ஒன்றுக்கு மேற்பட்டவர்

in கட்டுரை

நன்றாகக் கழுத்தை நீட்டி உற்றுப் பார்த்தேன். என் பழைய தமிழ் ஆசிரியர் ஐயநாதன்தான் வந்துகொண்டிருந்தார். என் சொந்த ஊரை விட்டுச் சென்னைக்கு எப்போது வந்தார் என்று தெரியவில்லை. சென்னைவாழ் வகுப்புத் தோழர்கள் யாரும் சொல்லவில்லை. அவர்களுக்கு அவர் ஒன்றும் இல்லை என்பதால் இருக்கும். எனக்கோ, அவர் ஒன்றுக்கு மேற்பட்டவர் எனலாம்.

என் பள்ளிப்பருவ வரலாற்றில் இந்த ஆள் ஒரு கறை. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஓய்வு பெறும் கட்டத்தில் இருந்த ஐயநாதன் எனக்கு வந்து வாய்த்தார். குரூரக் கறார் ஆளுமை. வீட்டுப்பாடம் செய்யத் தவறினால் பிரம்பால் புரட்டியெடுத்துவிடுவார். வேடிக்கை பார்த்தால் வெளுத்துவிடுவார். மாணவர்களின் விடைத்தாள்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு “எலக்கணம், எலக்கணம்” என்று சொல்லி அவர்கள் மேலேயே வீசுவார். உலகின் மேல் அளவற்ற வெறுப்பு இருந்தால்தான் அவ்வளவு இளக்காரம் வரும்.

அப்படித்தான் ஒருநாள் நான் சிக்கினேன். வீட்டுப்பாடம் செய்யவில்லை. ‘நாளக்கி ஐயநாதன் சார் லீவு’ என்று முந்தைய நாள் ஒரு விளக்கெண்ணெய் புரளியைக் கிளப்பிவிட்டிருந்தான். அதன் துல்லியம் குறித்த சந்தேகம் இருந்தும் ஒரு சிறு சதவீத சாத்தியம் அளித்த நப்பாசையில் வீட்டுப்பாடத்தைத் தொடவில்லை. மறுநாள் ஐயநாதன் சார் ‘நான் எதற்கு லீவு போடப்போகிறேன்’ என்ற தோரணையில் நேரத்துக்கு வகுப்பறையில் நுழைந்தார். பார்த்ததும் என் கதை முடிந்ததை உணர்ந்துவிட்டேன். பயத்தின் அறிகுறிகள் முண்டியடித்தன. எல்லோரும் சார் மூஞ்சியைப் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவசர அவசரமாகப் பக்கத்து இருக்கைப் பையனிடம் இரவல் வாங்கி வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்தேன்.

ஐயநாதன் கவனித்துவிட்டார். “டேய், என்ன எழுதுற? லவ் லெட்டரா?” என்றார். தமிழ் நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். “ஔவையார் மூன்று வகைப்படுவார்” என மூன்றே வார்த்தைகள் எழுதியிருந்தேன். “அடத் திருட்டுக் கபோதி, இந்தக் கழுதைய நேத்து எழுதிருக்க வேண்டீதுதான? ஓம் வொர்க் கழுதைய இங்க வந்து எழுதுறதுக்கு இதென்ன உன் வீட்டுக் கழுதையா?” என்றார். நான் நடுநடுங்கி “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சார்! கண்டிப்பா சார்!” என்று கெஞ்சினேன். நான் ஆங்கிலத்தில் பேசியது நிலைமையை உச்சத்திற்குத் தள்ளியது.

“போய் போர்டுக்குப் பக்கத்துல நில்லு” என்றார். வீட்டுப்பாடத்தை நான்கே பேர்தான் செய்யவில்லை. ஒன்று நான், இரண்டாவது ஆள் லீவு, மூன்றாவது ஆள் தலைமறைவு, நான்காவது ஆள் அதே வகுப்பிலேயே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். ஐயநாதன் சார் வகுப்பு என்பதால் யாரும் இம்மிகூட நகரவில்லை. தூக்குப் பையன் கயிற்றின் முரட்டுத்தன்மையால் அடிக்கடி கயிற்றை நகர்த்திக் கழுத்தைச் சொறிந்துகொண்டிருந்தான். அவன் கையிலும் தமிழ்ப் பாடநூல் இருந்தது. ஐயநாதன் சாரின் விலங்கீயமான தண்டனையைத் தவிர்க்க மாணவர்கள் என்னென்னவோ செய்தார்கள். அவர் மேல் புகார்கள் இருந்தன. ஆனால் அவர் நல்ல ஆசிரியராக இருந்து தொலைத்தார். படிக்கிற பையன்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார். அவர் வகுப்புகளில் எடுத்த செய்யுள் விளக்கக் குறிப்புகளை இப்போது படிக்கும்போதுகூட சிலிர்ப்பாக இருக்கும். ஆனால் நான் அடைந்த அவமானத்திற்கு ஈடான உணர்வு எதுவும் இல்லை.

“எல்லாரும் வீட்டுப் பாடத்த நொட்டியாச்சா? கொண்டாந்து வைங்க” என்றார் ஐயநாதன். எல்லோரும் தங்கள் நோட்டுப் புத்தகங்களை அவரது மேஜை மேல் மலர் வளையம் போல் மௌனமாக வைத்துவிட்டுப் போனார்கள். ஐயநாதன் சாரின் கவனம் என் மீது திரும்பியது. அவருக்கே உரிய மேஜை மேலிருந்து பிரம்பை எடுத்தார். எந்தவித முன்மிரட்டலும் இல்லாமல் பிரம்பால் என்னை விளாச ஆரம்பித்தார். கைகள், கால்கள், புஜங்கள், முதுகு, அமருமிடம் என்று சார் வெறியாட்டம் ஆடினார். தலை மட்டும்தான் தப்பித்தது என்று நினைக்கையில் கன்னத்தில் ஓர் அறை விட்டார் – இத்தனையும் அத்தனை பெண்களுக்கு முன்பு. பிரம்படியைவிட அதுதான் எனக்கு அதிகம் வலித்தது. இருந்தாலும் பிரம்படியைக் குறைத்து மதிப்பிட முடியாது. அடி வாங்கியபோது பல சிரமமான அபிநயங்களைப் பிடித்ததாக சில பெண்கள் பாராட்டினார்கள். அப்போது டிஸ்கோ மிகப் பிரபலம். நண்பர்கள் அடுத்த நான்காண்டு காலத்திற்கு அதை வைத்துக் கிண்டல் செய்தார்கள்.

இந்த மனிதர்தான் இப்போது எண்பத்து சொச்சம் வயதில் நான்கு கால் வாக்கர் ஒன்றின் உதவியுடன் தெருவில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. உண்மையில் அவர் என்னைப் பார்க்கவில்லை. நேராகத்தான் பார்த்துக்கொண்டு நடந்தார். அவருடைய வர்த்தக முத்திரை நீலக் கறை மேற்துண்டு சந்தேகத்திற்கு இடமின்றி அவரை அடையாளம் காட்டியது. முகத்தில் ஆங்காங்கே விரிசல் விட்டது போல் சுருக்கங்கள். தலை 90 சதவீதம் வழுக்கையாகியிருந்தது. நடப்பதன் பெரும் சிரமத்தை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. அந்த வயதில் அந்த வெயிலில் அவர் நடக்க வேண்டிய அவசியம் எனக்குப் புரியவில்லை. அவர் நிச்சயம் நோய்வாய்ப்பட்டுத் தேறிவருகிறார் என்பதை வாக்கர் கூறியது. வாக்கருக்காகக் குனிந்தது போகக் கூன் அவரது ஐந்தே முக்கால் அடி உயரத்தைக் குறைத்திருந்தது. காவல் துறை அதிகாரி சாயலைக் கொண்ட ஒரு மில் உரிமையாளரின் கம்பீரத்துடன் வலம் வந்தவர் இப்போது இந்தக் கோலத்தில்!

எனக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. சொல்லிவைத்தாற்போல் உதடுகளும் துடிக்க ஆரம்பித்தன. ஒரு விம்மலைப் பெருமூச்சால் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன். என் கருணையில் நானே மூழ்கிவிடுவேன் போல் இருந்தது. எப்படி அடி வாங்கினேன்! எப்படி வலித்தது! எப்படித் துடித்தேன்! எத்தனை பெண்கள் பார்த்தார்கள்! எப்படிச் சிரித்தார்கள்! அதற்குப் பின்பு பள்ளிப்பருவத்தில் எனக்குப் பெண் நட்பே கிடைக்கவில்லை. அவ்வளவையும் செய்தவர் இன்று ஏதுமறியாப் பச்சைக் குழந்தை போல் வேகாத வெயிலில் ஊர்ந்துகொண்டிருந்தார்.

ஐயநாதன் சாரை ஒரு கிழட்டுப் பெண்மணி நிறுத்திப் பேச்சுக் கொடுத்தார். நான் கவனித்தேன். சாதாரண நலம் விசாரிப்பில் தொடங்கிப் பள்ளிக் காலம், அரசியல் மாற்றங்கள், பொருளாதாரம், சினிமா, மகன்களுடன் சுகமான அமெரிக்க வாசம் (“எங்க டிரைவ் வே-ல பாத்தீங்கன்னா…”) என்று அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையே நிழலான இடத்திற்கு ஒதுங்கினார்கள். அவருடைய தண்டனை முறையைப் பற்றி ஒரு பேச்சுக்கூட அடிபடவில்லை. முப்பதாண்டுக் காலம் அப்பாவி வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெருமையாவது வெளிப்பட்டிருக்கலாம். ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டார். அவர் பேசிய நேரம் முழுவதும், ஒரு மிடுக்கான நெகிழ்ச்சி எழுத்தாளருக்குரிய புன்னகை அவரின் சுருங்கிய உதடுகளில் கிடைத்த இடத்தில் தவழ்ந்துகொண்டிருந்தது.

ஒரு கடை நிழலில் நின்றிருந்த எனக்கு, அந்த வயதில் வராத கொந்தளிப்பு இப்போது வந்தது. எத்தனைப் பிஞ்சுகளை அவர் துன்புறுத்தினார் என்று அவருக்குப் புரியவைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். “When the wound stops hurting what hurts is the scar” என்ற பிரெக்த்தின் கவிதை வரிகளை மேற்கோள் காட்ட விரும்பினேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பெண்மணி விடைபெற்றார்.

“திருவாளர் ஐயநாதன் அவர்களே!” என்று கத்தினேன். ஐயநாதன் சார் திரும்பிப் பார்த்தார். நான் சாலையைக் கடந்தேன். அவரிடம் சென்றேன். பொதுவாக எழுதுவார்களே, அது போல் புருவத்தைச் சுருக்கி “யாரு?” என்றார். “என்னத் தெரிலயா?” என்றேன். ஐயநாதன் சார் என் முகத்தை ஆராய்ந்தார். பின்பு அடையாளம் கண்டதில் அவர் முகம் மலர்ந்தது. “டிஸ்கோவா?” என்றார். நான் சாலையைக் கடந்தேன்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar