‘தாக்கம்’ நேர்காணல்

in கட்டுரை

(‘தாக்கம்’ சிற்றிதழின் ஏப்ரல்-டிசம்பர் 2016 இதழில் எனது நேர்காணல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு ஒரு துணை ஆசிரியர் வந்து என்னை நேர்கண்டு போனார். அந்தப் பேட்டி ஏனோ வெளிவரவில்லை.)

தாக்கம்: தமிழில் இப்போது குறைந்தது அறுபது பேர் ஓரளவு வாசிக்கத்தக்க தரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில் நீங்கள் எழுதுவதற்கான தேவை என்ன?

பேயோன்: முதலில் தமிழ் வாழ்வியலில் இலக்கியத்தின் இடம் என்ன என்று கேட்டுக்கொள்வோம்…

தாக்கம்: கேட்ட கேள்விக்கு பதில்.

பேயோன்: அவர்கள் எழுதுவதற்கான தேவை என்னவோ அதேதான் என்னுடையதும். முதலில் இன்னார்தான் எழுத வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. அதுதான் எனக்கான இடுக்கு. இன்னொன்று, எனக்கென்று வாசகர்கள் இருக்கிறார்கள். என் எழுத்தின் தரம் நல்லதோ கெட்டதோ, என்னைப் படிக்க ரசிகர்கள் உண்டு. நான் காசு கொடுத்துப் படிக்கவைக்கவாவது ஆட்கள் இருக்கிறார்கள். முக்கியமாக, ஒவ்வொரு ஆண்டும் எனக்கு நோபல் பரிசு தவறிப்போகிறது.

தாக்கம்: எழுத வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு எப்போது, எப்படி ஏற்பட்டது?

பேயோன்: எனக்கு ஏற்படவில்லை. இன்னொருவருக்கு ஏற்பட்டது. என் வரலாற்று ஆசிரியர் லோகையா பெரிய வாசகர். நிறைய எழுதவும் செய்தார். ஆனால் கடைசி வரை அவரால் தமது படைப்புகளைப் பிரசுரிக்க முடியவில்லை. பதிப்புலகம் அவற்றைப் படித்துவிட்டு அவரை நிராகரித்தது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கிய மின்சார வேலிகள் அமைத்தது. இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அந்தத் தொழில்நுட்பமே இல்லை. இந்த சமயத்தில்தான் அவருக்கு எனது விடைத்தாள்கள் பார்க்கக் கிடைத்தன. அவற்றைப் படித்து என் தமிழ் நடையை வெகுவாகப் பாராட்டினார் லோகையா சார். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதப்போகிறார்கள், நீ இப்போதே எழுத ஆரம்பித்துப் பயிற்சி பெறு என்று அறிவுரை கூறினார். அப்படித்தான் எழுதத் தொடங்கினேன்.

தாக்கம்: அவருடைய முழு முகவரி, தொலைபேசி எண் தர முடியுமா?

பேயோன்: தற்போதைய முகவரி தெரியாது. நான் பிரபலமாகத் தொடங்கிய பின்பு பலர் அவரைத் தேடினார்கள். அவரோ என் முதல் புத்தகம் வெளியானதும் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார்.

தாக்கம்: அவரது நெருங்கிய நண்பர்களுக்கு அவர் முகவரி தெரிந்திருக்குமா?

பேயோன்: வாய்ப்பில்லை. நான் பிரபலமாகத் தொடங்கிய பின்பு அவர் எல்லா நண்பர்களையும் இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது அவருக்கும் ஒரு சக ஆசிரியைக்கும் காதல் உறவு இருந்தது. அந்தப் பெண்மணி உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரை வற்புறுத்தியதோடு தாலி கட்டிய மறுகணமே விவாகரத்து நோட்டீஸ் கொடுத்ததும் நினைவிருக்கிறது. சோகமான காலகட்டம் அது.

தாக்கம்: அவர் இப்போது திரும்பி வந்து இனி எழுதக் கூடாது என்று சொன்னால் கேட்பீர்களா?

பேயோன்: தாராளமாகக் கேட்பேன். ஆனால் அதன்படி நடந்துகொள்ள மாட்டேன். எழுத்துதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இனி நிறுத்துவது பிழைப்புக்கு அடுக்காது.

தாக்கம்: ஒருவேளை நீங்கள் எழுதுவதை நிறுத்தினால் அதன் காரணம் என்னவாக இருக்கும்?

பேயோன்: பத்து கோடி பணம் கிடைத்தால் நிறுத்தலாம். அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். மற்றபடி சாத்தியம் இல்லை. வேறு ஏதாவது?

தாக்கம்: இலக்கியத்தால் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? அது சமூக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா?

பேயோன்: எனக்குத் தெரிந்த வரை பலருக்குப் புத்தகங்களைப் படித்ததால் அவர்களது வாழ்க்கைப் பார்வை நல்லபடியாக மாறியிருக்கிறது. சில மோசமான எழுத்தாளர்கள் நல்ல புத்தகங்களைப் படித்துத் தாங்கள் எழுதுவதைக் கைவிட்டிருக்கிறார்கள். நான் படித்த புத்தகங்கள் என் வாழ்க்கையை மாற்றின. இப்படிப் புத்தகங்கள் எண்ணற்ற தனிநபர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தனிநபர்களின் கூடாரம்தானே சமூகம்? எனவே இலக்கியம் மறைமுகமாகவேனும் சமூக மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று உறுதியாகக் கூறுவேன்.

தாக்கம்: புதிய அல்லது இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை எப்படி இருக்கும்?

பேயோன்: உங்கள் முதல் புத்தகம் சிறுகதைத் தொகுப்பாக அல்லது கவிதைத் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய அறிவுரை இதுதான்: வெளியிடுவதற்கு முன்பு நல்ல படைப்பாளிகளிடம் படிக்கக் கொடுங்கள். நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களா? நல்லது, உங்கள் தொகுப்பில் மூன்று சிறுகதைகளை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். 12 சிறுகதைகள் இருந்தால் அதில் ஃபில்லர்களாக ஒன்பது சிறுகதைகளை எழுதுங்கள். நீங்கள் முதலில் எழுதிய கதைகளில் மற்றதை அடுத்தடுத்த தொகுப்புகளுக்கு எடுத்துவையுங்கள். விமர்சகர்கள் அந்த மூன்று கதைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள். உங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பார்கள். கவிதைத் தொகுப்பு என்றால் 25% நல்ல கவிதைகள், 75% சுமாரானவை என்று வைத்துக்கொள்ளுங்கள். பாக்கி அடுத்தடுத்த தொகுப்புகளுக்கு. ஏனென்றால் உங்கள் முதல் புத்தகம் சிறப்பாக இருந்தால் அது உருவாக்கும் எதிர்பார்ப்புக்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாது. இரண்டாவது புத்தகம் அதைவிட நன்றாக இருந்தால்கூட முதலாவதுடன் ஒப்பிடப்பட்டு எதிர்மறையாக விமர்சிக்கப்படும். எ.கா., “ஆயினும் இவரது முதல் நூலுடன் ஒப்பிடுகையில் இந்த நூல் கூடுதல் முதிர்ச்சி, நுண்ணுணர்வு, சொல்லல் முறையில் அதிக நேர்த்தி மற்றும் கூர்மையைக் காட்டுவது ஒரு குறையே.” எனவே நல்லதை மொத்தமாகக் கண்ணில் காட்டாதீர்கள்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar