாங்க, இந்தத் துணியெல்லாம் எடுத்து இதுல போட்டு ஆன் பண்ணுங்க” என்று முகவாய் நுனியால் வாஷிங் மெஷினைச் சுட்டிக்காட்டினார்.

நான் சட்டெனக் குனிந்துத் துணிக் குவியலை அள்ளியபோது வலதுகையில் ஏதோ உறுத்தியது. என் பையனின் சட்டை. குவியலைக் கீழே வைத்துவிட்டு சட்டைப்பையை அகலப்படுத்திப் பார்த்தால் உள்ளே அறுபது ரூபாய் பணம், ஒரு தீப்பெட்டி.

“தீப்பெட்டி” என்று படித்ததும் எனக்குத் திடுக்கிட்டது. பதினாறு வயதுப் பையனின் சட்டைப்பையில் எப்படி வந்தது தீப்பெட்டி? அவன் சக உருப்படாவெட்டிகளுடன் புகைப்பான் என்று தெரியும். ஆனால் அதைத் திருட்டுத்தனமாகத்தான் செய்வான். ஒரு தீப்பெட்டியை மேனியில் சுமந்துகொண்டு திரிய மாட்டான். இதில் வேறு ஏதோ விவகாரம் இருக்கிறது. எனக்குத் திடுக்கிடலின் மூச்சிரைப்பு அடங்கி அமைதியாகி வயிற்றைக் கலக்கத் தொடங்கியது. இது சீரியஸ் விசயம் என்று பட்டது. பணத்தையும் பெட்டியையும் ரகசியமாக என் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு துணிக் குவியலை வாஷிங் மெஷினில் போட்டேன். ஆன் செய்யத் தெரியாததால் சத்தமில்லாமல் என் அறைக்குத் திரும்பிச் சென்றேன்.

என் பயத்திற்குக் காரணம் இருந்தது. நேற்று மாலை ஏழு மணி சுமாருக்கு என் மகன் தனது நண்பர்களுடன் தெருமுனை ஸ்டேஷ்னரி கடைக்கு ஒட்டிய மாதிரி இருந்த சந்தில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறான். அந்தச் சந்து முனையில் வீடுகள், கடைகள் எவையும் இல்லை, தெருவிளக்கும் இல்லை. அது வசதியாகிப் போய்விட்டது. ஸ்டேஷ்னரி கடைக்காரருக்கு என்னைத் தெரியும். நான் அடிக்கடி அவர் கடையில் பொருட்கள் வாங்குவேன். அவர் என் மகனைக் கூப்பிட்டு ‘சிகரெட் பிடிக்காதே, அதுவும் இங்கே நின்று பிடிக்காதே, அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். என் மகன் “போய்யா *********” என்று திட்டிவிட்டு ஓடிவிட்டான். அதன் பிறகு பின்னிரவில் கடையில் தீ ஏற்பட்டுப் பாதிக் கடை எரிந்துவிட்டது. இவன்தான் எரித்திருப்பானோ என்று எனக்கு சந்தேகம்.

சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கத்துவது. சண்டை போடுவது, சாப்பிடும்போது வாக்குவாதம் வளர்த்து ஆத்திரமாகி சாம்பார்க் கரண்டியை வளைக்க முயன்று தோல்வியடைவது, வகிடு அமையவில்லை என்றால் சீப்பைக் கடித்துச் சிதைப்பது என்று ஆளே உருமாறிவருகிறான். ஹார்மோன்களின் திருவிளையாடலைப் பார்க்க முடிகிறது. அவனை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. இந்தக் கோபம்தான் கடைக்காரரிடம் வெளிப்பட்டிருக்குமோ? அவர் என்னிடம் என் மகனைப் பற்றிப் பேசியபோது எட்டரை மணி இருக்கும். நான் அப்போதே பயலைக் கூப்பிட்டுக் கண்டித்திருந்தால் இந்தத் தீக்கிரை நடந்திருக்காதுதானே?

கோபத்தில்தான் அவன் அம்மா மாதிரியே தவிர பண விசயத்தில் என்னை மாதிரி. ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். அந்த அறுபது ரூபாய் அப்படித்தான் வந்ததா? அறுபது ரூபாய்க்காக அடியாள் வேலை செய்திருக்கிறானா? கடைக்காரருக்கும் அவனுக்கும் நிகழ்ந்த சம்பவத்தைக் கடைக்காரரின் எதிரி எவனோ பார்த்திருக்கிறான். பிறகு அவனை அழைத்து ‘மகனே, ஐம்பது ரூபாய்க்குக் கடையை எரி, இந்தா தீப்பெட்டி’ என்று சொல்லியிருக்கிறான். என் மகன் நூறு ரூபாய் கேட்டிருக்கிறான். எதிரி பேரம் பேசிக் கடைசியில் அறுபது ரூபாய் மற்றும் ஒரு தீப்பெட்டிக்குக் கடையை எரிக்கச் சொல்லி செட்டில் ஆகியிருக்கிறது – இதுதான் என் தியரி. தீப்பிடிப்பில் யாரும் காயப்படவில்லை. ஆனால் கடைக்காரரின் நஷ்டத்தைக் காப்பீடு முழுமையாக ஈடு செய்யாது. “காவல் துறை விசாரணை செய்துவருகிறது” என இன்றைய செய்தித்தாளில் வந்திருக்கிறது. ஒருவேளை காவல் துறை என் மகனைத் தேடி வந்துவிட்டால்? எங்கள் தெருவில் வக்கீலே கிடையாது.

இப்படி உச்சகட்டக் குழப்பத்தில் ஒரு காதல் கவிதை எழுதிக்கொண்டிருந்தபோது என் மகன் பள்ளிக்கூடப் பையை சோபா மேல் விட்டெறியும் சத்தம் கேட்டது. அந்தக் கணத்தில் ஒரு முடிவெடுத்தேன் – நான் அவனைக் குறுக்குவிசாரணை செய்வதற்கு அவன் மனதைத் தயார்செய்ய வேண்டும். “டேய், இங்க வாடா” என்றேன் அதிகாரமாக. வந்தான். “கை குடு” என்றேன். அவன் புரியாமல் நீட்ட, நான் கைகுலுக்கினேன். அவன் பிறந்தநாளுக்குக்கூட நான் அவனோடு கைகுலுக்கியதில்லை. இப்போது இந்த நிலைமை. என் கையை முகர்ந்துபார்த்தேன். பட்டர் பிஸ்கட் வாசனை – ரெண்டு ரூபாய்க்கு ஒன்று இருக்குமே… எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறேன் என்றால் இரண்டு மணிநேரத்திற்கு முன்புதான் நான் அதைச் சாப்பிட்டிருந்தேன். வீட்டில் எப்போதும் இருக்கும். அதாவது அவன் சிகரெட் பிடித்துவிட்டு வரவில்லை. நான் பிஸ்கட் சாப்பிட்டதோடு சரி. அவன் வெளியேறினான். கூடத்தில் தன் இடதுகையை அவன் முகர்ந்துபார்ப்பது கண்ணில் பட்டது. அவனுக்கு இடதுகைப் பழக்கம்.

தீவைத்தது என் மகன்தானா என்பதை இதெல்லாம் நிரூபிக்காது. ஆனால் என்னையும் அறியாமல் நான் அவனைக் குற்றவாளியாக்கத் துடிப்பது போல் தோன்றியது. குற்ற உணர்வால் குறுகுறுப்பாக இருந்தது. கண்டிப்பாக அவன் அறுபது ரூபாய்க்காக ஒரு கட்டிடத்திற்குத் தீவைக்கும் அளவு சீப்பான ஆளாக இருக்க முடியாது. எழுந்து கூடத்திற்குச் சென்று இலக்கில்லாமல் சும்மா நின்றேன். காலண்டர், சாமி படம், மீண்டும் காலண்டர், அலமாரிப் பொருட்கள், எல்லாவற்றையும் இன்னொரு ரவுண்டு பார்த்தேன். மகன் வெளியிலிருந்து வந்தான். சமையலறைக்குள் சென்று மறு நொடியே வெளியே வந்து இன்னொரு அறைக்குச் சென்றான்.

நான் சமையலறைக்குப் போனேன்.

“என்ன நடந்துக்கிட்ருக்கு?” என்றேன் மனைவியிடம்.

“ஏன், என்னாச்சு?”

“அவன் இப்ப எதுக்கு உள்ள வந்துட்டுப் போனான்?”

“லைட்டர் வாங்கிட்டு வரச் சொன்னேன். அதான் வாங்கிட்டு வந்தான். ஏன், என்ன பிரச்சன?”

எனக்கு ஒரு கண் துடித்தது.

“யாருக்கு லைட்டர்?”

“எனக்குத்தான்.”

நான் ஒரு கணம் அமைதியானேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை.

“இது எப்பலேந்து?” என்றேன்.

மனைவி முறைத்து, “கேஸ் லைட்டர். அடுப்புக்கு. சிகரெட் லைட்டர் இல்ல. அது நீங்க பண்ற வேல” என்றார்.

நான் சமாளித்து, “ஏன், பழைய லைட்டர் என்னாச்சு?” என்றேன் ஐ.சி.யூ. இதயநோயாளி பற்றி விசாரிக்கும் அக்கறைத் தொனியில்.

“பழைய லைட்டர் ரிப்பேராயிட்ச்சு. வத்திப்பெட்டி வாங்கிட்டு வாடான்னு அனுப்புனேன். வாங்க மறந்துட்டு தொலைச்சிட்டேன்னு வந்து இளிக்குது உங்க புள்ள. அதான் புது லைட்டரே வாங்கிடலாம்னு அனுப்புனேன். இந்த மூணாவது கடைல சித்ரா வீட்டுக்குக் கீழ தண்ணி கேன் போடுறாங்களே, சங்கரோட மச்சான் – ரியல் எஸ்டேட் சங்கர் – ”

வெட்டிப் பேச்சுக்கு பதிலாகக் குற்றம் நடந்த இடத்திற்குப் போய் நிலவரத்தை அறியத் தோன்றியது. வெட்டிக்கொண்டு கிளம்பினேன்.

தெருவுக்கு வந்ததும் இதயம் படபடத்தது, மூச்சிரைத்தது, வியர்த்தது, கால்கள் தளர்ந்தன, சக்கர நாற்காலி தேவைப்பட்டது. ஒரு சுனாமிக்குப் பின்பான கடலைப் போல் தெருமுனை மிக அருகில் வந்துவிட்ட மாதிரி இருந்தது. கடையின் ஷட்டர் முக்கால் மூடியிருந்தது. கொஞ்சமாவது புகைந்துகொண்டிருக்கும் என்று நினைத்தேன். எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. கடைக்கு எதிரில் கடைக்காரரும் எனக்குப் பழக்கமில்லாத யாரோ இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டென்று மனம் லேசானது.

கடைக்காரர் என்னைப் பார்த்ததும் புன்னகைத்து “வாங்க, வாங்க” என்றார். நானும் புன்னகைத்தேன்.

“இங்க இப்பிடி ஆயிருச்சே. அதான் நீங்க என்ன மனநிலைல இருக்கீங்கன்னு பாத்துட்டுப் போறத்துக்காக வந்தேன்” என்றேன்.

“ஆமா, என்ன பண்றது. இதெல்லாம் நடக்கும். நம்ம கைல இல்ல. இன்ஷூர் பண்ணிருக்கேன். ஆனா முழு அமவுன்ட்டு வராது” என்றார்.

“தெரியும்” என்றுவிட்டு உடனே நாக்கைக் கடித்துக்கொண்டேன். நல்லவேளையாக அவர் கவனிக்கவில்லை.

“போலீஸ் வந்து பாத்துட்டுப் போச்சு. இன்ஷுரன்ஸ் ஆளுங்களுக்குத்தான் வெயிட்டிங்” என்றார் கடைக்காரர்.

“என்ன நடந்துது ஆக்ச்சுவலா?”

“ஷார்ட் சர்க்யூட் ஆயிருக்கா மாரி தெரியிது” என்றார் மற்ற இருவரில் முதலாமவர்.

“யாராவது நெருப்பு வெச்சிருப்பாங்களா?” என்றேன்.

கடைக்காரர் சிரித்தார். “எழுத்தாளர்ன்னு ப்ரூவ் பண்றீங்க பாருங்க” என்றவர், “அப்பறம் உங்க பையன் எப்பிடி இருக்கான்?” என்றார் இளித்து.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. குற்றம்சாட்டுகிறாரோ? ஆனால் தர்மசங்கடம் அடைந்தது போல் காட்டிக்கொண்டு வெறுமனே புன்னகைத்தேன். விடைபெற்றேன். சிறிது தூரம் சென்ற பின்பு கடைக்காரர் என் மகனைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார் என்று தோன்றியது. ஆனால் எனக்குக் கவலையே இல்லை. அவர் எப்போது சிரித்தாரோ அப்போதே பெருமளவுக் கவலை பறந்துவிட்டது. ஒரு புதுத் தெம்பு வந்திருந்தது. யாராவது வயதான ஆளாகப் பார்த்து ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது.

என் அறைக்குத் திரும்பியவுடன் ‘இதெல்லாம் நடக்கும்’ என்று நினைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைப்படி மின்னஞ்சல் பார்க்கத் தொடங்கினேன். “அப்பா வந்துட்டாரு, அப்பாகிட்ட காட்டு” என்ற மனைவியின் குரல் அந்த வார்த்தைகளைச் சொல்வது கேட்டது. எனக்குக் கபாலென்று பீதி திரும்பி வந்தது. ஏதாவது புதிய ஆதாரம்? ஆனால் என்னிடம் காட்டுவானேன்? மகன் என் அறைக்குள் வந்து ஒரு கொத்துத் தாள்களை நீட்டினான். வகுப்புத் தேர்வின் கணக்கு விடைத்தாள். 58 மதிப்பெண் வாங்கியிருந்தான். எனக்கு ஒரு ராட்சத அலை போல் பெருமூச்சு எழுந்தது. கண்கள் கலங்கின. விருட்டென்று எழுந்து அவனைக் கட்டிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தேன். கணக்கில் அவன் ஐம்பத்தேழுக்கு மேல் வாங்கியதேயில்லை.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar