வாசகர் கடிதம்: கருத்து விசாரிப்பு

in கடிதம், கட்டுரை

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பேயோன் சார் அவர்களுக்கு,

என் கவிதைத் தொகுப்பின் பிரிண்ட் அவுட் ஸ்பைரல் பைண்டிங் பிரதி கிடைத்ததா? மிகவும் கனமாக இருந்ததா? கவிதைகளைப் பற்றி உங்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறன்.

ஜெய்ஸ்ரீராம்,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை

*

வணக்கம் ஜெய்ஸ்ரீராம்.

அன்பு, மதிப்பு எல்லாம் கிடக்கட்டும். உங்கள் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். நீங்கள் சற்று நண்பர் என்பதால் உங்கள் கவிதைகள் தனிப்பட்ட முறையில் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவிதைக் கண்ணால் பார்க்கும்போது வெறுப்பு மண்டுகிறது. தூக்கத்தில் உங்கள் வரிகளை அரற்றித் தலையில் அடித்துக்கொள்கிறேன். அவ்வளவு சக்திவாய்ந்த கவிதைகள் உங்களுடையவை.

எந்த ஒரு படைப்பாளியால் ஒரு நல்ல வாசகனை இந்த மட்டிற்குத் தீவிரமாக பாதிக்க முடிகிறதோ, அப்போதுதான் அவன் படைப்பாளி என்ற அரிய அந்தஸ்தை அடைகிறான். உங்கள் விஷயம் எப்படியோ. உங்கள் தொகுப்பைத் தமிழ் எழுத்துச் சூழல் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது சார்ந்து எனக்கு வெளிச்சம் இல்லை. அதற்குச் சாதகமான மதிப்புரைகள் கிடைக்கலாம், அல்லது சரேலென விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

நீங்கள் கேட்டுக்கொண்டபடி கருத்துச் சொல்லிவிட்டேன். உங்கள் கவிதைகள் உங்களைச் சுரணையற்றவராகச் சித்தரிக்க முயன்று வெற்றி பெற்றாலும் உங்களைப் புண்படுத்தக்கூடும் என்ற ஐயத்தையும் என் கருத்துகளால் நீங்கள் பயனடையக்கூடும் என்ற எரிச்சலையும் மீறி உங்களுக்கு வெளிப்படையாக மறுமொழி அளித்திருக்கிறேன். ஆனால் மதிப்புரை எழுதும் தூரம் மெனக்கெட விருப்பமில்லை. ஐநூறு கிடைக்கும். அதுவும் வந்ததும் கைவிட்டுப் போய்விடும். திருமணமாகிவிட்டதா உங்களுக்கு?

உங்கள் கவிதைகள் வாத்து, வரப்பு, பள்ளிப் பருவக் காதல்கள், வாத்தியார்கள், மாமா பெரியப்பா தாத்தா பாட்டிகள், மாட்டூர்திப் பயணங்கள், நாகப்பழத்தை உலுக்கிச் சாப்பிட்டமை என்று ஊர் நினைவுகளாகவே இருக்கின்றன. ஆனால் ஊரைப் பற்றி, மக்களைப் பற்றி, சாதி, வர்க்க நிலை, பண்பாடு பற்றி ஒரு சடங்கார்த்தக் குறிப்பிடல்கூட இல்லாததில் ஏமாற்றம் கண்டேன். இந்தக் கவிதைகள் ‘ஊர்மேய்’ பத்திரிகையில் வந்தபோதே இந்தப் போக்கை கவனித்துப் பத்திரிகையைத் தலை மேல் கவிழ்த்துக்கொண்டதுண்டு. ஆனால் அவை என்னையே முட்ட வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் மூன்று கழுதை வயது ஆகும் வரை ஊரில் இருந்துவிட்டுச் சென்னைக்கு பத்தாண்டுகள் முன்பு வந்ததாகச் சொன்னீர்கள். இந்த ஆண்டுகளில் உங்கள் ஊரைப் பற்றியும் அங்கே உங்கள் வாழ்வியல் பற்றியும் நீங்கள் உணர்ந்துகொண்டது இவ்வளவுதானா? பின்பு சம்பவத் துணுக்குகளை ஏமாற்றிக் கவிதைகளாக்கியது போல் ஒரு நடை. கவிதை நடை என்பது வாக்கிங் விஷயம் அல்ல, அது ஒரு நடனம். மூத்த எழுத்தாளராக ஓர் அறிவுரை தருகிறேன்: ஊருக்குப் போய்விடுங்கள், நான்கு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், 35 வயதுக்கு மேற்பட்டஉயிருள்ள அல்லது ‘மரணித்த’ கவிஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். பிறகு திரும்பி வந்து எழுதுங்கள். பிறகு பக்க எண்கள் எதற்கு? கடைசிப் பக்கத்திற்கு மட்டும் எண் கொடுத்தால் போதாதா?

நான் உங்களை நம்பிக்கையிழக்க வைப்பதாக நினைக்க வேண்டாம், என் நோக்கம் அதுதான் என்றாலும். நீங்கள் எழுத வந்துவிட்டீர்கள். ஒரு தொகுப்பு போட்டுவிட்டீர்கள். ஒரு கவிதைத் தொகுப்பு என்பது உயிருள்ள வஸ்து. என்னிடமிருந்தான இத்தனை எதிர்மறை விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் தொகுப்புக்கென்று ஒரு இடம் இருக்கவே செய்கிறது – உங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி.

அடுத்த முறை பார்ப்போம்.

அன்புடன்
பேயோன்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar