பொம்மையன்

in கவிதை

பொய் சொல்லக் கற்றுவிட்டான்
சூதுவாது இப்போது தெரிகிறது
ஸ்பைடர்மேன் வந்த கனவைச்
சொல்லும்போது
என் பெற்ற ஆர்வத்தைக் கவனித்துக்
கனவில் வந்திருக்க முடியாத
உபகதைகள், கதாபாத்திரங்கள்
சேர்த்துக் கதையை வளர்ப்பான்
என் நெஞ்சுயரம் வளர்ந்த பிறகும்
ஊட்டிவிடச் சொல்லி அடம்பிடிப்பான்
எண்ணற்ற புதிய சொற்களைப்
பொருளறிந்து பயன்படுத்துவான்
ஆனால் மழலை முழுமையாக விடவில்லை
தலைகீழ் இந்திக்காரன் போல்
‘ட’வை ‘ர’ என உச்சரிப்பான்
சிறுவர்களுக்கான அம்பேத்கர் புத்தகம்
படிக்கையில் கேள்விகள் கேட்பான்
(விக்கிபீடியாவில் பார் என்பேன்)
பொம்மைகளுடன் பேசி விளையாடுவான்
அவனே பொம்மை போல் இருக்கிறான்
அவனுடைய அளவிலாத
சூட்டிகையைப் பார்க்கும்போது
இதயம் வெடித்துவிடும் போல் இருக்கிறது
கண்கள்கூடக் கொஞ்சம் ஈரமாகின்றன
ரொம்பக் கொஞ்சினால் செலவு வைப்பான்
என் வயதில் இவன்
தன் குழந்தைக்கு அம்பேத்கர் புத்தகம்
வாங்கித் தர மாட்டான்
யானை விலைக்கு லெகோ பிளாக்ஸ்
வாங்கிக் கொடுப்பான்
வேறொரு வர்க்கத்தில் ஒருவனாகிவிடுவான்
அப்பாவும் அம்பேத்கரும்
எச்சரிக்கைகளும் அறிவுரைகளும்
மறந்துவிடும்
இந்த அபூர்வக் குழந்தையை
இழக்க நான் தயாரில்லை
கரும்பு பிழியும் எந்திரத்தில் போல்
அவன் கடைவாய்ப் பற்களிடையே
குச்சி சிப்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாக
நுழைத்துத் தன்னை மறந்து தின்பதை
வேடிக்கை பார்க்கும்போதே
உயிர் பிரிந்துவிட வேண்டும்
(இன்சூரன்ஸ் இருக்கிறது).

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar