பிரதி ஞாயிறு

in கட்டுரை

பக்கத்தில் ஒரு தையல் கடை இருக்கிறது. தாமதமாகக் கொடுத்தாலும் சரி, அதிகமாகக் காசு வாங்கினாலும் சரி, ஒழுங்காகத் தைத்துக் கொடுப்பான். சென்ற ஞாயிற்றுக்கிழமை அவனிடம் பேன்ட் தைக்கக் கொடுத்தேன். வியாழன் வரச் சொன்னான், போனேன், பேன்ட் கிடைக்கவில்லை. கண்டிப்பாக வரும் ஞாயிறு தந்துவிடுவேன் என்றான்.

இன்றைக்கு அவன் கடைக்குப் போனேன். கடைக்காரனும் காஜாவும் இருந்தார்கள். நுழையும்போதே “பிரதி ஞாயிறு” என்ற பலகையைப் பார்த்தேன். “ஞாயிறு”க்குப் பின்பு பலகை உடைந்துவிட்டிருந்தது. இருந்தாலும் ‘சென்டிமென்ட்’டுக்காகவோ என்னவோ எடுக்காமல் வைத்திருந்தார்கள்.

“பேன்ட் ரெடியா?” என்றேன்.

“நல்லாருக்கேன் சார்” என்று கடைக்காரன் எழுந்து வந்து டேப்பை எடுத்து என் இடுப்பை அளவெடுக்கத் தொடங்கினான்.

“இன்னும் தெக்கவே ஆரம்பிக்கலியா?” என்றேன் எரிச்சலுடன். எனக்கு நாளை ஓர் இழவெடுத்த மாற்றார் குடும்ப நிகழ்வுக்குப் போட்டுக்கொள்வதற்கு வேண்டும்.

“அது வேலைக்காவாது சார். ரேட்டு ஏறினே போது. மாமன் மச்சான்லாம் நெலம் வாங்கிட்டான், ஆனா அவுங்க ஸ்டாண்டடு வேற, நம்ம ஸ்டாண்டடு வேற. புரிதா?” என்றான் படு இயல்பாக. தொடர்பில்லாமல் பேசிவிட்டு முத்தாய்ப்பாக ஒரு கேள்வி வேறு.

“நான் பேன்ட்டப் பத்திக் கேட்டா ஏன் சம்மந்தமில்லாம என்னென்னவோ பேசிட்டிருக்கீங்க?” என்றேன் இன்னும் பொரிந்து. ஆனால் என் எரிச்சலை அவன் கவனித்த மாதிரியே தெரியவில்லை. அளவெடுத்து முடித்தான்.

“வாங்கலாம் சார். கைல இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும், அப்புறம் வாய்ங்க்கலாம். ஒரு எடம் இல்லாட்டி இன்னோர் எடம், சரியா? எப்டியும் ரீல் எஸ்டேட் வெல கொறையும்ங்கிறாப்ல” என்றான்.

“ஹலோ!” என்றேன் உச்சக் கடுப்பில்.

“நண்பர்கள்” என்று இளித்தான்.

நான் அவனை உற்றுப் பார்த்தேன். அசாதாரண அறிகுறி எதுவும் இல்லை. தோற்றம் சரியாக இருந்தது. தலைமுடியை நன்றாக வாரியிருந்தான். எனக்கே பொறாமையாக இருந்தது. எங்கே இடிக்கிறது? அதுதான் தெரியவில்லை.

நான் அன்புவிடம் கேட்டேன். “இவருக்கு என்னாச்சு? ஏன் இப்பிடிப் பேசுறாரு?”

நான் அவனிடம் பேசவேயில்லாதது போல அன்பு என் முகத்தையும் முதலாளி முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான், அதாவது நாங்கள் பேசுவதைக் கவனிப்பது போல.

வேறு வழியில்லாமல், “அப்ப நாளைக்கு வரவா?” என்றேன் கடைக்காரனிடம்.

“நல்லாருக்கேன் சார்” என்றான். பேன்ட் ரெடியா என்று கேட்டால் வேலைக்கு ஆகாது என்பான் போல.

அவர்கள் தத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்தது. ஆனால் அதற்கு நான்தானா கிடைத்தேன்?

இதற்கு மேல் இங்கே நிற்பது உதவாது என்று தீர்மானித்துப் படிகளில் இறங்கித் தெருவுக்கு வந்தேன். திரும்பிப் பார்த்தேன். “பிரதி ஞாயிறு” என்ற பலகை காற்றில் ஆட, எனக்கு உடனே புதிர் விடைபட்டது. போன ஞாயிறு நான் என்னென்ன பேசினேனோ அதற்கு அவர்கள் இருவரும் அளித்த பதில்களைத்தான் இன்றைக்கும் அளித்திருக்கிறார்கள். புதிதாக இடுப்பை அளவெடுத்ததும் அப்படித்தான். அதாவது இன்றைக்குப் ‘பிரதி’ ஞாயிறாம். அசல் ஞாயிறு கிடையாதாம். அதுதான் அந்தப் பலகையின் அருமை.

நான் சிரித்துக்கொள்வதா வேண்டாமா என்று குழப்பமாக நடந்துகொண்டிருக்கும்போது பின்னால் தபதப என்று சத்தம் கேட்டது. அன்பு ஓடி வந்தான். நான் ஓட்டமெடுக்க ஆரம்பித்தேன். போன ஞாயிறு இப்படித்தான் பின்னால் ஓடி வந்து ஐநூறு ரூபாய் கடன் கேட்டான். போன ஞாயிறும் நான் தரவில்லை. இதே மாதிரி ஓடிப்போனேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar