டிஸ்கசன்

in கட்டுரை

ஒரு ஓட்டல் ரூமில் எனக்கும் ஓர் இயக்குநருக்கும் இடையே ஒரு காதல் கதை உருவாகிக்கொண்டிருந்தது.

ஒன்லைனர்: நாயகனும் நாயகியும் தீவிரக் காதலர்கள். ஒருநாள் நாயகன் நாயகியை பிரேக் அப் செய்கிறான். மனமொடியும் நாயகி, அவனை மீண்டும் அடையப் பாடுபடுகிறாள்.

“பிரேக் அப்புக்கு ரீசன் வேணுமே” என்றார் இயக்குநர்.

“ஹீரோவுக்கு ஒரு வியாதிய வெச்சிரலாமா? வியாதியச் சொல்லாம தியாகி மாதிரி காதலியக் கைவிடுறான்…”

“பழசா இருக்கே…” என்று தயங்கினார் இயக்குநர். “சரி, வேற ஆப்ஷன் கிடைக்கற வரைக்கும் இப்போதைக்கி இத வெச்சிக்குவோம். ஆனா தயவுசெஞ்சு கேன்சர்-னு சொல்லிடாதீங்க. புதுசா ஏதாவது பண்ணுவோம்.”

“புதுசுதான். வெஸ்டிப்யுலர் நியூரோநிமி (Vestibular Pneuronymy) அப்படீன்னு படிப்படியாக் கொல்ற ஒரு நோய்” என்றேன்.

“வேற சொல்லுங்களேன். சின்னதா இருக்கு. நீங்க ஒரு லிஸ்ட் போட்டு வந்திருக்கலாம்…”

“Domo Arigato Vestibular Pneuronymy.”

“ஆங், நீங்க இத வச்சி-ல்ல ஓப்பன் பண்ணிருக்கணும். இந்த நோய் என்ன பண்ணும்?”

“நாம நடக்க உதவுற நரம்புகள், தசைகள பாதிச்சி நடக்க முடியாம பண்ணிரும். நிக்கலாம், இல்லன்னா ஊர்ந்துதான் போகணும்.”

“பாம்பு மாதிரியா?”

நான் பலமாகத் தலையசைத்து மறுத்தேன்.

“நீங்க ஓவரா எதிர்பார்க்கறீங்க. பாம்பு மாதிரி நெளிவு-சுளிவுகள் மனுஷ உடம்புக்கு வராது சார். அவ்ளோ நெளிவு-சுளிவுகள் நமக்கு சாத்தியமில்ல. தண்ணிப் பாம்பா இருந்தாலும் சரி, அனகொண்டாவா இருந்தாலும் சரி, அதோட எலும்பு அமைப்பு இருக்கு பாருங்க – தசை மூலக்கூறுகள் – அதனால அப்பிடி நெளிய முடியுது. ஆனா பாம்பால நடக்க முடியாது. அது ஒண்ணு இருக்கு நம்மகிட்ட. ஹீரோ அதிகபட்சம் முதலை மாதிரி ஊர்ந்து போகலாம்.”

“ஹீரோவத் தரைல ஊரச் சொல்றீங்களா? மாத்துங்க சார்.”

“சரி, வியாதியோட பேர் அப்டியே இருக்கட்டும். பிகேவியர மாத்துவோம்.”

“சார், அப்புறம் எவனாவது விமர்சனத்துல நொட்டை சொல்வான், அந்த வியாதிக்கு அப்பிடி வராதுன்னு.”

“கவலையே படாதீங்க. டாக்டருங்ககூட எதுவும் பேச மாட்டாங்க.”

இயக்குநர் சில நொடிகள் வாயைப் பிளந்தார். “உங்களுதா?”

நான் புன்னகைத்து ஆமோதித்தேன்.

“அப்ப புதுசா சொல்லுங்க சார்!” என்றார்.

“நான் சொல்லுவேன். ஆனா நீங்க முன்னாடியே டைட்டானிக்ல வந்துருச்சுன்னு சொல்லக் கூடாது.”

“அட, சொல்லுங்க சார் பாத்துப்போம்!”

“இந்த நோய் வந்தா நோயாளிங்க ஒரு சைக்கிள்ல போய் வழில ஒரு கல்லு மேல இடிச்சு…”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar