டீ ஜானகிராமன்

in துண்டிலக்கியம்

காலையில் தேநீர் சாப்பிடப் போனபோது எனக்குத் தெரிந்த மாஸ்டர் இருந்தார். நல்ல மனிதர். நான் எதைப் பேசினாலும் புரிகிறதோ புரியவில்லையோ, பேசி முடிக்கும் வரை காத்திருப்பார். பின்பு என் பேச்சில் தட்டுப்படும் சில குறிச்சொற்களை வைத்துப் பேச்சின் உள்ளடக்கத்தை ஒருவாறாக ஊகித்து “ஆமா சார், இப்பப் பாத்தீங்கன்னா…” என்று ஏதாவது பதில் சொல்வார்.

மாஸ்டர் எனக்குத் தேநீர் போட்டுக் கொடுத்தார். படுசூடு. “ரொம்ப சூடா இருக்கே, ஆத்திக் குடுக்குறீங்களா?” ஆற்றிக் கொடுத்தார். ஆனால் மிகக் கசப்பாக, வலுவாக இருந்தது. “ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குங்க, கொஞ்சம் லைட்டா போட்டுக் குடுங்களேன்” என்று கோப்பையை நீட்டினேன். “குடுத்துருவோம்” என்று புன்னகைத்து வாங்கிக்கொண்டார். கொஞ்சம் கொட்டிவிட்டுப் பாலும் சர்க்கரையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரே இனிப்பு. “சக்கரை ஜாஸ்தி ஆயிருச்சு போல. கொஞ்சம் டிகாஷன் போடுங்களேன்” என்று இளித்தேன். அவரும் “போட்ருவோம் குடுங்க” என்றார் அலுக்காமல்.

கடைசியில் நான் குடிக்கத் தயாராகத் தேநீர் வந்தது. மாஸ்டர் செய்த அத்தனை நிகழ்முறைகளில் சூடெல்லாம் ஆவியாகிவிட்டிருந்தது. ஒரே மடக்கில் பாதியைக் குடித்து மீதியைக் கொட்டிவிட்டுக் கோப்பையை அவர் மேடையில் வைத்தேன்.

சப்புக்கொட்டி எச்சில் விழுங்கிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். மாஸ்டர் என்னை முறைத்தார். “இதுக்குத்தானா எல்லாம்” என்றார்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar