அதிரடிக் காலை

in துண்டிலக்கியம்

காலையில் வாக்கிங் செல்லும்போது பின்னால் பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. பழைய வாசகர்களோ என்று திரும்பிப் பார்த்தால் திபுதிபு என்று நான்கைந்து பேர். எல்லோர் கையிலும் வீச்சரிவாள்! புதிய வாசகர்கள் போல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கில்லை. அவர்கள் பார்வை வெகுதூரத்தில் பதிந்திருந்தது.

வழியில் ஒருவன் நிற்கிறானே, அவனை இடித்துத் தள்ளாமல் ரோட்டைக் கிராஸ் செய்து அந்தப் பக்கமாக ஓடலாம் என்ற முன்யோசனை யாரிடமும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையே குறியாக ஓடி வந்துகொண்டிருந்தார்கள். பதற்றத்தின் பல்பு ஒன்று எனக்குள்ளே முளை விட்டது – நான்தான் இலக்கோ?

நான் திரும்பிப் பார்த்து “டென்டேட்டிவ்”-ஆக ஓடத் தொடங்க, அவர்கள் என்னைச் சடுதியாகக் கடந்து போனார்கள். ஒரு மரியாதைக்கு, ஓர் இங்கிதத்திற்குக்கூட உரசவில்லை. நான் அங்கே இல்லாத மாதிரிக் கடந்துவிட்டார்கள். தெரு அவர்களை வேடிக்கை பார்த்தது. எனக்குப் படபடப்பு அடங்கி நிம்மதி வந்தது. “சரியான ஆளாப் பாத்து வலிக்காம வெட்டுங்கப்பா!” என்று சின்னதாகக் கத்திவிட்டு அங்கே மறுநாளைய துண்டுச்செய்தியைப் பார்க்க நின்றிருந்த ஒரு பெரியவரை நோக்கிச் சிரித்தேன். அவர் கவனிக்கவில்லை.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar