சமீபத்தில் சாகாதவர்

in கட்டுரை

கடற்கரைச் சாலையில் மாலை நடை சென்றுகொண்டிருந்தபோது உரசாத குறையாக ஒரு பென்ஸ் கார் கூடவே வந்தது. எந்த நொடியும் கதவு திறந்து உள்ளே இழுத்துப் போட்டுக்கொள்ளப்பட்டு ஓட்டாண்டி என அம்பலமாகித் தெருவில் உருட்டி விடப்பட்டு ரத்தக் காயம் ஆகும் சாத்தியம் இருந்ததால் கொஞ்சம் விலகியே நடந்தேன்.

“இந்தாப்பா எழுத்தாளரே, வண்டீல ஏறு” என்று காருக்குள்ளிருந்து குரல் கேட்டது. பழகிய குரல்.

குனிந்து பார்த்தேன். பின்னிருக்கையில் பள்ளி வகுப்புத் தோழன் பூபாலன்! சென்னையில்தான் இருக்கிறான் என்றும் அச்சகம் வைத்திருக்கிறான் என்றும் பழைய நண்பர்களிடம் கேள்விப்பட்டிருக்கிறேன். பென்சையும் டிரைவரையும் பார்த்தால் சொந்த உபயோகத்திற்குப் பணம் அச்சடிக்கிறானோ என்று விளையாட்டாகத் தோன்றியது. காரில் ஏறினேன். குசலம் விசாரித்துக்கொண்டோம்.

“பூபா, என்ன பென்ஸ் காரு, டீஷர்ட்டு, என்ன விசயம்? எல்லாம் ப்ரெஸ்தானா” என்றேன்.

“ப்ரெஸ் இல்ல. பதிப்பகம். பாரதி பிரசுரம். பாத்ததில்லையா?”

“இல்லையே, பரவால்லையா?”

“அதெல்லாம் ஓக்கே. டசன் கணக்குல டைட்டில்ஸ் போடுறேன், பாரதியார் பத்தி தினசரிகள்ல கட்டுரைகள், தொடர்கள் எழுதுறேன். தெரியாதா?”

பூபாலன் அப்போதே தமிழில் கெட்டி. இருந்தாலும் எழுதுகிறேன் பேர்வழி என இறங்கிவிட்டது ஆச்சரியம்தான்.

“இல்லடா, என்ன பேர்ல எழுதுறே?”

“மெ.க.பூ.பா.” என்றான்.

“பொண்டாட்டி பேர்லயா?”

“இல்லடா, மெய்யலூர் கண்ணுச்சாமி பூபால பாரதி. கெஜட்ல பூபால பாரதின்னு பேர மாத்திட்டேன்.”

“என்ன ஒரே பாரதியா இருக்கு? அவரும் ஒண்ணும் சமீபத்துல செத்துப்போலியே? :-)”

“டேய்! அவரு நம்ம பிசினஸ் மாடல். அவர் படைப்புகள வெளியிடுறதுதான் பதிப்பகத்தோட ஸ்பெஷாலிட்டி.”

சற்றுப் புரிந்தது. ஆனால் அவனால் பென்ஸ் வாங்க முடிகிற அளவுக்குப் புரியவில்லை.

“பாரதியார் கவிதைகள் எல்லாரும் போடுறானே” என்றேன்.

“பாரதியார் கவிதைகள், பாரதியார் பாடல்கள்னு ரெண்டு இருக்கு. ரெண்டும் வேற வேற அட்டை. அப்புறம் ஆன்மீகப் பாடல்கள், சமூகப் பாடல்கள், பாரதியார் கட்டுரைகள், பாரதியார் கவிதைகள் முழுத் தொகுப்பு பாகம் 1, பாரதியார் கவிதைகள் முழுத் தொகுப்பு பாகம் 2, பாரதியார் கவிதைகள் முழுத் தொகுப்பு பாகம் 3, பாரதியார் பாடல்கள் முழுத் தொகுப்பு பாகம் 1…”

“டேய், இது ஏதோ டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஃப்ராடு மாதிரி இருக்குடா!” என்று ப(வி)யந்தேன்.

“சொல்றேன் கேள்டா. அப்புறம் பாரதியார் பத்தி மாவட்ட அளவுல எல்லா காலேஜுலயும் கட்டுரைப் போட்டி நடத்தி நல்லதா ஒரு இருவதை தொகுப்பா போடுறது. நானும் ஏதாச்சும் எழுதிட்டிருப்பேன். அந்தாள் கடல் மாதிரி எழுதி வெச்சிருக்கான். சும்மா நாலு வரிய எடுத்துக்கிட்டு ஒரு கட்டுரை எழுதிரலாம். லைப்ரரி ஆர்டர் வருது, எடுப்பாத் தெரியிற மாதிரி வைன்னு எல்லா கடைலயும் சொல்லிருவேன். அதுல ஒரு டெக்னிக் சொல்லவா?”

“சொல்லு.”

“அதுல ‘தேடிச் சோறு தெனம் திம்பேன்’னு ஒரு பாட்டு வருது பாரு, அத மட்டும் பக்கத்துக்கு நாலு வரி பெரிய ஃபான்ட் சைஸ்ல சின்ன புக்கா போட்டேன். பிச்சிக்கிச்சு. அப்புறம் அதுவே போஸ்டர். அதுவும் சூப்பராப் போச்சு.”

“நாட்ல இவ்ளோ லட்சியத் தீவிரவாதிங்க இருப்பாங்கன்னு எவன் கண்டான்” என்றேன். பிரமிப்பாக இருந்தது. உலகில் என்னைத் தவிர எல்லோரும் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்பதுறுதியாச்சு.

“நல்லாருக்கே. நான்கூட இந்த மாதிரி ஏதாவது ஸ்டாட் பண்லாம் போல” என்றேன்.

“டூ லேட் புரோ. நான் பேடன்ட் பண்ணிட்டேன்” என்றான் பூபாலன்.

நான் சிரித்துவிட்டேன். அவனும் சிரித்தான். பிறகு சிரிப்பை நிறுத்தி, “நெஜமாடா. பேடன்ட் இருக்கு. நம்ம லைனை யாரும் க்ராஸ் பண்ண முடியாது. பார்ட்னர் ஆவுறியா?” என்றான்.

நான் மறுத்தேன். “எனக்கு எழுதத்தாம்பா தெரியும்.” பேச்சை மாற்ற, “உன் புஸ்தகம் ஏதாவது வச்சிருக்கியா? இருந்தா காட்டு?” என்றேன்.

பூபாலன் அருகில் கிடந்த ஒரு ஜோல்னாப் பையிலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான் – ‘பாரதியார் கவிதைகள்’, ‘பாரதியார் பாடல்கள்’, ‘பாரதி, என் பாரதி!’. மூன்றாவதை எடுத்துப் பக்கம் 77ஐத் திறந்து படிக்கத் தொடங்கினேன் (என் ராசி எண் 7). முதல் வரி இப்படி இருந்தது:

ஜன்னல் கம்பிகள் வழியே சத்யனைப் பார்த்துவிட்ட கண்ணம்மா, வீடே அதிர அலறினாள். “மாமா, மாமா, பாருங்கோ, அவன் வந்துட்டான் பாருங்கோ…”

அட்டையைப் பார்த்தேன். ஆசிரியர் பெயர் சி.சு. செல்வம்மா. அந்தப் பெயருக்குள் பலர் இருந்தார்கள். சி.சு. செல்லப்பா, செல்லம்மா, பாரதியார்… செல்வம் யார் என்று தெரியவில்லை. பூபாலனின் மகனாக இருக்கலாம். ஒருவித NOKlA புத்தகம் அது.

“இதுக்குப் பேரு என்ன?” என்றேன் அதைக் காட்டி.

“அது பாஞ்சாலி புக்ஸ். நம்ம இம்பிரிண்ட். வா, ஒரு டீ சாப்பிடுவோம்.”

நான் வாழ்க்கையில் சாப்பிட்டதிலேயே ஆகக் கசப்பான தேநீர் அது. காசை அவன் கொடுத்ததுதான் ஆறுதல் – என்று முத்தாய்ப்பாக முடிக்க விரும்பினேன். ஆனால் பூபாலன் ஜப்பான் முன்னேறிய கதையை இன்னும் நிறுத்தவில்லை.

“நானும் என்னென்னவோ பண்ணிப்பாத்து எல்லா வியாபாரமும் நொடிச்சுப் போயி அடுத்து என்னடா பண்றதுன்னு மூளையக் கசக்கிட்டிருந்தண்டா. அப்பதான் கனிமரால பாத்தேன் ‘மீள்பாரதி’ன்னு உன்னோட ஒரு புக்கு…”

கையில் மட்டும் சிவசக்தி கிடைத்திருந்தால் “சொல்லடி சிவசக்தி” என்று காலரைப் பிடித்து உலுக்கியிருப்பேன்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar