உத்திகள்

in கட்டுரை

கவிஞர் வன்மதி மோகனுடன் புத்தகக் கடையைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ரொம்ப நேரம் ஒரு புத்தகத்தை மேய்ந்துவிட்டுப் பெருமூச்சுடன் திரும்ப வைத்தால் உரிமையாளரே என்னைக் கூப்பிட்டுப் புத்தகத்தை இலவசமாகத் தருவார். சில சமயங்களில் ஒரே வருகையில் பத்துப் புத்தகங்கள் வரை இப்படி வாங்கியிருக்கிறேன். தனியாக வரும்போது மட்டுமே இந்த ரகசிய உத்தியைக் கையாள்வேன்.

இம்முறை வன்மதி மோகனிடம் அந்த உத்தியைப் பரிசோதிக்கலாமா என ஒரு தோன்றல். அவர் ஒரு பணக்கார கார்டுதாரர். முக்கியமான சீன நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றைப் பார்த்தேன். பெங்குவின் வெளியீடு. 123 பக்கம். ரூ. 350 விலை. என்னுடைய வரம்பு ரூ. 250. அந்த விலைக்குள் ஒரு புத்தகம் இருந்து நானே காசு கொடுத்து வாங்கிவிட்டால் இன்னொரு புத்தகம் வாங்க மாட்டேன்.

வன்மதி இன்னொரு பகுதியிலிருந்து தோராயமாக நாலு கிலோ புத்தகங்களுடன் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். நான் எனக்கு வேண்டிய புத்தகத்தை நேராக வைத்துவிட்டு அதை என்னால் முடிந்த வரை ஏக்கத்துடன் பார்த்தேன். சாகக் கிடக்கும் கன்றுக்குட்டியைப் பார்க்கும் ஓர் அன்பு நெஞ்சத்தின் வேதனையைக் கண்களில் கொண்டுவந்தேன். கொஞ்சம் விட்டால் கண்ணீர் வந்துவிடும். ஆனால் சம்பவமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதால் அடக்கிக்கொண்டேன்.

வன்மதி என்னையும் புத்தகத்தையும் பார்த்தார். புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். திரும்ப அதே இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தார். எனது மோனக் கதகளியை அவர் கவனிக்கவேயில்லை. நான் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வன்மதியிடம் சென்றேன். கடைசியாக ஒரு உத்தி. இது அபாயகரமானது, ஆனால் நான் விளிம்பின் மீது வாழ்வது எனக்குப் பிடித்தமான செயல்.

“உங்களுக்கு வேண்டியத எடுத்துட்டீங்களா? கெளம்பலாமா?” என்றேன்.

“ஓ, எனக்கு முடிஞ்ச்சு” என்றார். பிறகு என் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து, “சார், வாங்காதீங்க! இது எங்கிட்டயே இருக்கு. காசை வேஸ்ட் பண்ணாதீங்க” என்றார்.

பரவாயில்லை, வன்மதி விஷயத்தில் என் கண்களின் பாவனை வெளிப்பாட்டுத் திறனை ஓவர்லோடு செய்யாமலே ஒரு புத்தகத்தை ஓசியில் வாங்க முடிகிறது என்று நினைத்துக்கொண்டேன். புத்தகத்தை அவர் மூஞ்சிக்கு நேராக நீட்டினால் போதும். நான் ஷியென் ட்ஸி-யோ என்னவோ, அவருடைய புத்தகத்தை அதன் இடத்தில் வைத்துவிட்டு வன்மதியுடன் கிளம்பினேன்.

ஒரு நாள் இடைவேளை விட்டு வன்மதியைத் தொலைபேசியில் அழைத்தேன்.

“ஷியென் ட்ஸி புக்கு உங்ககிட்ட இருக்குன்னீங்களே, கிடைக்குமா? ஈவினிங் பாக்கலாமா?” என்றேன்.

“அது இருக்கு சார், ஆனா தேடி எடுக்கணும். கொஞ்ச்சம் டயம் குடுங்களேன்.”

உறுத்தும் உணர்வு.

“இந்த வாரத்துக்குள்ள கிடைக்குமா?”

“மேக்சிமம் ட்ரை பண்றேன் சார்.”

ஒரு வாரம் பொறுத்திருந்து மீண்டும் அவரை விசாரித்தேன். அலமாரிகளில் தேடிப் பார்த்தாராம். இன்னும் ஒரு பெட்டி பாக்கி இருக்கிறதாம். அநேகமாக அதில்தான் இருக்குமாம். கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. உலகத்தில் எதை வேண்டுமானாலும் சகித்துக்கொள்ளலாம் – ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறேன் – ஆனால் இந்த நட்புக் கோலம் தரித்த பொய் வாக்குறுதியாளர்களை மட்டும் சகிக்கவே முடியாது.

நான் மறுபேச்சு பேசாமல் விலை கொடுத்து ஒரு பிரதியை வாங்கிப் படிக்கவே தொடங்கிவிட்டேன். மாலைக்குள் படித்தும் முடித்தேன். விறுவிறுப்பாக, ஆனால் சுமாராக இருந்தது. சீன வன்மதி போலும். அலமாரியில் வைத்துக் காட்டக்கூட லாயக்கில்லை. குப்பையில் போட வேண்டியதுதான்.

வன்மதியை செல்பேசியில் அழைத்தேன்.

“வணக்கம் மோகன். அந்தப் புஸ்தகம் கெடச்சுதா?”

“எது சார்?”

“அந்த சைனீஸ் நாவல்.”

“இல்ல சார். இந்த வாரம் முழுக்க வேல. தேட நேரமில்ல. நாளைக்கு நைட்டு கடலூர் வேற போறேன். பிரதரின்லா வீட்ல” குழந்தை வளர்ப்பு, இந்திர விழா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேட்வாக், செம்பரம்பாக்கம் ஏரி திறப்புவிழா என்று ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு.

“பரவால்ல, நானே வாங்கிட்டேன். தேட வேணாம்.”

“அடடே, ரொம்ப சாரி சார்! எதிர்பாராத சூழ்நிலைகள்.”

“பரவாயில்ல. உங்க காப்பி கிடைக்கலன்னு சொன்னீங்கல்ல, ஈவினிங் வாங்க. என்னோட காப்பியத் தரேன்.”

“நீங்க பஷ்டீங்களா சார்?’

“படிச்சிட்டேன்.”

“நான் படிச்சதில்ல சார். வாங்கி வெச்சதோட சரி.”

“சின்ன புக்குதான். ரயில்ல பாதிப் பயணத்துல முடிச்சிருவீங்க. அற்புதமான காவியம்.”

“அப்ப நான் ஈவினிங் வரேன் சார். ஆனா ரொம்ப பிஸி. வாங்கிட்டு உடனே கெளம்பிருவேன். தப்பா நினைச்சிக்காதீங்க.”

“நீங்க உங்க வண்டில பெட்ரோல் போட்டு 20 கிலோமீட்டர் ஓட்டிட்டு வந்தா போதும் மோகன், நான் ஒண்ணும் நெனச்சிக்க மாட்டேன்.”

நான் நாவலை எடுத்தேன். மிகமிக நேர்த்தியாக, அடையாளம் தெரியாதபடி எட்டு பக்கங்களைக் கிழித்தெடுத்துக் கசக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டேன். மாலையில் வன்மதி புத்தகத்தைக் கொத்திக்கொண்டு போனார். ரொம்ப சந்சோசம் அவருக்கு உண்மையான புத்தகப் பிரியர்.

மறுநாள் காலை வன்மதியிடமிருந்து செல்பேசி அழைப்பு.

“சார், இதுல எட்டு பக்கம் இல்ல. டேமேஜ் ஆனதக் குடுத்திருக்காங்க.”

“ஆமா, கவனிச்சேன். பில் இருக்கு, குடுத்து வேற வாங்கிரலாம்.”

“நான் இப்ப யுனிவர்சல் புக்ஸ்தான் போயிட்ருக்கேன். ஊருக்கு புக்ஸ் எடுத்துட்டுப் போகணும். பில்லக் குடுத்தீங்கன்னா நானே வேற காப்பி வாங்கிட்டு வருவேன்.”

“தேடணுமே!”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar