சரி, அப்புறம்?

in துண்டிலக்கியம்

நண்பர் லபக்குதாஸ் எழுதும் வாராந்தரப் பத்திரிகைப் பத்தியில் கலர் படம் போட்டு ஒரு பெட்டிச் செய்தி வரும். கலர் படத்தைக் கொண்ட அந்தப் பெட்டிச் செய்தியில் ஒரு ஆஸ்திரிய பூச்சியியல் விஞ்ஞானி, நான்கு மாதக் குழந்தையான பாலே கலைஞர், 70 மொழிகள் தெரிந்த பூட்டு கம்பெனிக்காரர் என்று வாரம் ஓர் ஆளுமை பற்றி வரும். லபக்குதாஸ் அவர்களைத் தெரிந்த மாதிரி விளக்கிவிட்டு நாக்கைப் பிடுங்கிக்கொள்கிற மாதிரி முத்தாய்ப்பு வைப்பார்.

இவர்கள் எல்லாம் யார்? இவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவர்களைப் பற்றிச் சொல்லி என்ன பிரயோசனம்? இவர்கள் வாழ்ந்தே மொக்கை போடுவதைத் தவிர வேறு என்னத்தைப் பிடுங்கினார்கள் என்று லபக்குதாசிடம் ஒருமுறை கேட்டதற்கு, “அதெல்லாம் வடிவ நிர்ப்பந்தங்கள்யா” என்று சொல்லிவிட்டார்.

இன்றைக்கு எவனோ வாசகன் அந்தப் பத்திரிகையில் அவரது தொலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறான். ஒரு பெட்டிச் செய்தி ஆளுமையின் பெயரைக் குறிப்பிட்டு “அவரப் பத்தி வேற என்னல்லாம் தெரியும்?” என்று அசால்ட்டாகக் கேட்டிருக்கிறான். லபக்குதாஸ் வெறியாகித் தொலைபேசியாலேயே அவன் மண்டையை அடித்துக் கூழாக்கிவிட்டார்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar