சாவு கிராக்கி

in பிற

(ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை)

கணினி மேஜை மேல் கவிழ்ந்திருந்த தலையை இரு காதுகளால் பிடித்து நிமிர்த்தினார் இன்ஸ்பெக்டர் குமார். தலை பின்பக்கம் சாய்ந்தது. கழுத்துக்கு நட்டநடுவே கத்தி புகுந்திருந்தது. சாதாரண சமையலறைக் கத்தி. விசைப்பலகை ரத்தத்தில் குளித்திருந்தது. இறந்தவரின் ரத்தக் களறியான வலதுகை இன்னும் கத்தியைப் பிடித்திருந்த பாவனையில் இருந்தது. போலீஸ் புகைப்படக் கலைஞர் படமெடுத்துத் தள்ளினார்.

குமார் பாலித்தீன் உறைக் கையால் கத்தியை மிக மெதுவாக வெளியே எடுத்துத் தடயவியல் நிபுணரிடம் கொடுத்தார். தற்கொலை போல் தெரியவைக்க முயன்றிருந்தார்கள். கத்தி ஏற்படுத்திய துளை நேர்க்கோடாக இல்லாமல் முட்டை வடிவில் இருந்தது. குத்திவிட்டு மரணத்தை உறுதிப்படுத்த 35 டிகிரி திருகிய அடையாளம் அது.

செத்தவர் நடுத்தர வயது ஆசாமி. எழுத்தாளர், பகுதிநேரத் திரைப்பட வசனகர்த்தா. ‘பேயோன்’ என்ற பெயரைக் குமாரும் கேள்விப்பட்டிருந்தார். வீடெங்கும் புத்தகங்கள் இருந்தன. பெரும்பாலும் இறந்தவரே எழுதிய புத்தகங்கள். அதுவும் நூற்றுக்கணக்கில். விற்பனை ஆகாத பிரதிகள் என்று ஊகித்தார் குமார்.

குமார் வீட்டைச் சுற்றிப் பார்த்தார். கதவை உடைத்துத் திறந்த அடையாளம் இல்லை. கதவு இறந்தவரால் திறக்கப்பட்டிருக்கலாம் அல்லது அது எப்போதும் திறந்திருக்கும் கதவாக இருக்கலாம். மோதலுக்கான அடையாளங்கள் இல்லை, எதுவும் திருடுபோகவில்லை, எதுவும் கலைக்கப்படவில்லை. இது பகைமைக் கொலை அல்லது ஆதாயக் கொலை என்று தீர்மானித்தார் குமார். ஓர் எழுத்தாளருக்கு என்ன மாதிரி எதிரிகள் இருக்க முடியும்? என்ன நோக்கமாக இருக்கும்? என்ன ஆதாயம் இருக்கும்?

“சூசைட் சார்” என்றார் கான்ஸ்டபிள் 114.

இல்லை என்று தலையசைத்தார் குமார்.

“டேபிள் மேல கத்திய வெச்சு கெட்டியாப் புடிச்சிக்கிட்டு அது மேல ஓங்கிப் பாஞ்சிருக்கான்.”

“பாஞ்சிட்டு? கத்திய அவனே திருகுனானா?”

“சார்?”

குமார் குத்துத் துளையைக் காட்டினார்.

“அட, ஆமா சார்!” என்றார் 114 வியப்பாக.

“நீ ஏன் இன்னும் ஏட்டு ஆவலன்னு புரியுதா?” என்றார் குமார்.

“சாரி சார்.”

“வீட்ல மத்தவங்கல்லாம் எங்க?”

“ஊருக்குப் போயிருக்காங்க சார்” என்றார் வெளியில் நின்றிருந்த ஒருவர்.

“உள்ள வாங்க” என்றார் குமார். அந்த நபர் சோகமாக உள்ளே வந்தார்.

“நீங்க யாரு?” என்றார் குமார்.

“என் பேரு நவநீதன். நான் இவரோட நண்பர். நானும் ரைட்டர்தான். இவர் மனைவி, மகன் ரெண்டு பேரும் இவரோட மாமியார் வீட்டுக்குப் போயிருக்காங்க.”

“உங்களுக்கு யார் சொன்னாங்க?”

“பக்கத்து வீட்லேந்து ஃபோன் வந்துது.”

“ஃபேமிலிக்கு சொல்லியாச்சா?”

“சொல்லியாச்சு சார். வந்துட்டிருக்காங்க.”

“என்னோட ஸ்டேஷனுக்கு வர முடியுமா?” என்றார் குமார்.

“வரேன் சார்” என்றார் நவநீதன்.

குமார் திரும்பிப் பார்த்து, “முடிஞ்சதும் ஒழுங்கா சீல் பண்ணிருங்க” என்று சொல்லிவிட்டு நவநீதனுடன் கிளம்பினார். குமாரின் ஜீப் விடைபெற்றதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

“நம்ம தெருவுல இப்படி ஒரு சம்பவம்” என்று அங்கலாய்த்தார் ஒரு பார்வையாளர்.

* * *

காவல் நிலையத்தில் நவநீதன் விரிவாகப் பேசினார்.

“தங்கமான மனுஷன்னு சொல்ல முடியாது. ஆனா யார் வம்புக்கும் போக மாட்டாரு. இவரப் புடிக்காதவங்கன்னு பாத்தா நிறைய பேர் இருக்காங்க. எல்லாருக்குமே கொலை வெறி உண்டு. ஆனா கொல்ற அளவுக்குப் போவாங்கன்னு எனக்குத் தோணல. பெரும்பாலும் தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருப்பாரு. யாரோடயும் சண்டை சச்சரவு வச்சிக்க மாட்டாரு. யாராவது வேணும்னே வம்புக்கு இழுத்தாகூட எருமை மாடு மாதிரி இருப்பாரு. சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பேச மாட்டாரு, எழுத மாட்டாரு. பர்சனலா அவர் தற்கொலை பண்ணிக்கக் காரணமே இல்ல சார். ரொம்ப ஸ்மூத்தான வாழ்க்கை அவரோடது. பிரச்சனைன்னு ஒண்ணு வந்தா வெளியூருக்கு ஓடிருவாரு. அதனால எந்தப் பிரச்சனையும் அவரை பாதிக்கிறதில்ல.”

“தேங்க்யூ மிஸ்டர் நவநீதன். அவரோட இமேஜ் எப்படி? நல்லா எழுதுவாரா?”

“படிக்கிறவங்க இருக்காங்க சார்.”

“அவரோட வருமானம் எதுலேந்து வருது? நிறைய புத்தகங்கள் விக்காம வீட்லயே கெடக்குதே? ராயல்டி எல்லாம் புஸ்தகம் வித்தாதான் குடுப்பாங்க, இல்லையா?”

“கரெக்ட் சார். அதுனாலதான் பேயோன் நூத்துக்கணக்குல புஸ்தகம் எழுதுனாரு. ஒவ்வொண்ணும் அம்பது காப்பி வித்தாலே சுளையா வரும். பத்திரிகைகள்ல, சிற்றிதழ்கள்ல ரெகுலரா எழுதுவாரு. திரைப்படத் துறைல அப்பப்ப டீ வாங்கித் தருவாங்க. ரெண்டு சொந்த வீடு, நெலம்… வசதியாத்தான் இருந்தாரு.”

“ஓக்கே. சப்போஸ் இது கொலையா இருந்தா, நீங்க யார சந்தேகப்படுவீங்க?”

நவநீதன் நெடுநேரம் யோசித்தார். பின்பு கைவிரித்தார்.

“சாரி சார். யார் பேரும் தோணல. அந்த அளவுக்கு யாரும் இல்ல.”

“நன்றி மிஸ்டர் நவநீதன். தேவைன்னா கான்டாக்ட் பண்றேன்.”

நவநீதன் வெளியேறினார்.

“அர்ச்சனா!” குமார் கத்தினார். சீருடையில் இல்லாத ஓர் இளம்பெண் விரைந்து வந்தாள்.

“சார்?”

“பேயோன் எழுதுன புக்ஸ் எல்லாத்தப் பத்தியும் எனக்கு டீட்டெயில்ஸ் வேணும். எத்தன புக்ஸ் எழுதிருக்காரு, எந்தெந்தப் புஸ்தகம் எத்தன காப்பி வித்துது, யார் பப்ளிஷ் பண்ணாங்க, எவ்வளவு ராயல்டி வாங்குனாரு, என்னென்ன டாப்பிக்ஸ் எழுதுனாரு, என்ன க்ரிட்டிசிசம் வந்துது – எல்லா ரிவ்யூஸும் வேணும், லெட்டர்ஸ், ஈமெயில்ஸ், எல்லாம் வேணும், சாயந்திரத்துக்குள்ள டீட்டெயில்டு ரிப்போர்ட் வேணும்.”

“ஓக்கே சார். சார், இவர் க்ரைம் கதைகள் எழுதிருக்கார் சார். இன்ஸ்பெக்டர் குமார் கதைகள்னு நான் படிச்சிருக்கேன்.”

“குட். இவரோட கொலை அந்தக் கதைகள்ல வர்ற எந்த க்ரைமோடயாவது மேட்ச் ஆகுதான்னு பாரு. குவிக்கா வொர்க் பண்ணுங்க.”

அர்ச்சனா இடத்தைக் காலி செய்ததும் குமார் மீண்டும் கத்தினார். “குணவதி!”

கான்ஸ்டபிள் சீருடை அணிந்த ஓர் இளம்பெண் வந்தாள்.

“சார்?”

“இந்த அம்பது வருஷத்துல எத்தனை எழுத்தாளர்கள் அகால மரணம் அடைஞ்சிருக்காங்கன்னு பாரு. லிஸ்ட் எடு. அவங்களோட வாழ்க்கை வரலாறு சுருக்கமா எழுதிக் குடு. பேட்டர்ன் பாப்போம். சாயந்திரத்துக்குள்ள வேணும். குவிக்!”

* * *

மாலைக்குள் தடயவியல் அறிக்கை வந்திருந்தது. கத்தியில் பேயோனின் மனைவியின் கைரேகை கைப்பிடியிலும் பல இடங்களிலும் இருந்தது. ஆனால் பேயோனின் கைரேகை கைப்பிடியில் மட்டும், அதுவும் பட்டும் படாமல் இருந்தது. குமாரின் சந்தேகம் உறுதிப்பட்டது. குத்திவிட்டுக் கத்தியைக் கையில் வைத்துப் பிடித்த மாதிரி வைத்திருக்கிறார்கள்.

அர்ச்சனாவும் குணவதியும் அளித்த அறிக்கைகளை ஆராய்ந்தார் குமார். அகால மரணங்களுக்கான காரணங்கள் தற்கொலை, முதுமை, நோய், வறுமை, விசா பிரச்சினைகள் என்று இருந்தன. தற்காலிக எழுத்தாளர்கள், சுமாரான எழுத்தாளர்கள், மேதைகள் பட்டியலில் இருந்தார்கள். எல்லோருக்கும் அஞ்சலிகள், திறனாய்வுகள், இரங்கல் கூட்டங்கள் குவிந்து பேசப்பட்டார்கள். தற்காலிக எழுத்தாளர்களுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு ஒரு மாதம் போல் அனுதாபத்தையும் ஓரிரு அஞ்சலிகளையும் அள்ளினார்கள். சுமாரான எழுத்தாளர்கள் மேதைகளானார்கள். மேதைகள் தங்கள் இடத்தை உறுதியாக நிறுவிக்கொண்டார்கள். குமாருக்குப் பொறி தட்டியது.

“குணவதி!” என்றார்.

“அகால மரணம் அடைஞ்ச எழுத்தாளர்கள் உயிரோட இருந்தப்ப அவங்க புக்ஸுக்குக் கெடைச்ச சேல்ஸ், செத்தப்புறம் கெடைச்ச சேல்ஸ் – கம்ப்பேர் பண்ணிக் கொண்டா!”

குணவதி திரும்பி வந்தாள்.

“இருவது வருஷத்துக்கு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கிடைச்சிருக்கு சார்” என்றாள் குணவதி.

“பரவால்ல, சொல்லு.”

“எய்ட்டி பர்சன்ட் ரைட்டர்ஸ் புக்கு செத்தப்புறம் நல்லா சேல்ஸ் ஆயிருக்கு சார்.”

“அஃப் கோர்ஸ். இன்னொரு வேலை பண்ணு. பேயோனோட புக்ஸ் ரீசன்ட்டா எத்தன காப்பி வித்துதுன்னு பாரு. பல்க்கா வாங்குனவங்க மட்டும் தெரியணும்.”

“புரியுது சார்!”

குணவதி இன்டர்காமில் ஒலித்தாள்: “சார், கணநாதன்னு ஒருத்தர் போன மாசம் பல்க்கா வாங்கிருக்காரு. டி.நகர்ல புஸ்தகக் கடை வெச்சிருக்காரு.”

* * *

மறுநாள் காலை, மஃப்டியில் இருந்த குமார், தி.நகர் ஸ்டேஷன் ரோட்டின் முனையில் ஜீப்பை நிறுத்திவிட்டுப் பாதித் தெரு தள்ளி இருந்த ‘புஸ்தக விலாஸ்’ என்ற கடைக்குள் நுழைந்தார்.

கடை உரிமையாளர் போல் ஒருவர், கல்லூரி மாணவர் வயதில் ஓர் இளைஞன், ஓர் இளம்பெண் ஆகியோர் இருந்தார்கள்.

கடை உரிமையாளர் போன்றவர் குமாரைப் பார்த்து “வாங்க சார்” என்றார்.

குமார் சட்டைப்பையிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

“நீங்கதான் கணநாதனா?” என்றார் குமார்.

கணநாதன் ஆமோதித்து அந்தக் காகிதத்தைப் பார்த்தார். 15 புத்தகங்களைக் கொண்ட ஒரு பட்டியல் அது. எல்லாம் பேயோன் எழுதியவை. ஒவ்வொன்றுக்கும் எதிரே 2 பிரதிகள் என்று எழுதியிருந்தது.

கணநாதனால் புன்னகையை அடக்க முடியவில்லை. “ஓ, பேயோனா? காலமாயிட்டார்ல? பாவம் நல்ல எழுத்தாளர், ஆனா ஸ்டாக் இல்லியே சார்.”

“கொஞ்சம் தேடிப் பாருங்களேன். இவ்ளோ நாள் படிக்காம இருந்துட்டேன். ஹிண்டுல நடுப்பக்கம் முழுப்பக்கக் கட்டுரை போட்டிருக்கான்.” குமார் புளுகினார்.

“அப்படியா?” என்று பரபரத்த கணநாதன், “இருங்க, பாத்துட்டு வரேன்” என்று கடையின் உட்புறம் சென்றார், திரும்பி வந்தார்.

“காப்பி இருக்கு சார், ஆனா விலை அதிகம். ஏன்னா எல்லாமே அவுட் ஆஃப் பிரின்ட்டு” என்றார் கணநாதன்.

குமார் சிறிது யோசித்துவிட்டு பேன்ட் பாக்கெட்டிலிருந்து நான்காக மடித்த ஒரு தாளை எடுத்து மேஜை மேல் வைத்தார். “ஸர்ச் வாரன்ட்” என்று சொல்லிவிட்டு கடையின் கிடங்குப் பகுதிக்குச் சென்றார். 114 சீருடையில் கடைக்குள் வந்தார். பதறி குமாரைப் பின்தொடரப் போன கணநாதனின் கையைப் பிடித்து நிறுத்தினார் 114.

குமார் வெளியே வந்து, “பண்டில் பண்டிலா இருக்கு” என்றார் 114இடம்.

“சார், நான் என்ன சார் பண்ணேன்!” என்று கதறிய கணநாதனிடம் குமார் சொன்னார்: “சொல்றேன்.”

“பேயோன் எழுதுன புத்தகங்களோட சேல்ஸ் ஆகாத காப்பீஸ் மொத்தம் ஒண்ணரை லட்சத்துக்கு மேல வருது. அதுல முப்பதாயிரம் காப்பி உங்களோட ‘புஸ்தக விலாஸ்’ பதிப்பகத்தோடது. ஆவரேஜா நூறு ரூபா வெல. அவர் அசாதாரணமா செத்துப்போனா அவருக்கு ஒரு கிராக்கி வரும்னு நீங்க எதிர்பாத்தீங்க. பழைய ரைட்டருங்க மாதிரி லாங் டெர்ம்ல இவருக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வரும்னு பேராசைப்பட்டீங்க. அவரோட சின்ன வயசு பிளாக் அண்ட் ஒயிட் ஃபோட்டோ எல்லாம்கூடத் தேடி எடுத்து வெச்சிருப்பீங்க, இல்ல?”

கணநாதன் விக்கித்து நின்றார். குமார் தொடர்ந்தார்.

“ஒரு புஸ்தகம் எரநூறு ரூபாய்க்கு வித்தா எவ்ளோ தேத்தலாம்! எத்தன புஸ்தகங்கள திருப்பி பப்ளிஷ் பண்லாம்! அதனால அவரக் கொல பண்ணிட்டுத் தற்கொலை மாதிரித் தெரிய வெக்க ட்ரை பண்ணீங்க. அவரை கல்ட் ஃபிகரா ஆக்கி லாபம் பாக்கக் கொலை பண்ணிருக்கீங்க. குற்றவாளிங்கிற சந்தேகத்தின்பேர்ல உங்களக் கைது செய்றேன்.”

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar