என் காதல் கதை

in கட்டுரை

பல ஆண்கள் தங்கள் மனைவிகளைக் காதலிப்பதில்லை. அதுவும் திருமணமாகாத ஆண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அது கிட்டத்தட்ட சாத்தியமில்லை. காதல் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் திருமணம் முடிந்த கையோடு ‘ரிடையர்’ ஆகிவிடுகிறார்கள். மனைவியைக் காதலிப்பதில் உள்ள சூட்சுமம் இதுதான். மனைவி ஆவதற்கு முன்பே ஒரு பாட்டம் காதலித்துவிட வேண்டும். பின்பு வருவது வரட்டும்.

நான் என் மனைவியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் காதலில் என் பங்களிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் அவரும் உடந்தையாக இருந்தார் என்று சொல்ல வேண்டும்.

நான் அப்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுச் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் துணை நூலகராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். கை நிறைய சம்பளம். கொஞ்சம் பெரிய கையாக இருந்தால் சிரமமாக இருந்திருக்கும். ஆனால் அந்த ஊதியம் எனக்குப் போதுமாக இருந்தது. அதோடு நான் காதலிக்கும் மனநிலையில் இருந்தேன். பல்கலைக்கழக நூலகம் அதற்குத் தோதாக இருந்தது. பல கல்லூரிகளிலிருந்து நிறைய பெண்கள் அங்கு வந்தார்கள். தொலைநோக்கிக் கருவியால் நட்சத்திரங்களைப் பார்ப்பது போல் இருந்தது – நான் எல்லோரையும் பார்த்தேன்; என்னை யாரும் பார்க்கவில்லை.

பிறகு ஒரு நாள் – அந்த நாள் எனக்குச் சரியாக நினைவில்லை; நம் நலனுக்காக மனம் உபயோகமில்லாத சில உதவிகளைச் செய்கிறது என்று நினைக்கிறேன் – என் மனைவியைப் பார்த்தேன். அவர் நூலகத்திற்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் அவர் தனியாக வரவில்லை. அவரும் இன்னும் மூன்று பெண்களும் நூலகத்தில் சேர விண்ணப்பித்தார்கள். நால்வரும் வரலாறு இளங்கலை இரண்டாம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரி.

நான் கூடுமான அளவுக்கு என்னுடைய ஆண்மைக் கம்பீரத்தைத் தோகைவிரித்து அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக நூலக உறுப்பினராதல் விதிகளை எடுத்துச் சொன்னேன். கல்லூரி அதிகாரிகள் கையொப்பம், அரசு அதிகாரி கையொப்பம், ஏதோ முத்திரை போன்ற விஷயங்களை பாஸ்போர்ட் ஏஜென்ட் போல நானே என் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவர்களை உறுப்பினர் ஆக்கினேன். நான்கு புன்னகைகள் கிடைத்தன. அதில் ஒரு புன்னகை மிக வசீகரமாக இருந்தது. இப்போது எங்கு இருக்கிறாளோ தெரியவில்லை.

நாட்கள் நகர, அந்த நான்கு பேரில் என் மனைவி தனியாகத் தெரிந்தார். ஏனென்றால் மற்ற மூன்று பேரும் அவரைவிட அழகாக இருந்தார்கள். இந்தப் பெண் எந்தக் கூட்டத்திலும் தனியாகத் தெரிவாள் என்று தோன்றியது. எனக்கோ நான்கு பேரும் தேவைப்பட்டது. நான் அந்த மாதிரி. கொலுவில் ஒரே ஒரு பொம்மையா வைக்கிறோம்?

(இங்கே கொஞ்சம் புலம்பிக்கொள்கிறேன்.) ஆனால் அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாள். ஒரு ஆண் ஒரே சமயத்தில் ஒரு பெண்ணை மட்டுமே காதலிக்கலாம் என்பது ஒரு தாள் இல்லையா? இது வள்ளுவர் போன்ற ஓர் ஏகாதிபத்தினியவாதிக்குப் புரிந்திருக்காது. நம்முடைய சமூகம் முன்வைத்து அமல்படுத்தும் அன்பு, தட்டையானது. கலிலியோவுக்கு முந்தைய பூமி போல. காதல் மேன்மையானது, அழகானது, தெய்வீகமானது, ஆனால் ஒரு ஆளுக்கு ஒரு பீஸ்தான். ஒன்று முடிந்தால்தான் இன்னொன்று. உனக்குக் கொடுத்த பொதுமக்கள் தாழிக்குள் குந்திக்கொண்டு மூடியை சரியாகப் பொருத்திக்கொள். இதுதான் இவர்களுடைய அன்பு.

நான் மோகித்த மற்ற மூவருக்குத் திருமணம் ஆகிப்போனதோ, காதலர்கள்தான் கிடைத்தார்களோ என்னவோ, அவர்கள் நூலகத்திற்கு வருவது நின்றது. என் மனைவி மட்டும் புத்தகங்களோடு வந்துகொண்டிருந்தார். அவர் என்னைப் பார்க்கத்தான் வருகிறாரோ என்று எனக்கு சந்தேகம். ஏனென்றால் வாடகைக்கு எடுத்த அதே புத்தகங்களுக்கே இருவாரங்களுக்கு ஒருமுறை இறுதித் தேதியைப் புதுப்பிக்க வந்தபடி இருந்தார். என்னைப் பார்த்துப் புன்னகைப்பார் வேறு. என் பெயர் பேயோன். ஆனால் என்னைச் சந்திரன், மூர்த்தி, சிவராமன், சுலோச்சனா என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பேர் சொல்லி ஒரு ‘சார்’-உம் சேர்த்துக் கூப்பிடுவார் (இவர்களெல்லாம் மாஜி காதலர்களா மாஜி சகோதரர்களா என்று மனக்கேள்வி உறுத்தும்). நான் பொறுமையாக என் பெயரை நினைவூட்டி, ‘சார்’ வேண்டாம் என்று சொல்வேன். அது நடக்காமல் போக, ‘சுலோச்சனா’ என்று அழைப்பதாக இருந்தால் மட்டும் ‘சார்’ போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.

இதற்கிடையில் நிறைய அழகான பெண்கள் எனது நூலக வாழ்க்கையில் நுழைந்துவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவருமே அந்தந்த ஆண்டின் நூலக அழகிகள். ஆனால் ஒவ்வொருவரையும் புதிதாகப் பழகிக்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முன்பே கைவசம் இருந்த என் மனைவியை அந்நியப்படுத்திவிடக் கூடாது. அந்த சமயத்தில் அவரது கலகலப்பும் என் பெயரைத் தவிர வேறு எதையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் பாங்கும் என்னைக் கவர்ந்தன. காலப்போக்கில் அழகாகவும் தெரிந்தார். நான் அவரைக் காதலிக்கத் தீர்மானித்தேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன்.

நூலகம் கல்லூரிக்கு இவ்வளவு அருகில் இருக்கும்போது நீங்கள் ஏன் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வருகிறீர்கள் என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். அவரது கூச்சமான மறுப்பைப் பொருட்படுத்தாமல் அன்றிலிருந்து நானே வரலாறு தொடர்பான புத்தகங்களை மிலிட்டரி ஓட்டல் மெனு போல அல்லது நடமாடும் திருட்டு டிவிடி விற்பனையாளர் போல அவரது கல்லூரிக்கு எடுத்துச்செல்லத் தொடங்கினேன். அவர் எனக்காகக் காத்திருப்பார் (இருக்கலாம்). நூறு புத்தகம் எடுத்துச்சென்றால் மூன்று தேர்ந்தெடுப்பார். நூலகத்தில் சக ஊழியர்கள் இறுதித் தேதி முத்திரையையும் பதிவேட்டையும் தேடிக்கொண்டிருக்க, நான் அவற்றை அந்தப் பெண்ணுக்குப் பயன்படுத்திப் புத்தகங்களை ‘ஆன்-தி-ஸ்பாட்’ இரவல் கொடுத்து நடமாடும் சென்னைப் பல்கலைக்கழக நூலகம், வரலாறு அலமாரி-ஆக விளங்கினேன். புத்தக மூட்டையைத் தோளிலும் ஒரு புன்னகையை வாயிலும் சுமந்து விடைபெறுகையில் என் மனைவியும் அவர் தோழிகளும் சிரித்துக்கொள்ளும் சத்தம் என் காதில் தேனாய்ப் பாய்ந்தது.

புத்தகங்களை விநியோகிக்கும்போது வாழைப்பழத்திற்குள் ஊசி செருகுவது போல அல்லது மகாபாரதத்திற்குள் பகவத்கீதை செருகுவது போல என் காதல் கவிதை ஒன்றை நுழைத்துக் கொடுக்கக் கற்றுக்கொண்டேன். அப்போதுதான் காதல் கவிதை எழுதத் தொடங்கியிருந்தேன். இவர் மேல் முயன்றுபார்க்கலாம் என்று. முதல் சில நாட்கள் எதிர்வினையே இல்லை. பிறகு ஒருநாள் நான் வரும்போது “ஏய், உன் ஆளு வந்துட்டாருடி” மற்றும் “சும்மா இருடி” காதில் விழுந்தன. இன்னொரு நாள் “உங்க கவிதை நல்லா இருந்துது” என்றார் மனைவி. எனக்குப் புல்லரித்துக் கைகால்கள் உதற ஆரம்பித்தன. நான் எழுதவில்லை எனப் பதறி மறுத்தேன். கவிதை நன்றாக இருப்பதாக அவர் சொன்ன பின்பு அதன் உரிமைத்துவத்தைக் கழற்றி விட்டது எவ்வளவு முட்டாள்தனம் என்று பின்னரே உணர்ந்தேன். என்னுடைய அடுத்த கவிதை சுருக்கமாக இருந்தது –

நீங்கள் விரும்பி நான் துறந்த
காதல் கவிதை –
அதை நான்தான் எழுதினேன்
உங்களுக்காக எழுதினேன்
மீண்டும் எழுதுவேன்
அதையும் நானே எழுதுவேன்.

அடுத்துச் சில காலம் அவரைக் காணவில்லை. விடுப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். சில நாட்களுக்குப் பின்பு அவர் திரும்பி வந்ததும் என் கவிதைப் பங்களிப்பு தொடர்ந்தது. மீண்டும் விடுமுறை, மீண்டும் கவிதை விநியோகம். இப்படியே போய்க்கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் இனி கவிதைகள் தர வேண்டாம் எனவும் அவருக்கு ‘அட்டெண்டன்ஸ் பிராப்ளம்’ வருவதாகவும் சொன்னார். இனி அவை கூடாது என்று உடன்படிக்கை செய்துகொண்டோம்.

இதற்கிடையில் புத்தகங்கள், தேதி முத்திரை, பதிவேடு எல்லாம் அடிக்கடி காணாமல் போய்விட்டுத் திரும்பி வருவதை நூலக நிர்வாகம் கண்டுபிடித்தது. காதலியிடம் சொன்னேன். அதுநாள்வரை செய்த உதவிக்கு நன்றி சொன்னார். மீண்டும் நூலகத்திற்கு வரத் தொடங்கினார். ஒருநாள் மாலை அவர் நூலகத்திலிருந்து வெளியேறும்போது பின்னால் ஓடிச் சென்று அவரைக் கடற்கரைக்கு அழைத்தேன். நாளைக்குச் சொல்கிறேன் என்றார். மறுநாள் சந்திக்க ஒப்புக்கொண்டார். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. வயிறு சரியில்லாமல் போனது.

அதற்கு மறுநாள் நாங்கள் சென்னை மாவட்டம் குறளகம் எதிரே இருந்த புல் தரையில் அமர்ந்தோம். கிட்டத்தட்ட அரை மணிநேரம் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி, எண்ணி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மௌனமாக இருந்தோம் (ஒரு வார்த்தை என்றால் அதிகபட்சம் ‘ஹலோ’ சொல்லியிருக்க முடியும்; அந்தக் காலத்தில் செல்போன் இல்லை). இருவரும் காத்திருந்தோம். வாகனங்களுக்கு நடுவே தொடர்பில்லாமல் இரு காவலர்கள் குதிரையில் சென்றார்கள். அதைப் பார்த்தபடி நான் அவரிடம் சொன்னேன், “நான் உங்களைக் காதலிக்கிறேன்.” மனைவி புன்னகைத்துத் தலைகுனிந்தார். என்னால் அவருக்கு ஏற்பட்ட முதல் தலைக்குனிவு அதுதான் என்று நினைக்கிறேன். பிறகு எழுந்து நின்றார். நானும் அதிர்ந்து எழுந்து நின்றேன். “மண்ணுக்குப் போலாம்” என்றார்.

மணலில் உட்கார்ந்தபடி அவரவர் குடும்பங்களைப் பற்றி, சினிமா, அரசியல், வெயில் என்று பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசினோம். இது எனக்கு எத்தனையாவது காதல், அடுத்த ஐந்தாண்டில் நான் என்ன அந்தஸ்தில் இருப்பேன் என்றெல்லாம் கேட்டார். இருட்டத் தொடங்கிய பின் அவர் எழுந்தார். கிளம்புகிறேன் என்றார். நானும் வருகிறேன் என்று நான் சொல்ல, அவர் நிற்காமல் போய் பஸ்ஸையும் பிடித்துவிட்டார். நான் மணலைப் பார்த்தேன். இதயச் சின்னத்தை வரைந்து அதில் ஓர் அம்புக்குறியை வரைந்திருந்தார். காதலை என்னிடம் நேரடியாகச் சொல்ல வெட்கம்! என்னிடம் வெட்கப்படவும் உலகில் ஆட்கள் – அதுவும் பெண் ஆட்கள் – இருக்கிறார்கள் என்று பெருமையாக இருந்தது. அவர் வரைந்த மணலை அள்ளி பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நானும் ஒரு பேருந்தைப் பிடித்து வீடு போய்ச் சேர்ந்தேன். மணலை ஒரு ஹார்லிக்ஸ் புட்டியில் போட்டுவைத்தேன் (எதிர்காலத்தில் என் மகன் அதை உடைத்தான். கண்ணாடித் துண்டுகளும் கலந்திருந்ததால் நான் மணலை மீட்கவில்லை. மணல், குப்பைக்குப் போனது. ‘ஒரு மண்ணும் இல்ல’ என்ற வழக்காறு தமிழுக்குக் கிடைத்தது இப்படித்தான்).

அதன் பின்னர் அவர் நூலகத்திற்கு வந்தபோதெல்லாம் அது எனக்குப் பெரிய நிகழ்வாக இருந்தது. மலர்ந்த விழிகளுடன் என்னை விழுங்குவது போல் பார்த்தபடி நூலகத்திற்குள் நுழையும் காட்சி இன்று வரை பசுமரத்து ஆணியாகப் பதிந்திருக்கிறது. எங்கள் இருவரைத் தவிர எல்லாம் அபத்தமாகத் தெரிந்தது. எல்லோரும் அற்பர்களாகத் தெரிந்தார்கள். சபாரி சூட் அணிந்து இன்ஸ்பெக்‍ஷனுக்கு வந்த கல்வித் துறைச் செயலரை விளையாட்டாகப் பின்னந்தலையில் தட்டியே இருப்பேன், என் இடதுகை மட்டும் தடுக்காமல் விட்டிருந்தால்.

ஊருலகம் நாலு விதமாகப் பேசினாலும் எங்கள் காதல் கண்ணியமாகத் தொடர, ஒருநாள் என் மனைவி என்னிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும் என்றார். அவர் காதல் சின்னத்தை வரைந்த இடத்தில் மணலை அளைந்தார். அவர் வீட்டில் அவருக்கு வரன் தேடுவதாகச் சொன்னார். எனக்கு முதலில் புரியவில்லை. அவர் வீட்டில் அவரது தந்தையும் தம்பியும்தான் ஒரே ஆண்கள். அவர் திருமணம் செய்துகொள்ளும்படியான ஆண்கள் யாரும் அவர் வீட்டில் இல்லை. வீடும் சிறியது. ஆள் இருந்தால் தேடிக் கண்டுபிடித்துவிடலாம். பிறகு அவர் என்னிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று உறைத்தது. எனக்கு மேனி சிலிர்த்தது. அந்த எதிர்பார்ப்பு என்னிடமும் இருந்தது. “நான் ஏதாவது செய்யணுமா?” என்றேன்.

நான் முதலில் என் வீட்டில் பேசித் திட்டு வாங்கிவிட்டு அவர் வீட்டில் பேசப் போனேன். அப்போது ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன். எங்கள் இருவருடைய பாலினம்தான் வெவ்வேறே தவிர ஜாதி ஒன்றுதான். நான் வந்ததிலிருந்து ஒரே நேரத்தில் எல்லோருமாகக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்த பெண் வீட்டார், ஜாதி ஒற்றுமையைக் கேட்டு உடனே அடங்கிவிட்டார்கள். குடும்பப் பின்னணி, என் வேலை நிலவரம், சம்பளம், பெற்றோரின் தொலைபேசி எண் எல்லாம் விசாரித்தார்கள். மகளின் இறுதி ஆண்டோடு படிப்பு போதும் என்று முடிவெடுத்தார்கள். அதை மகள்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நான் காட்டமாகச் சொல்ல, மகளும் அதே முடிவைச் செய்தார்.

அடுத்த ஒன்றரை மாதத்தில் நிகழும்படியாக எங்களுக்குத் திருமணம் நிச்சயமானது. நாங்கள் புதிதாகக் கிடைத்த அங்கீகார சுதந்திரத்தில் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசினோம். திருமண நாள் வந்தது. என் மனைவியின் காணாமல் போயிருந்த மூன்று அழகிய தோழிகள் வந்திருந்தார்கள். நான் என் மனைவிக்குத் தாலி கட்டியதும் மூன்று பெண்களும் என்னை வாழ்த்தி என்னோடு கைகுலுக்கினார்கள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar