நானும் சாத்தானும்

in கவிதை

சாத்தான் எதிரில் அமர்ந்திருக்கிறான்
எங்களிடையே ஒரு சதுரங்கப் பலகை
எனக்குச் சதுரங்கம் தெரியாது
அதுவும் 1008×1008 பலகையில்

பொருள் பொதியப் புன்னகைத்து
ஒரு பகடையால்
என் யானையொன்றைத்
தட்டி விடுகிறான் சாத்தான்

மாஜி தேவதைகளுக்கும்
தாடி-மீசை முளைக்காது போலும்
வழுவழு கொம்புகளை
இரு கைகளால் நீவிக்கொள்கிறான்
பார்க்க விநோதமாக இருக்கிறது
அவனுக்கே உறைக்காதா?

‘உன் முறை’ என்கிறான் சாத்தான்
ஆயிரத்தெட்டு சதுரங்களில்
பத்தைக்கூட நான் தாண்டவில்லை
ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து
விலக முடியாது

கான்கிரீட் தரையோடு
இடுப்பு வரை இறுகியிருக்கிறேன்
ஆட்டம் முடிந்த பின்பே
எழுச்சி கொள்ள முடியும்

மறுகோடியில் இப்போது
அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் கோலத்தில்
ஒய்யாரமாய்ப் படுத்திருக்கும்
சாத்தானிடம் சொல்கிறேன்,
‘இது ஆகாத வேலை
என் ஆட்டம் இல்லை இது
வா, பந்து விளையாடுவோம்.’

கிக்கிக்கி என்று சிரிக்கிறான் சாத்தான்
‘இடுக்கண் வருங்கால் நகுதல்
ஐ லைக் தட்!’ என்கிறான்

இவன் காஃப்காவின் வாயிற்காவலன்
கொஞ்சம் உதவேன் என்றால்
அசைந்துகொடுக்க மாட்டான்
‘சொல்லித் தெரிவதில்லை
சதுரங்கக் கலை’ என்பான்

நான் மீண்டும் வாயைத் திறக்கிறேன்
பேசுவது அவன்
‘இத்தனை வருடங்களாக ஆடுகிறோம்
என்ன கற்றுக்கொண்டாய்?
உன் குதிரைகளைக் கொன்றுவிட்டாய்
உன் யானைகளைத் தின்றுவிட்டாய்
பகடைகளில் பலது அம்பேல்
கெட்ட கேட்டுக்குக்
கான்கிரீட் கமிட்மென்ட் வேறு.’

சிரித்துக்கொண்டே இவ்வளவும் சொல்கிறான்
சொன்ன பின்பு தனியாக வேறு
கொஞ்சம் சிரிக்கிறான் என்னை வெறுப்பேற்ற
சிரிப்பு அவன் முகம் விட்டு அகல்வதேயில்லை
அவன் பணியின் சாபம் போல

ஆனால் என்னிடம் ஒரு திட்டம் உண்டு
இம்முறை நான் சொல்கிறேன்,
‘பார், இந்த ஆட்டத்தை விடுவோம்
யுகயுகமாய் நீயும்தான் இதில்
சிக்கியிருக்கிறாய் – ‘

‘பட் ஐ என்ஜாய் இட்!’

‘நல்ல இடமாய் எங்காவது போவோம்
நீ மட்டும் பேசு, நான் கேட்கிறேன்
நீ பேசி முடிக்கும் வரை கேட்கிறேன்
ஏன், நீ முடிக்கவே வேண்டாம்
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
உனக்கும் சொல்ல விஷயம்
நிறைய இருக்கும், இல்லையா?’

கழுத்தின் மேல் மாலையாகப்
போட்டுக்கொண்ட வாலை
மேல்துண்டு போல் இருபக்கமும்
மாற்றி மாற்றி இழுத்து விளையாடுகிறான்
என்னை வேடிக்கை பார்க்கிறான்

‘அப்போது சதுரங்கம் வேண்டாம் என்கிறாய்.’

‘வேண்டாம்
நீ ரொம்ப அழகான இடம் என்று
நினைக்கும் இடத்திற்குப் போவோம்
அங்கே உட்கார்ந்து ஆற அமரப் பேசுவோம்
இல்லை, நீ பேசு, நான் கேட்கிறேன்.’

‘தங்கள் சித்தம் என் பாக்கியம்’ என்று
கைகூப்பித் தலைவணங்குகிறான்

ஜன்னல் இல்லாத 4×4 அறையொன்றில்
நாங்கள் இருந்தோம்
நாற்காலிகள் இல்லை
மேலே ஒரு பழைய மஞ்சள் ஒளி பல்பு
அடுத்த ஆட்டத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தேன்

‘ஐம் வார்ணிங் யூ
நான் நிறுத்த மாட்டேன்’ என்கிறான்
என் தலையசைப்புக்குப் பின்பு
பேச ஆரம்பிக்கிறான்

‘உனக்கு நினைவிருக்கும்,
உன் பதினாலாவது வயதில் – ‘

‘இங்கே பக்கத்தில் ஏதாவது
கடை இருக்குமா?’ என்கிறேன் குறுக்கிட்டு

வாய் தைத்துக்கொள்கிறது மாயாஜாலமாய்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar