அசிங்கத்தை மறு

in கட்டுரை

சென்னைக்கே உரிய அசிங்கத்தை உடலெங்கும் பூசிக்கொண்ட எனது தெருவில் நடந்துகொண்டிருந்தேன். சென்னையிலிருந்து ஓடியே வெளியேறிவிட வேண்டும் என்ற உந்துதல் மீண்டும் ஏற்பட்டது. அப்போது ‘அசிங்கத்தை மறு’ எனும்படி எங்கிருந்தோ ஓர் இனிய இசை கேட்டது. வலது தொடை மயிர் சிலிர்த்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன், ஜன்னல்களை, மாடிகளை, பொதுக்கூட்ட மேடை ஒலிபெருக்கிகளை. இசையின் ஆதாரத்தைக் கண்டறிய முடியவில்லை.

நான் கேட்டுக்கொண்டே நடந்தேன். எனக்கேயானது போல் அந்த இசையும் என்னைப் பின்தொடர்ந்தது. ஓரமாக நிற்போம் என ஒரு மருங்கில் நானும் இசையும் ஒதுங்கினோம். ஆனால் இசை நின்றுவிட்டது. வெறுமையில் கழிந்தன விநாடிகள். காலத்தால் அழியாத அழகு நிலைக்காது என்று நினைத்துக்கொண்டேன். உதட்டில் ஒரு நமட்டுப் புன்னகையை உணர்ந்தேன். ஒரு காதலைப் போல் ஆகிவிட்டது.

நான் நடையைத் தொடர்ந்தேன். அதற்கெனவே காத்திருந்தது போல் மீண்டும் அதே இசை இனிக்கத் தொடங்கிற்று. வீடு திரும்பும் வழியெங்கும் நிற்பதுவே (இசை) நடப்பதுவே (நான்) என்று விரிந்தது பொழுது. என் சிலிர்ப்பு தனது எல்லைகளைக் கடந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தது. எங்கள் ஏரியாவில் இத்தனை பேர் இருக்க என்னை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தது இந்த இசை? என் காதுக்கு என்ன சொல்ல வந்தது இந்த இசை? இனிமைக்குப் பொருளுண்டா? இனிமைக்குப் பொருள் தேவையா? எவ்வளவு? கேள்விகள் மலிந்தன என்னில்.

வீடு திரும்பியதும் மனைவி விளக்கினார்: “எங்க போய்த் தொலஞ்சீங்க? எத்தன வாட்டி ஃபோன் பண்றது உங்களுக்கு? அவுசோனர் வந்து வாடகை கேக்குறாரு. நேத்தே குடுத்துட்டு வரேன்னு சொன்னீங்க, போவலியா?”

நானறியாப் பொழுதுகளில் ஏதோவொரு அசட்டைக் கணத்தினூடே கேம் விளையாடுகையில் எனது ரிங்டோனை மாற்றியிருக்கிறான் மகன். எப்படிப் பார்த்தாலும் ஒன்று உறுதிப்பட்டது. இசை என்னுள்ளிருந்துதான் வந்திருக்கிறது.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar