இன்னொரு பழைய கதை

in கட்டுரை

அதிசயபூர்வமாக, நான் திருமணமானவன் என்பது ஒரு பெண் வாசகருக்கு (வாசகிக்கு) தெரியவே தெரியாது. என் படைப்புகள் அனைத்தையும் ஒரு கமா, புள்ளி விடாமல் படித்திருக்கிறார். தமது வாசிப்பின் அடிப்படையில் எனக்கு ஏழெட்டு வயது இருக்கும் என்றும் நான் ஒரு “சயில்டு பிராடிஜி” என்றும் நினைத்திருக்கிறார். அவரது ஊகத்தில் குறை கண்டிபிடிக்க முடியாது. ஏனென்றால் அவர் ஒரு குழந்தை மனநல மருத்துவர். கௌரவமான வேலை. சும்மா இணையத்தில் காமாசோமா காதல் கவிதைகள், பொன்மொழிப் புலம்பல்களை எழுதிப் போடுபவர் அல்ல. அவரது ஊகத்தை வைத்துப் பார்த்தால் நல்ல மொழித் தேர்ச்சியும் உள்ளவர். இந்த மாதிரி வாசகிகள் கிடைப்பது அபூர்வகரமானது.

என் படைப்புகளில் பாதியைப் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். நானும் பதில் போட்டேன். அடிக்கடி என் பெற்றோரைப் பற்றிக் கேட்பார். அவர்கள் ஊக்குவிக்கிறார்களா, காலையில் என்ன சாப்பிட்டேன், பிடித்த கார்ட்டூன் என்ன, பிடித்த பொம்மை என்ன, பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்றெல்லாம் கேட்டார். நான் முறையே இல்லை, இட்லி, டாம் அண்ட் ஜெரி, கொலு, சவுரவ் கங்கூலி என்று பதிலளித்தேன். அதன் பிறகு இலக்கியத்திற்குத் தாவினோம். இந்த வயதில் இவ்வளவு அறிவா என்று அவருக்கு ஆச்சரியம். எனக்கோ, கொஞ்சம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சமயத்தில் சிரமமாக இருக்கிறது.

அவரது தொழில், எழுத்துநடை ஆகியவற்றை வைத்து அவர் வயது அநேகமாக 30 போல இருக்கும் என்று தோன்றியது. 35 வரை எனக்குச் சம்மதமான வயது. ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தேன் அவரை. நான் எதிர்பார்த்ததைவிட அழகாக இருந்தார். இவரை ஊக்குவிக்க வேண்டும் என்று தோன்றியது. எங்கள் மின்னஞ்சல் போக்குவரத்தும் இணைய அரட்டைகளும் தீவிரமடைந்தன. இதனால் தமது வேலை கெடுவதாக அவர் புலம்பினார். எனக்கும் அப்படித்தான் என்றேன். நானாவது நூறு பக்கம் குறைவாக எழுதிக்கொண்டிருந்தேன். அவருக்கு அப்பாயின்ட்மென்ட்களை நிராகரித்ததால் பல இடங்களில் வீடு வாங்க முடியாமல் போய்க்கொண்டிருந்தது. நாளைக்கே ஒரு கல்யாணம் காட்சி என்றால் பொருளாதார சுதந்திரம் பாதித் தெருவைத் தாண்டாது. குற்றவுணர்வாக உணர்ந்தேன். இனிமேல் பேச வேண்டாம், இருவருக்கும் தனித்தனி வாழ்க்கை இருக்கிறது என்றேன். நன்றாகப் படி என்ற அவரது பரிவான அறிவுரையுடன் நாங்கள் விடைபெற்றோம்.

சில நாட்களே கடந்தன. திடீரென அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘எஸ்டீம்டு ஜர்னல் ஆஃப் சயில்டு சைக்காலஜி’ என்ற அமெரிக்கப் பத்திரிகைக்காக என்னைப் பற்றி 30 பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாராம். ‘லான்செட்’ பத்திரிகையிலும் என்னைப் பற்றி கட்டுரை வருகிறதாம். அடுத்து ரத்த மாதிரி எடுக்க ஆள் வருவார்கள் போல் இருந்தது. நான் பெரும் பீதியடைந்தேன். ‘லான்செட்’ படிக்கும் தமிழ் வாசக மருத்துவர்கள் ஒருவர்கூடவா இல்லாதிருப்பார்கள்? அவர் என் வயதைக் கணித்த சாமுத்திரிகா லட்சணம் அப்போதுதான் எனக்குப் பொட்டில் அடித்தது. என் மகனுக்கே இரண்டு கழுதை வயதாகிறது. இவர் எனக்கு ஒரு கழுதை வயது என்று நினைத்திருக்கிறார். சேதக் கட்டுப்பாடு செய்யாவிட்டால் மானம் போய்விடும் என அவசரமாக அவருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன், நேரில் சந்திப்போம் என்று – நெருங்கிய உறவினர் இல்லாத நேரத்தில்தான்.

என்ன வேடிக்கை என்றால், நிர்ப்பந்தம் காரணமாக என் வயதைக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. எந்தக் குழந்தை மனநல மருத்துவருக்கும் ஏழெட்டு வயதுப் பாலகனிடம் ஈர்ப்பு ஏற்படாது. ஆனால் எனது திருமணம் குறித்த அவரது அறியாமை இருள் விலகாமலே இருக்கட்டும் என விரும்பினேன். அதன் தடயங்களை ஒளித்துவைத்தேன். கூடத்தில் இருந்த ஜோடிப் புகைப்படத்தை மட்டும் எடுக்க வரவில்லை. ஒருமுறை என் நெருங்கிய உறவினர் கோபத்தில் அதை எடுத்துக் கீழே அறைந்து உடைத்தார். பின்பு மன்னிப்புக் கேட்கும் விதமாக அதற்குப் புதிய பிரேம் போட்டு அதே இடத்தில் மாட்டி அதன் எல்லாப் பக்கமும் வெள்ளை சிமென்ட்டைப் பூசிவிட்டார். மன்னிப்பு கேட்கும் விதமாக.

வாசகி வரும் நாள் நான் அதன் சிமென்ட்டை ஸ்பூனின் பிடிமுனையால் சுரண்டிக்கொண்டிருந்தபோது அழைப்பு மணி ஒலி கேட்டது. நான் ஒரு புன்னகையைத் தொடங்கிக்கொண்டு ஓடிப் போய்க் கதவைத் திறந்தேன். வாசலில் நின்றவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். நான் உடனே வாடினேன். எனக்கே ஐம்பது; எனக்கெதற்கு ஐம்பது?

“பேயோனா?” என்றார் வாசகி.

“ஆமாம்” என்றேன், வரவேற்றேன்.

எடுத்த எடுப்பிலேயே அவருடைய பார்வை எனது ஜோடிப் புகைப்படத்திற்குப் போனது. நானும் மனைவியும் நீலப் பின்னணியுடன் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தோம். தாலி கட்டிய பிறகு மனைவியின் ஆசைப்படி ஸ்டுடியோவில் ஒருமுறை இந்தக் கோலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதுதான் இது.

“ஓ, நீங்க மேரீடா?” என்றார் வாசகி.

எனக்குப் “போராடுவோம், போராடுவோம், இறுதி வரை போராடுவோம்” கோஷம் நினைவுக்கு வந்தது.

“அடடே, நீங்க வேற! நானும் ஒரு வொர்க் கலீகும் ஒரு செமினாருக்காக ஹவாய் போனப்ப எடுத்தது. அங்க அப்பிடித்தான் மாலை போட்டு வெல்கம் பண்ணுவாங்க” என்றேன்.

“ஸ்ட்ரேஞ்ச்” என்று இமைக்காத கண்களால் என்னைப் பார்த்துச் சொன்னவர், சோபாவில் உட்கார்ந்து தமது செல்பேசியை எடுத்தார். “இன்னும் என்ன பண்ணிட்டிருக்கே? உன்னோட ஃபேவரைட் ரைட்டர் உனக்காக வெய்ட் பண்ணிட்ருக்கார் பாரு” என்றார்.

எனக்கு இன்ப அதிர்ச்சி. 29 உறுதிப்பட்டது. கூடவே ‘அடிக் கிராதகி!’ என்றும் இருந்தது. முதலிலேயே அடையாள அட்டை மாதிரி எதையாவது காட்டியிருக்கக் கூடாதா?

சில நொடிகளில், சுமார் 10 வயதுச் சிறுமி ஒருத்தி வீட்டுக்குள் வந்தாள்.

“அனன்யா, இவர்தான் பேயோன்” என்று மகளிடம் சொன்னவர், “ஆக்ச்சுவலி ஹீ லுக்ஸ் எ வீ பிட் ஓல்டர் டு மீ” என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தார்.

அனன்யா என்ற பெயரை வைத்தே அவள் வீடு புறநகரில் சொகுசான வாசலிட்ட சமூகத்தில் இருந்தது, பெற்றோர் இருவரும் மருத்துவர்கள், ஆளுக்கொரு கார் இருந்தது, விடுமுறைக்கு நியூயார்க் போவார்கள் என்று ஊகிக்க முடிந்தது.

“ஹாய் அங்கிள். உங்க ரைட்டிங்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எஸ்பெஷலி ‘ஆயிரத்தெட்டு உறவுகள்'” என்றாள் அனன்யா.

“நன்றிம்மா. இந்த வயசுலயே இவ்ளோ படிக்கிறது, அதுவும் தமிழ்ல படிக்கிறது அசாத்தியம்” என்றேன்.

“தட்ஸ் ட்ரூ. அவ அப்பா நிறைய படிப்பாரு. வீ ஹேவ் எ லைப்ரரி அட் ஹோம்.”

“நீங்க சயில்டு சைக்கால – ”

“ய்யெஸ்ஸ்.”

“இந்த லான்செட்ல என்னப் பத்திக் கட்டுரை வருதுன்னு அனன்யா சொல்லிட்டிருந்தா…”

“டிட் ஷீ?” என்ற அம்மா, மகளைச் செல்லமாக முறைத்தார். “ஷீஸ் வெரி நாட்டி, அண்ட் ரியலி ஸ்மார்ட். கைல மொபைல் இருந்தா அதகளம் பண்ணிருவா” என்றார் பெருமைப் புன்னகையோடு.

பிறகு அம்மாக்காரர் எழுந்தார். “ஓக்கே, நான் கொஞ்சம் வெளிய போகணும். ஒன்னார்ல வந்துடுவேன். நீங்க பேசிட்டிருங்க, ஆர் வாட்ச் ஸம் டிவி” என்றார் கைப்பையை மாட்டிக்கொண்டு.

எனக்கு ஆத்திரம் வந்தது. “மேடம், இஃப் யூ டோன்ட் மைண்ட், இந்த மாதிரி தெரியாதவங்க வீட்ல குழந்தைங்கள விட்டுட்டுப் போகாதீங்க” என்றேன் காரமாக.

“ரைட்டர் சார், ஐ நோ யூ வெரி வெல். நாம ஈமெயில்ல நிறைய பேசிருக்கோம். யூ மைட் ரிமெம்பர், உங்களோட ‘இன்றைய செய்தித்தாள்’ ஒரு மாஸ்டர்பீஸ்னுகூட சொல்லிருக்கேன். இட்ஸ் ஆல்சோ அனன்யாஸ் ஃபேவரைட். ஒண்ணு ரெண்டு ஈமெயில்ஸ் மட்டும் இந்த வாலு பண்ண வேல. டோன்ட் ஒர்ரி. நான் சீக்கிரமா வந்துருவேன், ஷீஸ் எ குட் கிட்.”

நான் இரண்டு கைகளிலும் தலையைப் புதைத்துக்கொண்டேன். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி நான்கு. எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க பிஸ்கட்கூட இல்லை. எனக்காகக் கொஞ்சம் ஜெம்ஸ் மட்டும்தான் இருந்தது. அதையும் புகை பிடித்துவிட்டு வாசனையை மட்டுப்படுத்துவதற்காக வைத்திருந்தேன். அதைக் கொடுப்பது மறைமுகப் புகைப்பாட்டின் (passive smoking) அரூப வடிவம் போல் தோன்றியதால் தருவதற்கு மனம் வரவில்லை.

ரிமோட்டை அனன்யாவின் கையில் ஒப்படைத்துவிட்டு நீயாயிற்று உன் டிவி ஆயிற்று என்று விட்டுவிட்டேன். இவள் அம்மா நிஜமாகவே மருத்துவர்தானா அல்லது இணையத்தில் ‘பேபி சிட்டர்’களுக்கு வலைவீசும் மோசடி ஆசாமியா என்று சந்தேகம் எழுந்தது. அந்தப் பெண்ணிடமிருந்து சிறு சத்தம்கூட வரவில்லை. டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு அவளுக்கே உரிய செல்பேசியில் விளையாடிக்கொண்டிருந்தாள். வாட்ஸ்ஆப் ஒலிகளும் கேட்டன.

“உங்கப்பா என்ன பண்றாரு அனன்யா?”

“ஹீஸ் ஆல்சோ எ டாக்டர். ஸ்டான்லில ரத்த ஆய்வியல் மருத்துவரா இருக்காரு” என்றாள் அனன்யா, அந்த வயதுக்கு அசாதாரணத் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தி.

“ஓஹோ.”

“ஹீஸ் ஆல்சோ ஹாவிங் டின்னர் வித் மை மாம். இன்னிக்கு அவுங்களுக்கு ஆனிவர்சரி” என்றாள் அனன்யா. நான் கேட்டுக்கொண்டேன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar