பா.ஜ.குறிப்பு

in கட்டுரை

உளவுத் துறை நண்பரிடம் கிடைத்த தகவல்: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் இடையே செல்வாக்கு ஏற்படுத்திக்கொள்ள நாடாளும் கட்சியான பா.ஜ.க., ஈரோட்டில் பெரியாருக்குக் கோவில் கட்டத் திட்டமிட்டுள்ளது. மா. வெங்கடேசன் என்பவர் அவசர அவசரமாகத் தல புராணம் எழுத, அரவிந்தன் நீலகண்டன், எச். ராஜா என்பவர்கள் அவருக்கு வரலாற்று ஆராய்ச்சியில் உதவுகிறார்கள்.

பெரியார் விக்கிரகத்தைத் தனியாகச் செய்வதா மணியம்மை சமேதராகச் செய்வதா என்பதும் பெரியார் சைவக் கடவுளா வைணவக் கடவுளா என்பதும் இன்னும் விவாதிக்கப்பட்டுவருகின்றன. கும்பாபிஷேகம் டிசம்பர் 6 அன்று நடைபெறுமாம். கிடாவெட்டு இருப்பதால் புரோகிதர்கள் வர மறுத்துள்ளனர். எனவே தற்காலிகமாகப் பூசாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்தி நடிகர் தருண் விஜய்க்கு முதல் மரியாதை செய்யப்படும் என்று கேள்வி.

கோவில் கட்டுவதைத் தடுக்க பா.ஜ.க.வின் விளிம்பு அமைப்பான இந்து புறம்போக்கு சேனா தையல் இயந்திரங்களுடன் தயாராக இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன். பா.ஜ.க.ர்கள் இது பற்றிக் கவலைப்படாமைக்குக் காரணம், கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு பா.ஜ.க.வின் இந்து நவரச சேனாவிடம் வழங்கப்பட்டுள்ளதாம். கிடாவெட்டு ஆட்டை வைத்துச் செய்கிறார்களா மாட்டை வைத்தா என்று கண்காணிக்கும் பொறுப்பும் நவரச சேனாவிடம் தரப்பட்டுள்ளது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar