ரிபார்ம்டு பெமினிஸ்ட்

in கட்டுரை

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புதிய அலைப் பெண்ணியவாதிகளில் ஒருவனாக நான் இருந்தேன். வையகம் பழமையில் ஊறியிருக்க, நான் திடுக்கிடும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன். பெண்கள் ஏன் மேற்படிப்பு படிக்கக் கூடாது? ஏன் குடிக்கக் கூடாது (ஜிஞ்சர் பீர்தானே)? ஏன் மேற்கத்திய ஆடை அணியக் கூடாது? ஏன் ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது? ஏன் விரும்பினாற்போல் ஒப்பனை செய்துகொள்ளக் கூடாது? ஏன் வாகனம் ஓட்டக் கூடாது? ஆண்கள் ஏன் சமைக்கக் கூடாது? பெண்கள் ஏன் வெகுஜன எழுத்திலும் வெள்ளித்திரையிலும் வெறும் பலவீனிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்? எங்கே எங்கள் பெண் அமைச்சர்கள்? எங்கே எமது பெண் பூசாரிகள்? ஏன் செல்வாக்கான சாமியார்களெல்லாம் ஆண்களாகவே இருக்கிறார்கள்? என்று அடுக்கிச் சுற்றத்தாரை மிரளவைத்துக்கொண்டிருந்தேன்.

கையிருப்பில் இருந்த கேள்விகள் தீர்ந்த பின்பு சற்றுப் பாரம்பரியமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். பெண்கள் ஏன் 25 பைசா அளவில் பொட்டு வைக்க வேண்டும்? ஆண் சட்டையில் கறை ஏற்படுத்தி மணமுறிவுகளை விளைவிக்கும் அளவுக்கு லிப்ஸ்டிக் பூசியாக வேண்டுமா? ஏன் கொஞ்சம் சுவையாகச் சமைக்கக் கற்கக் கூடாது? ரசத்தில் உப்பைக் கொஞ்சம் பார்த்துப் போட்டால் என்ன? எந்த ரயிலைப் பிடிக்க இவ்வளவு மேக்கப்? இந்த வினாக்களை மேடைகளிலும் கேட்டேன். நான் ஒற்றைக் காகிதத் தாளைக் கையில் வைத்துக்கொண்டு மேடையில் ஏறினாலே பெண்கள் எல்லாம் பயப்படுவார்கள். ஆண்களோ, சிகரெட் புகைக்க வெளியே போய்விடுவார்கள்.

கல்லூரிப் பருவத்தில் பெண்ணின் நிலையைக் கண்கூடாகப் பார்த்தேன். பல பெண்கள் அழகாக இருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட அமைச்சராகவோ விஞ்ஞானியாகவோ பூசாரியாகவோ, திரைப்பட இயக்குநராகவோ, ஏன், சமையற்காரராகவோகூட இருக்கவில்லை. அரசுப் பணியில் இருந்த காலத்தில் பெண்கள் ஆண்களைவிடத் திறமையான, சிரத்தையான உழைப்பாளிகளாக இருந்ததைக் கவனித்தேன். ஆனால் அவர்கள் செயல்பாட்டுக்கு ஏற்ற பதவி உயர்வு கிடைத்ததா என்று கேட்டால் தெரியவில்லை, நான் ஒரு வருடத்தில் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

பிறகு ஒரு நாள்…

1998இல் எனக்குத் திருமணம் ஆனது. ஆண் என்கிற முறையில் எனக்கு அது ஒரு திருப்புமுனை. பெண்ணை ஆணுக்குச் சமமாக நினைக்கும் புதுமைப் பையன் என்ற என் சுயநினைப்பில் ஓர் இடி விழுந்தது. ஒவ்வொரு அம்சத்திலும் சராசரிக் கணவனாக, சராசரி ஆணாகவே நான் மனைவியிடம் இயங்கினேன் என்பதைக் கவனித்தேன். என்னுடைய எதிர்பார்ப்புகள் ஒரு சராசரிப் பிற்போக்கு ஆணுக்குரியவையாக இருந்தன. ‘ஏன் கூடாது’களின் இடத்தைக் ‘காபி கொண்டா’க்களும் ‘டிபன் பண்ணு’களும் ‘இந்த ரூமைப் பெருக்கிடு’களும் எடுத்துக்கொண்டன. என் வாழ்க்கையின் ஞானோதயக் கட்டம் அது. நான் யார் என்பதை அப்போது கண்டுகொண்டேன்.

இந்தப் புரிதல் தந்த திகைப்பிலிருந்து மீளச் சில நிமிடங்கள் ஆயிற்று. அட, இது நன்றாகத்தானே இருக்கிறது! எதற்காக அவ்வளவு கத்தினோம்? உட்கார்ந்த இடத்தில் எல்லாம் கிடைக்கிறது. நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. நமக்கென்று வரலாறு ஒதுக்கிக்கொடுத்த வேலைகளை மட்டும் செய்தால் போதும். பெண் ஆணுக்குச் சமமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்த்துக்கள். அவர்களுக்கு உரிமை கொடு என்று நாம் கிளம்பினால் ஆம்பிளைத்தனங்களை யார் செய்வது? எல்லோரும் ஆதரிக்கிறேன் பேர்வழி என்று வாழ்க்கைப் படகில் ஒரே முனைக்குச் சென்றுவிட்டால் படகு கவிழ்ந்துவிடாதா?

உட்கார்ந்திருந்த நான், ஒரு முடிவோடு எழுந்தேன். ஸ்ரீதனமாகக் கிடைத்த ஸ்டீல் பீரோவின் ஆளுயரக் கண்ணாடி முன்னால் நின்று என்னை ஏற இறங்கப் பார்த்தேன். “கலக்கு” என்று சொல்லிக்கொண்டேன்.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar