ஆர்டரின்பேரில்

in கட்டுரை

லபக்குதாசிடம் என் புதுச் சிறுகதையின் பிரின்ட் அவுட்டைக் கொடுத்தேன். வழக்கமான அலட்சியத்துடன் படிக்கத் தொடங்கிய லபக்குதாசின் முகத்தில் கவலை ரேகைகள் படியத் தொடங்கின. கதை ஏழு பக்கம்.

படித்துவிட்டுத் திருப்பித் தந்தார் லபக்குதாஸ்.

“ஒரு மா…திரியா இருக்கு” என்றார்.

“ஆமா,” நான் ஒப்புக்கொண்டேன்.

“உங்க நடையில இல்ல. இது ஒரு மாதிரி நல்லா இருக்கு.” அவர் தொனியில் அருவருப்பு, பொறாமை, பயம், வெறுப்பு அனைத்தும் கலந்திருந்தன.

“வெளிய குடுத்துப் பண்ணது. என் கதையெல்லாம் நல்லா ஸ்டடி பண்ணிட்டு எழுதுன்னு சொன்னேன்” என்றேன்.

“ஓ. புது ஆளா?”

“ஆமா.”

“எவ்ளோ?”

“எண்ணூர்ருவா.” ஒரு கதைக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். எனக்கு லாபம் இருநூறு ரூபாய்.

“நல்ல ரேட்டுதான். ஆனா இது உங்க நடையில இல்ல. மொத பாராவுலயே தெரியிது. ஃப்ரீலான்சருங்கள நம்பவே நம்பாதீங்க. இப்பிடித்தான் சொதப்பிருவாங்க.”

“வழக்கமா ஐநூறு, அறநூறுக்கு எழுதிக் குடுக்குறவன்லாம் பிசியாயிட்டான். ஒருத்தனுக்குப் பொண்டாட்டி வளகாப்பு, ஒருத்தன் ஆஃப் யர்லி எக்ஸாமுக்குப் படிக்கறான், இன்னொருத்தன் ஆஸ்பத்திரில அடிபட்டுக் கெடக்கறான், எமர்ஜன்சின்னு சொல்லி பாக்கெட்ல இருவது ருவா வெச்சாகூட ஐ.சி.யூ.க்குள்ள விடமாட்றாங்க.”

லபக்குதாஸ் காதில் வாங்காதவராய்ச் சில நொடிகள் மௌனித்தார்.

“லாபம் கொறஞ்சாலும் குவாலிட்டி இன்கிரீஸ் ஆகுது சரி. ஆனா கதை நல்லா இருக்குற மாதிரி இருக்கே. ஒருவேளை அது நெஜமாவே நல்லா இருந்துட்டா?”

கவலை ரேகைகளுக்கு இது என் முறை. லபக்குதாஸ் என் உணர்ச்சிகளைப் புரட்டியெடுத்துக்கொண்டிருந்தார். என்னால் அதைத் தடுக்க முடியவில்லை.

“திருத்தி எழுதணும். எங்க நேரம் இருக்கு?” என்றேன்.

“நீங்க நிறைய சினிமா பாக்குறீங்க. அதைக் குறைங்க, நேரம் கிடைக்கும். இதென்ன ஸ்பூனால தோசை சாப்பிடுற மாதிரி அடுத்தவன் கிட்ட எழுதக் குடுக்குற பழக்கம்?”

நான் வெறுமனே கைகளை விரித்தேன்.

“புதுசா, சொந்தமா ஒரு கதை எழுதுங்க. என்னைக்கு அனுப்பணும்?”

“நாளன்னிக்குதான். டயம் இருக்கு.”

“அப்பறம் என்ன? நாவலே எழுதிருவீங்களே.”

“நாவல்களே” என்று திருத்தினேன். “கைல அரிசிய வெச்சிக்கிட்டு நொய்க்கு அலையணுமான்னு பாக்குறேன்.”

“அதோட பின்விளைவுகளப் பத்தி யோஸ்ச்சிப் பாருங்க. கத புரீலன்னா மக்கள் கொதிச்சிப் போயிருவாங்க. அவுங்களோட ஈகோவோட மட்டும் விளையாடிரக் கூடாது.”

“ஆமா, அது ஒண்ணு இருக்கு.” லபக்குதாஸ் வக்கீலாகவே மாறிவிட்டிருந்தார்.

“அப்புறம் தார்மீக விளைவுகள். ‘திருப்புமுனைச் சிறுகதை’ மாதிரி ஏதாவது விருது கெடச்சிட்டா? வாய்ங்க்குவீங்களா?”

‘திருப்புமுனைச் சிறுகதை’ என்பது ஆஸ்திரேலியத் தமிழர்கள் வருடாந்தரமாகக் கொடுக்கும் விருது. நல்ல பைசா.

லபக்குதாஸ் சொன்னதில் உண்மை இருந்தது. கதை நன்றாக இருக்கிறது என்பதற்காக எவனோ எழுதிய கதைக்கு நான் விருது வாங்க முடியாது. அப்படிப் பார்த்தால் உலகத்தில் எல்லா விருதும் என் வசம் இருக்க வேண்டும். அது நான் எழுதியது என்று அந்தப் பையன் கிளம்பிவிடும் அபாயக் காரணிச் சாத்தியக்கூறும் இருந்தது.

“சரி, இதுக்கு என்ன தீர்வுன்றீங்க?” என்று கேட்டேன்.

“எண்டிங்கை மாத்திருங்க. அதான் கதையோட பவர் பாயின்ட்.”

“எண்டிங்கா…. எண்டிங் நல்லா இருக்கா?”

“ஏன், நீங்க கதையவே படிக்கலியா?”

“வந்தப்புறம் யாராவது நல்லாருக்குன்னு சொன்னா படிக்கலாம்னு நெனச்சேன். நீங்க இப்பவே படிக்க வெச்சிருவீங்க போலிருக்கே!”

“இல்லன்னா எங்கிட்ட குடுத்துருங்க. நான் போட்டுக்குறேன். கவல விட்டுது.”

“ஆயிரத்து எரநூறு.”

லபக்குதாஸ் முறைத்தார்.

“என்னய்யா யானை வெல சொல்றீங்க? இப்பதான ஆயர்ருவாய்க்கு வாங்குனதா சொன்னீங்க?”

“அது நீங்க வாங்குவீங்கன்னு தெரியிறதுக்கு முன்னாடி சொன்னது.”

“கொறைங்க, கொறைங்க.”

“ஆயிரத்து நூறு.”

“ஆயிரம்.”

“ஆயிரத்தம்பது.”

“சரி, ஆயிரத்தம்பது. எப்டியோ எஸ்ட்ராவா அம்பது ருவா லாபம் அட்ச்சிட்டீங்க.”

“அந்த அம்பது ருவா இப்ப நான் பட்ட மன வேதனைக்காக.”

கதை இனிதே கைமாறியது. புது பீஸ், நான் இன்னும் படிக்கக்கூட இல்லை. லபக்குதாஸ் நஷ்டத்திற்கு எழுதப்போகிறார். அது போக கூரியருக்கு வேறு ஐம்பது ரூபாய் செலவு. சிறுகதைக்கு ஆயிரம் ரூபாய் மேல் சன்மானம் கொடுக்கும் முட்டாள் பத்திரிகை எதுவும் இல்லை. லபக்குதாஸ் அந்தக் கதையிடம் சோரம் போய்விட்டார்.

சில காலம் அந்தக் கதை பற்றிய நினைவே இல்லாதது போல் நடித்துக்கொண்டிருந்தேன். இரு வாரங்களுக்குப் பிறகு வந்தது கார்ப்பரேட் இலக்கியச் சேவை ஏடான ‘எழுத்து வன்மம்’ டிசம்பர் 2015 இதழ். எனக்கு அன்பிதழாக ஓசியில் வரும். ‘தேர்’ என்ற பெயரில் சிறுகதையாகத் தவழ்ந்த புனைகுழந்தை, நான் விற்ற பின்பு ‘தேர்வு’ என்ற குறுநாவலாக லபக்குதாஸ் பெயரில் வந்திருந்தது.

எனக்கு ஒரு கணம் இதயத் துடிப்பு நின்றது. ‘எழுத்து வன்மம்’ குறுநாவல்களுக்குத் தரும் ரேட்டு நான்காயிரம் ரூபாய். இதுதான் இதழியல் அறத்தின் இன்றைய லட்சணம். எழுத்தாளனை போகப் பொருளாகக் கருதி விலைக்கு வாங்கும் அதன் வக்கிரத்திற்கு லபக்குதாஸ் பீரங்கித் தீனி ஆகியிருந்தார். இனி அவரோடு நட்பு சாத்தியமா? இனி அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்? ‘நாலாயிரம் கொடுத்தான்’ என்று சொல்லி அசிங்கமாகப் புன்னகைப்பாரே! மனம் பிசைவுற்றது.

லபக்குதாஸ் எப்படி அதைக் குறுநாவல் ஆக்கினார் என்று பார்த்தேன். நடை முழுவதுமாக மாறியிருந்தது. நீளம் போதாத கதையைப் பெரிதாக்கப் பெரிய பாராக்களைப் பல துண்டுகளாகப் பிரிந்துவிட்டிருந்தார், தலைப்பில் ஓர் எழுத்து கூடுதலாக இருந்தது, அவ்வளவுதான். ஐம்பது ரூபாய் லாபம் அடித்துவிட்டீர்கள் என்று லபக்குதாஸ் சொன்னது நினைவுக்கு வந்து புன்னகைத்தது.

பிறகு ‘எண்டிங்’ – இரண்டையும் ஒப்பிட்டேன். லபக்குதாஸ் கதையின் முடிவையும் மாற்றியிருந்தார். நான் பார்த்தேன், ‘தேர்’ சிறுகதையைத் திறந்து சும்மா ஒரு ஓட்டு ஓட்டினேன். இக்கதையில் பேயோன் புதிய நடையை முயன்றிருக்கிறார். அப்படியே ‘இடைநிலை’க்கு மின்னஞ்சலில் இணைத்து அனுப்பினேன். இப்போது என்ன குடி முழுகிவிட்டது என்று கேட்டுக்கொண்டேன். இருநூறு ரூபாய்தானே? வருவது வரட்டும். எந்த உறவுக்கும் துரோகம் செய்யாமல் சம்பாதிக்கிற பணம். இந்தப் புதிய தெளிவில் மனம் சாந்தமடைந்தது (என்று எழுதினேன்).

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar