காசைக் கொடு

in கட்டுரை

என்னிடம் என் புத்தகங்களைப் பற்றி விசாரிப்பவர்கள், “காப்பி இருக்குமா சார்?” என்று இயல்பாகக்கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். நான் எடுத்துக் கொடுத்துவிட்டு பில் புக்கை எடுப்பதற்குள் “தேங்க்ஸ் சார்” என்று சொல்லி அதை அன்பளிப்பாக்கிவிடுகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் ஃபார்மல் ஷூ அல்பங்கள் புத்தகங்களுக்குரிய விலையைத் தருவதில்லை. எழுத்தாளனிடம் காசு கொடுத்து வாங்குவது அவனை வியாபாரியாக்கி அவமதிப்பதாகும் என்று கருதுகிறார்கள் போலும். ஐயா, இது 2016. காசு கொடுக்காவிட்டால்தான் அவமதிப்பு.

ஒரு பதிப்பகம் – எந்தப் பதிப்பகமும் – எழுத்தாளனுக்குப் பத்துப் பிரதிகளே தரும். அவை அன்பையும் ஆதாயத்தையும் சம்பாதிக்கப் பயன்படும். பத்து பிரதிகளுக்கு மேல் வேண்டும் என்றால் அவனே விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அந்தப் பத்துப் பிரதிகள் தற்குறி உறவினர்கள், திடீர் விருந்தாளிகள், பிடிக்காத ஆட்கள் போன்றோரால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. எழுதியவன் என்ற முறையில் கடைசியில் படைப்பாளியிடம் மிஞ்சுபவை, ஒரு “எங்கிட்டயே ஒரு காப்பிதான் இருக்கு” பிரதி, ஒளித்துவைத்த ஒரு பிரதி. மற்றும் வேறு இடத்தில் ஒளித்துவைத்த இன்னொரு பிரதி.

ஓர் அழகிய இளம் புது வாசகியோ விருது ஆசாமியோ அறிமுகமானால் அவசரத்திற்கு அன்பளிக்கப் பிரதிகள் இருப்பதில்லை. சமயத்தில் இருவரும் ஒரே ஆளாக இருந்து ஒரே ஒரு பிரதி மட்டுமே தேவைப்பட்டால்கூட டிசிஎஸ் தினகரன் உடனே கொண்டுவந்து தருவாரா? மாட்டார், டிரைவிங்கில் இருப்பார், திருப்பி கால் பண்ணுவார். இறுதியில் நான்தான் இழப்பாளி.

ஒரு வாசகன் ஓர் எழுத்தாளரின் புத்தகங்களை நேரடியாக அவரிடமே காசு கொடுத்து வாங்க நேரும்போது அங்கு நடப்பது வெறும் வியாபாரம் அல்ல; அது அவன் தனக்குத் தானே செய்துகொள்ளும் கௌரவம்; படைப்பாளிக்கு அளிக்கும் மரியாதை. ஒருவரை மதிக்கிறீர்கள் என்றால் அவருக்குப் பணம் கொடுங்கள்.

இனி என்னிடம் புத்தகம் கேட்கும்போது அதற்கான விலையைக் கொடுத்துவிடுங்கள். தட்சிணை, கட்டணம் என்று வேண்டுமானால் நினைத்துக்கொள்ளுங்கள். ரொக்கமாகக் கொடுங்கள். காசு கொண்டுவரவில்லையா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை (ஏதாவது இரண்டு முகவரி ஆதாரம்), கடந்த ஆறு மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் ஆகியவற்றைக் காட்டி உங்கள் ஓ.சி. பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள். மடிப்புக் கலையாத ரூ. 150 புத்தகத்தை ரத்தக்காயம் இன்றி எடுத்துச் சென்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar