தகவல் தொடர்பு

in கட்டுரை

“கிடார் மாஸ்டருக்கு ஃபோன் போடுங்க” என்றார் நெருங்கிய உறவினர்.

“எதுக்கு?”

“என்னா எதுக்கு? கணேசு மூணு மாசம் வர மாட்டான்னு சொல்லச் சொன்னேன்ல?”

“சொல்றேன்.”

“மொட்டையா இனிமே அவன் வர மாட்டான்னு சொல்லக் கூடாது. நாம அலட்சியமா நடத்துற மாரி ஃபீல் பண்ணுவாரு. கணேசுக்கு நிறைய தடவ கைல அடி பட்டுருச்சு, அதான் ரெகுலரா வர முடீல, ஸ்கூல்ல நெறைய ஹோம்வொர்க் குடுக்குறாங்க, நெறைய எழுத வேண்டிருக்கு, டென்னிஸ்ல வேற அவனுக்கு அடுத்த மாசம் எக்ஸாம் வருது, கைல அடிபட்டதால நெறைய க்ளாஸ் போகாம இருந்துட்டான், இந்தக் கைய வெச்சுக்கிட்டுதான் அவன் டென்னிசுக்கும் போயாகணும், டென்னிஸ் எக்ஸாமுக்கு ரெண்டு மாசம் முன்னாடியே மூவாயிரம் பணம் கட்டிட்டோம், அதுனால எக்ஸாம விட முடியாது, அவன் மூணு மாசம் கழிச்சி மார்ச்ல திரும்பி வந்து சேருவான்னு சொல்லுங்க.”

“அவரோட ஈமெயில் ஐடி தெரியுமா?”

“ஈமெயில் எதுக்கு? ஃபோன் பண்ணுங்க!”

“இவ்ளவும் ஞாபகம் வச்சிக்கிட்டு சொல்லணுமே!”

“எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சதுதானே. புதுசா கண்டுபுடிச்சா சொல்லப்போறீங்க!”

“ஒவ்வொண்ணா யோசிச்சு சொல்லணும்…”

“இன்னிக்குள்ள ஃபோன் பண்ணிடுங்க.”

“எனக்கு அவ்ளோ தகவலையும் ஒண்ணு விடாம சொல்ல முடியும்னு தோணல. இந்த வாட்டி நீ பேசிடேன்.”

“ஐயோ, உங்களோட இதே ரோதன. பையனுக்குக் கைல அடி பட்டிருக்கு, கிடார் வாசிக்க முடியாது, டென்னிஸ் எக்ஸாமுக்குப் பணம் கட்டிட்டதால இந்தக் கைய வெச்சுக்கிட்டு அவன் எக்ஸாமுக்கு வேற ப்ரிப்பேர் பண்ணணும், நெறைய்ய ஹோம்வொர்க்கும் பண்ணணும், டாக்டரப் பாத்து மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டு வரான், ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு, வெரல்லதான் அடிபட்டிருக்கு, அதுனால கிடார் வாசிக்க முடியாது, அதுனால மூணு மாசம் கேப் விட்டு திரும்பி வருவான். இதச் சொல்றதுல என்ன செரமம்?”

சந்தடி சாக்கில் புதிய தகவல்கள் பல சேர்ந்துகொண்டதைக் கவனித்தேன். இன்னொரு முறை மறுத்தால் கல்வித் துறையின் குறைபாடுகள் பற்றி பாயிண்ட் பாயிண்ட்டாக விளக்க வேண்டியிருக்கும். சட்டினிக்குத் தேங்காய் உடைத்துக்கொடுப்பது போல் ஆண்மைப் பலமும் அசகாய வீரமும் தேவைப்படும் வேலை அல்ல இது. யார் வேண்டுமானாலும் செய்யலாம், அதுதான் பிரச்சினை (மனைவியே வேண்டுதலுக்காக 108 தேங்காய்களைத் தலையில் உடைத்துக்கொள்ளும் திறனுள்ளவர்; செய்ய மனசுதான் இல்லை).

“சரி, பண்றேன்.”

மனைவி இடுப்பில் கைவைத்துக்கொண்டார், ‘நீ பேசு, நான் பார்க்கிறேன்’ என்பது போல.

“நீ போ, நான் ஒரு அஞ்சு நிமிசத்துல பேசுறேன்.”

மனைவி பதில் பேசாமல் வெளியேறினார். கிடார் மாஸ்டருடன் ஓர் உரையாடலை மனதிற்குள் நிகழ்த்திப் பார்த்தேன். என் மரியாதையை நிரந்தரமாக இழந்துவிடுவேன் என்று தெளிவானது. மனைவி அருகில் எங்கேயும் இல்லை என்று காதால் உன்னித்து உறுதிப்படுத்திக்கொண்ட பின் கிடார் மாஸ்டரை அழைத்தேன்.

“ஹலோ, நான் கணேஸ் அப்பா பேசுறேன்.”

“சொல்லுங்க சார்.”

“தயவுசெஞ்சு கணேசை மறந்துருங்க.”

“புரில. மறக்கணுமா?”

“ஆமாம் ப்ளீஸ்! இனிமே அவன் வாழ்க்கைல குறுக்கிடாதீங்க!”

சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன். ஒரு வேலை முடிந்த நிம்மதி. ஆனால் ஒரு தகவல் விட்டுப்போனது. அவரை மீண்டும் அழைத்தேன்.

“மார்ச் வரைக்கும்” என்று சொல்லிவிட்டுக் கத்தரித்தேன்.

எனக்கு இப்படித்தான் வரும். கண்டவனையும் கூப்பிட்டு அரசியல் சாசனத்தை ஒப்பிக்க வேறு ஆளைப் பார். சரிதானே?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar