உப்பு மாதிரி

in கட்டுரை

என் அப்பாவின் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது பிள்ளைப் பிராயத் தோழர். வீட்டு விசேசங்கள், சாவுகள் போன்றவற்றுக்குத் தவறாமல் வருகை தருவார். அவர் வராத நிகழ்வு என் திருமணம் மட்டும்தான். மனைவி பிரசவம் காரணம். அவர் வராததில் என் தந்தைக்குக் கோபம். “இவனா புள்ளத்தாச்சி?” என்று அம்மாவிடம் அப்பா எரிச்சல் பட்டது நினைவிருக்கிறது.

அப்பாவின் நண்பர் மௌனக்காரர். ஒருவேளை இந்தாளுக்கு இன்னும் பேச்சு வரவில்லையோ என்று சமயத்தில் தோன்றும். ஆனால் அது கிடையாது. உண்மையில் அவருக்குத் திருமணமாகி வெற்றிகரமான மகன், மகள்கள் இருந்தார்கள். இதெல்லாம் பேசாமல் நடக்காது. உப்பு மாதிரிப் பேசுவார் என்று நினைக்கிறேன். அதாவது தேவைக்கேற்ப.

அவர் குரலை நான் முதலில் கேட்டது எனது வடபழனிப் பகுதியில் அவர் குடியேறியபோது. அடிக்கடி கடைகளில், தெருக்களில் கண்ணில் படுவார். இப்படிப் பார்க்கும்போதெல்லாம் நான் அவரைப் புன்னகைப்பேன், அவரும் புன்னகைத்து “அப்பா நல்லார்க்காரா?” என்பார். ஒருமுறைகூட என்னை நலம் விசாரிக்க மாட்டார், வேறு வார்த்தை பேச மாட்டார். “எங்க வேல?” என்று நான்தான் எடுத்துக்கொடுப்பேன். “ரிட்டையர்டு” என்பார். “ஆமா” என்பேன். நானும் ரிட்டையர்டுதானே.

சமீபத்தில் ஒரு பயணமாகக் கோவைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எட்டு மணிநேரப் பகற்பயணம். எதிர் இருக்கையில் இவர்! எங்கே போகிறாய், கோவையில் யார் இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி அவர் கேட்கவில்லை. நாம் கேட்டால் அவர் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரியாததால் நானும் கேட்கவில்லை.

அவர் பகலில் தூங்கும் ரகம் இல்லை போல. நான் கௌரவத்திற்காக விழித்திருந்தேன்.  எங்கள் பார்வை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைத்து “அப்பா நல்லார்க்காரா?” என்பார். அந்தப் புன்னகை எனக்குத் தொற்றிக்கொண்டு நானும் “நல்லார்க்கார்” என்பேன்.

கழிப்பறைக்குச் செல்வதாக இருந்தால் யாருக்காவது ஐம்பது ரூபாய் கொடுத்து என் இருக்கையில் உட்காரச் சொல்லி, ‘எதிரில் இருப்பவர் உங்களைப் பார்த்தால் அப்பா நன்றாக இருப்பதாகச் சொல்லுங்கள்’ என்று ஆள் வைத்துவிட்டுத்தான் போவேன். சிலர் உதவ மறுத்தார்கள். சிலர் “சேஞ்சா குடுங்க சார்” என்றார்கள். பலர் தங்கள் ரயில் நிலையம் வந்ததும் இறங்கினர். ஆனால் அவர்கள் இந்த விசயத்தில் தொடர்பு இல்லாதவர்கள்.

கோவை சந்திப்பு வரும் வரை எட்டு மணிநேரம் இப்படியே போனது. அப்பாவின் நண்பர் கடைசியாக ஒருமுறை அப்பாவின் நலம் விசாரித்த பின்பு பிரிந்தோம்.

உறவினர் வீட்டில் அம்மாவும் அப்பாவும் எனக்காகக் காத்திருந்தார்கள். நான் ரயிலில் உங்கள் நண்பரைச் சந்தித்தேன் என்று அப்பாவிடம் சொன்னேன். “அப்படியா? நல்லார்க்கானா?” என்றார். நான் மயங்கி விழுந்தேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar