பொடி டப்பா

in கட்டுரை

எப்போதாவது ஒரு மாறுதலுக்காக மூக்குப்பொடி போடும் பழக்கமுள்ளவனாகிய எனக்கு இன்று மூக்குப்பொடி போடும் ஆசை துளிர்த்தது. நான் வழக்கமாக சிகரெட் வாங்கும் பெட்டிக்கடைக்குப் போய்க் கேட்டேன். இல்லையாம்.

“இப்பல்லாம் யார் சார் மூக்குப்பொடில்லாம் போடுறாங்க? எல்லாம் பாக்கு போட ஆரம்ச்சிட்டாங்க. மூக்குப்பொடி போட்டு அத வேற தும்மிக்கிட்டு” என்றார் கடைக்காரர்.

“உண்மைதான். ஆனா பழசாவது இருக்கும் பாருங்க. எங்கியாவது வெச்சிருப்பீங்க” என்றேன்.

“இல்ல சார், நான்தான் சொல்றனே” என்று புன்னகைத்தார் எரிச்சலடையத் தொடங்குவதைக் காட்டி.

கடைக்குள்ளே ஓர் இளைஞன் நெற்றியில் திருநீறு, தீவிரமாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். ‘யஜுர் வேதம்’.

“பையன் யாரு?” என்றேன்.

“நம்ம பையன்தான்.”

“என்னென்னவோ புக்குல்லாம் படிக்குறாப்ல?” என்றேன்.

“சாமி மேட்டர்ல கொஞ்சம் இன்ட்ரஷ்டு” என்றார்.

நான் அந்த இளைஞனைப் பார்த்து “தம்பி, மூக்குப்பொடி டப்பா ஒண்ணு குடுப்பா” என்றேன்.

கடைக்காரர் திகைக்க, அந்த இளைஞன் சில பக்கங்களைப் புரட்டிப் புத்தகத்திற்குள்ளிருந்து ஒரு பொடி டப்பாவை எடுத்துக் கொடுத்தான். நான் வாங்கிக்கொண்டேன்.

“புரியுதா, நம்ம வேதங்கள்ல இல்லாததே இல்ல” என்று இன்னமும் விழித்துக்கொண்டிருந்த கடைக்காரரிடம் காசு அழுத்தலோடு சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar