கால்குலேட்டர்

in கட்டுரை

பதி-நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமிது. நான், என் மனைவி, இரண்டு பேரும் நாள் பூரா ஒரே வீட்டில் இருக்க முடியாது என்று கருத்தொருமித்தோம். நான் உட்கார்ந்த இடத்தை விட்டு நகர்கிற மாதிரி இல்லை. மனைவியும் ராஜம் கிருஷ்ணன் படித்துவிட்டு வேலை தேடத் தொடங்கியிருந்தார். தினமும் பல நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.

மகனுக்கு எட்டு மாதம். கர்ப்பமல்ல, வயது. தவழத் தொடங்கியிருந்தான். இந்த “வளைய வருதல்” என ஒன்று சொல்வார்களே, அதை எந்நேரமும் செய்துகொண்டிருந்தான். அப்பனாகப் பிறந்த பாவத்தால் அவனைத் தனியாளாகச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பெரிய உபத்திரவமாக இருந்தது.

சும்மா தவழ்ந்துகொண்டு கிடந்தால் சனியன் என்னவோ செய்துவிட்டுப் போகிறது என்று நம் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவனுக்கு சர்க்கரை நோயாளி போல் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், அடிக்கடி கழிப்பறைக்குத் தூக்கிப்போக வேண்டும். நான் எழுதுவதா இவனுக்கு நர்ஸ் வேலை பார்ப்பதா?

இந்நிலையில் ஒருநாள் அருமையான சிறுகதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். படைப்பு யோசனை வந்தால் காய்ச்சல் தாக்கியது போல் வேறெதையும் செய்ய முடியாமல் பரபரப்பாக எழுதுவோம் அல்லவா? அப்படி இருந்தது. அப்போது கணினி அறிமுகமாகாத காலம். என் கையெழுத்து அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. கையொப்பமாக எழுதுவேன். நான் ஒரு கதை கொடுப்பேன், பத்திரிகையில் வேறு கதை வரும். ‘இதென்ன புதுக் கதை’ என்று பதற மாட்டேன். அதை உபவிளைபொருளாக ஏற்றுக்கொள்வேன். “ஒண்ணு எழுதுனா ஒண்ணு ஃப்ரீ” என்று ஒரு அச்சகர்கூடக் கிண்டல் செய்வார் (“அர்ச்சகர் என்று படித்துவிட்டேன்! :)))”). அவர் பின்னாளில் ஒரு நிதி நிறுவனத்திடம் மொத்தமாக மோசம் போனது ஹாஹா வேறு கதை.

விலகி வந்துவிட்டோம். அந்தச் சிறுகதை எனக்குப் பெரும் திருப்தியைக் கொடுத்தது. நான்கு மணிநேரம் இடைவிடாமல் எழுதியது, நடுவில் ஒருமுறை மகன் வாயில் ஓர் ஆறிய இட்லியை அவசரமாகத் திணித்ததைச் சேர்க்காமல். ஓர் அருமையான சாப்பாட்டைத் தின்ற நிறைவில் ஜிவ்வென்று இருந்தது. ஒரு சிகரெட் பிடிக்கப் பக்காவான மனநிலைத் தருணம். மதிய நேரம். தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாக, அமைதியாக இருக்கும் (தெரு). அந்த மாதிரிச் சூழலில் புகைபிடிப்பதைக் கற்பனை செய்துபார்த்தேன். சிகரெட் பிடிக்காமல் சிறுகதை அனுபவம் முழுமை அடையாது என்று புரிந்தது.

ஆனால் வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறதே, அதை என்ன செய்ய? வெளியே பூட்டிவிட்டுப் போனால் உள்ளே அது ஏடாகூடமாக எதையாவது செய்துகொண்டுவிடும். நாம் இருக்கும்போது கின்னஸ் புத்தக உருளைக்கிழங்கு போல் கிடக்கும். நாம் அந்தப் பக்கம் நகர்ந்தால் விதி நுழைந்து தன்னை அதனிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும். இது தவிர ரத்தமும் சதையுமாக இன்னொரு விதி வேறு இருந்தது. அது உடனே கொன்று நின்றும் கொல்லும்.

யோசித்தேன். இப்போது நான் சிகரெட் பிடித்தே ஆக வேண்டும். அதே சமயத்தில் நான் திரும்பி வரும் வரை குழந்தை உயிரோடு இருக்க வேண்டும். ஓர் உத்தி செய்தேன். குளியலறையில் ஒரு பெரிய நீலவண்ண பிளாஸ்டிக் டிரம் இருந்தது. அந்த டிரம்மில் பாதித் தண்ணீர் இருந்தது. அதை ஒரு வாளியால் எடுத்துத் தரையில் இறைத்துக் காலியாக்கிவிட்டுக் கூடத்தின் நடுவிற்குக் கொண்டுவந்து வைத்தேன். டிரம்மில் தண்ணீர் கொஞ்சம் மீதமிருந்தது. அதற்குறிய நிறைய செய்தித்தாள்களைப் பரப்பினேன். அவற்றின் மேல் மூன்று தலையணைகள், மகன் வாய்க்குள் கொள்ளாத நான்கைந்து பொம்மைகள், இரண்டு மில்க் பிக்கீஸ், எல்லாம் வைத்துவிட்டு அவனை டிரம்முக்குள் இறக்கினேன். உள்ளே இருட்டாக இருந்தது. எனவே வீட்டில் இருந்த ஏணி வகை ஸ்டூலை டிரம்மருகே நிறுத்தி எமர்ஜென்சி விளக்கை வைத்து ஆன் செய்தேன். குழந்தை தலை நிமிர்ந்து வெளிச்சத்தைப் பார்த்தான். அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல் இருந்தது. “அப்பா இப்ப வந்துர்றேன், வீட்டப் பாத்துக்கோ” என்று கன்னத்தைக் கிள்ளக் கையை இறக்கிக் கன்னம் எட்டாமல் கையசைத்துவிட்டுக் கிளம்பினேன். இந்த வர்ணனையின் நீளத்துக்குத் தகுதி இல்லாத சிலநொடி வேலை அது.

நான் விரும்பியபடி முழு அமைதியில் ஒரு சிகரெட் பிடித்தேன். சந்தோசமாக இருந்தது. பொது இடம் என்பதால் புன்னகைக்காமல் விட்டேன். இன்னொன்று புகைக்கலாம் என்று தோன்றியது. ஆனால் குழந்தை தடுத்தது. கிடைத்ததில் திருப்தி அடைவோம் என வீடு திரும்பினேன்.

அப்போதுதான் அது நடந்தது. நான் கதவைத் திறக்கிறேன், டிரம், வாசலை நோக்கிச் சாய்ந்து விழுந்திருக்கிறது, உள்ளே குழந்தை எதுவும் இல்லை! ஆனால் சுவரோரம் கண்ணில் பட்டான். ஒரு பிளக் பாயின்ட்டின் பொத்தானை அழுத்திவிட்டு வெற்றுத் துவாரங்களில் நுழைக்கத் தன் குட்டி விரல்களை மெல்ல நீட்டினான். அந்தப் பதற்றத்திலும் என் மூளை கால்குலேட்டர் வேகத்தில் வேலை செய்தது. ஓடிப் போய்க் குழந்தையை பலமாகத் தள்ளி விட்டேன். அவன் மொசைக் தரையில் வழுக்கி ரொம்ப தூரம் போனான். என் மகனுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது. போவது என் உயிராக இருக்கட்டும் என்று அந்தத் துவாரங்களில் நான் விரல்களை விட்டேன். தூக்கியடித்தது மின்சாரம்.

கண்விழித்தபோது ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன். நர்ஸ்களைப் பார்த்துத் தனியார் மருத்துவமனை என்று கண்டுபிடித்தேன். என்னைத் தாக்கிய மின்சாரம் என் உடலில் இருந்த கார்போஹைட்ரேட்டுகளை எல்லாம் உறிந்துவிட்டிருந்தது போல் பலவீனமாக உணர்ந்தேன். என் உடம்புக்குள் குழாய் மூலமாக சலைன் பாசனமாகிக்கொண்டிருந்தது. ஒரு நர்ஸ் என்னைப் பார்த்துவிட்டு வெளியே போய்த் தகவல் தந்தார். கதவைத் திறந்துகொண்டு ஒரு படை உள்ளே வந்தது. என் மனைவி, அவள் மகன், அவள் பெற்றோர், என் பெற்றோர், நண்பர்கள், பக்கத்துவீடு, எதிர்வீடு, மாடிவீடு, மருத்துவமனைப் பணியாளர்கள்… எல்லோருக்கும் சொல்லியனுப்பும் அளவுக்கு சீரிய’சாக’ இருந்திருக்கிறது போல. எனக்குக் கொஞ்சம் உதறியது.

பின்னாலேயே டாக்டர் வந்தார். அழகிய நர்ஸ் உதவியுடன் ரத்த அழுத்தம் பார்த்தார். “எப்டி இருக்கீங்க?” என்றார்.

நான் உணர்ச்சிகரமாக, “டாக்டர், நான் பிழைச்சிடுவேன்ல? பிழைச்சிடுவேன்னு சொல்லுங்க டாக்டர்!!!” என்றேன்.

“நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆறீங்க. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்” என்று அடுத்த படுக்கைக்கு நகர்ந்தார்.

அவர் போனதும் மனைவி நெருங்கி, “என்ன ஆச்சு? என்ன பண்ணீங்க?” என்றார் கிசுகிசுப்பாக.

அதாவது நான்தான் ஏதோ செய்துவிட்டேனாம். அந்த சுகவீனத்தில்கூட எனக்கு எரிச்சல் வந்தது. எல்லாத் தப்புக்கும் நான்தான் காரணம் என்றால் உலகில் மற்றவனெல்லாம் என்னத்தைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறான்?

“நான் ஒண்ணும் பண்ல. உம் மகன் பிளக் பாயின்ட்டத் தொடப் போனான். நான் அவனக் காப்பாத்துனேன். உனக்கு ஒரு குழந்தை இருக்குன்னா அதுக்கு நான்தான் காரணம்” என்றேன்.

மனைவி முறைத்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை. நானாக இழுத்துப் போட்டுக்கொண்ட இடுக்கண் மாதிரியே பேசினார்.

“ஆஸ்பிடல் பில் எவ்ளோ தெரியுமா?” என்று கேட்டார்.

“சொல்லு, உன் மகனோட உயிருக்கு என்ன விலைன்னு சொல்லு” என்றேன்.

“இருவத்தஞ்சாயிரம்.”

அடப்பாவிகளா என்று இருந்தது எனக்கு. அந்தக் காலத்தில் அது பிரம்மாண்டமான தொகை, அதாவது எங்களுக்கு. ஆனால் ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய்க் குழந்தைக்காகவா இவ்வளவு ரிஸ்க் எடுத்தோம் என்று தோன்றியது. அம்மாவின் இடுப்பிலிருந்து மகன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் என் உள்ளம் கரைந்தது. ஆஸ்பிடல்காரன் ஏமாற்றுகிறான், முப்பதாயிரமாவது இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar