தீபாவளி: தோற்றமும் வளர்ச்சியும்

in கட்டுரை

(ஆனந்த விகடனில் நவம்பர் 2012இல் வெளிவந்தது)

நமக்கு தீபாவளி தெரியும். கொண்டாடுகிறோம். அதன் வரலாறு தெரியுமா? ஆதி முதல் இன்று வரை தீபாவளியின் சுருக்கமான வரலாறை அடுத்த வாக்கியம் முதல் காணலாம்.

கி.மு. 8000ஆம் நூற்றாண்டு – மனிதன் நெருப்பைக் கண்டுபிடிக்கிறான்.

கி.மு. 80ஆம் நூற்றாண்டு – இந்திய ராஜகுமாரனாகிய ராமன், இலங்கை மன்னன் ராவணனைத் தோற்கடித்துக் கொல்கிறான். இது இந்திய இதிகாச வரலாற்றின் முதல் போர்க் குற்றமாகிப் பின்னாளில் தீபாவளி கொண்டாடப்பட வழிவகுக்கிறது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டு – ராமனின் வெற்றி பண்டிகையாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று துறவியான புனித தீபாவளியார் அன்றைய வடநாட்டு மன்னராகிய முதலாம் சந்திரகுப்தரிடம் கோரிக்கை விடுக்கிறார். சந்திரகுப்தர் மறுத்து அவரைக் கழுவேற்றுகிறார். தீபாவளியாரின் நினைவில் ‘தீபாவளி’ என்ற பெயரிலேயே பண்டிகை நாளை சந்திரகுப்தர் அறிவிக்கிறார். பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும் என அனைத்துலக இந்திய மன்னர்கள் சங்கம் முடிவு செய்கிறது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டு – அகல்விளக்கு கண்டுபிடிக்கப்படுகிறது. களிமண் சுரங்கங்கள் தோண்டப்பட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் அகல்விளக்குகள் இடம்பெறுகின்றன.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு – சீனர்கள் பட்டாசு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவே, இந்திய மன்னர்களின் காத்திருப்பு முடிகிறது. பட்டாசுகளுக்கான முதல் ஆர்டர் அனுப்பப்படுகிறது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டு – சீனா ராக்கெட்களைக் கண்டுபிடிக்கிறது. மூன்றாம் சித்திரகுப்தர் இரண்டு ராக்கெட்களுக்கு ஆரியபட்டா, பாஸ்கரா எனப் பெயரிட்டு மகிழ்கிறார்.

கி.பி. 7-16ஆம் நூற்றாண்டு – பல நூற்றாண்டுகள் கழிகின்றன.

கி.பி. 17ஆம் நூற்றாண்டு – மராட்டியப் பேரரசு தமிழ்நாட்டில் தீபாவளியை அறிமுகப்படுத்துகிறது.

1921 – மைசூர் அரண்மனையில் நடந்த ஒரு சமையலறை விபத்தில் மைசூர்பாகு கண்டுபிடிக்கப்படுகிறது.

1945 – அமெரிக்காவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘ஆட்டம்பாம்‘ கண்டுபிடிக்கிறார். சிங்கம் மார்க் பட்டாசுகள் உடனடியாக அதற்கு உரிமம் பெற்று இறக்குமதி செய்கிறது. தமிழகத்தில் அது ‘ஆட்டோபாம்’ என்ற பெயரில் பிரபலமாகிறது.

1954 – தீபாவளி போனஸை உயர்த்தக் கோரி கல்கத்தாவில் வேலைநிறுத்தம்.

1966 – சோவியத் ரஷ்யா ‘சோயஸ்’ ராக்கெட்களை உருவாக்குகிறது. அன்றைய இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, ரஷ்யாவுடனான தனது நட்புறவைப் பயன்படுத்தி ஸ்டாண்டர்ட் ஃபயர்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு ராக்கெட் உரிமம் பெற்றுத் தருகிறது.

1967 – இந்திய அரசு தீபாவளிக்கான பாதுகாப்புக் குறிப்புகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுகிறது. இதனால் வடநாட்டில் தீபாவளி தீவிபத்துகள் குறைகின்றன.

1970 – அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் அமலுக்கு வருகிறது. ஆட்டம்பாம்களை அழிக்கும்படி இந்தியாவை ஐ.நா. கேட்டுக்கொள்கிறது. இந்தியா தீபாவளியைக் காரணம் காட்டி மறுக்கிறது.

1974 – சொந்தமாக ஆட்டம்பாம் தயாரிக்கும் இந்திய முயற்சி தோல்வியடைகிறது. யுரேனியம், புளூட்டோனியம் மற்றும் கனநீருக்கு பதிலாக முறையே பயத்தமாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்க்கப்பட்டு பயத்தலாடு உருவாக்கப்படுகிறது. பயத்தலாடின் சிற்பி என்று போற்றப்படும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா பத்ம விபூஷண் விருது பெறுகிறார்.

1980கள் – வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி நாடெங்கும் பரவுகிறது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. தீபாவளி பற்றிய திரைப்படப் பாடல்களை தூர்தர்ஷன் ஆண்டுதோறும் தொகுத்து ஒளிபரப்புகிறது. நடிகர்கள் தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள்.

1990கள் – மும்பையிலிருந்து வந்த நடிகைகள் (‘மும்பை இறக்குமதிகள்’) தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள். தாராளமயமாக்கத்தை அடுத்து புடவை, நகைக் கடைகள் புற்றீசலாகக் கிளம்புகின்றன.

1996 – நான் தலை தீபாவளி கொண்டாடுகிறேன். மாமனார் எனக்கு மோதிரம் வாங்கித் தருகிறார். பக்கத்து வீட்டில் ‘வெப்பன்ஸ் கிரேடு ரசகுல்லா’ உருவாக்கப்படுகிறது.

1998 – இந்தியா இரண்டாம் முறையாகப் பரிசோதனை செய்து வெற்றிகரமாக சொந்த ஆட்டம்பாம்களைத் தயாரிக்கிறது. அவற்றை அழிக்குமாறு ஐ.நா. மீண்டும் வலியுறுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்த முடியாது என்று பா.ஜ.க. அரசு ஆட்சேபிக்கிறது.

2000கள் – மும்பை நடிகைகள் தொடர்ந்து தீபாவளி கொண்டாடுகிறார்கள். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளால் பட்டாசு விற்பனை குறைகிறது. பட்டாசு வெடிக்க நேரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. மென்பொருள் துறை வளர்ச்சியால் மேலும் அதிக இந்தியர்கள் வெளிநாடுகளில் தீபாவளி அனுஷ்டிக்கிறார்கள்.

2008 ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் கவிதைகளால் தீபாவளி வாழ்த்து சொல்லும் வழக்கம் தொடங்குகிறது. உள்ளூர் நடிகைகள் தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள்.

2010 – தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள்.

2011 – தீபாவளி வாழ்த்துகளையடுத்து முதல்முறையாக ஃபேஸ்புக் நிறுவன பங்கு விலை சரிகிறது. லட்சுமி வெடியைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம். பாம்பு மாத்திரையைத் தடைசெய்யக் கோரி புளூ கிராஸ் ஆர்ப்பாட்டம்.

2012 – உலகம் அழிவதற்கு முன்பு தனது கடைசி தீபாவளியைக் கொண்டாடுகிறது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar