திருட்டுக்/கடத்தல்

in சிறுகதை

(ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை)

ஒரு வீட்டுபயோக ஃப்ரிட்ஜின் அளவுக்கு இருந்த பாதுகாப்புப் பெட்டகம் காலியாகக் கிடந்தது. முன்னிரவு வரை அதில் கனத்திருந்த ரூ. 10 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பெட்டகத்தில் ஒரு சிறிய உராய்வைக்கூட விட்டுச் செல்லாமல் திருடுபோயிருந்தன. நூற்றாண்டு காலத்து அலுப்பைச் சுமந்திருந்தது போல் தெரிந்த பழைய காலத்துப் பொருள் அந்தப் பெட்டகம். சிமென்ட் வல்லரசாகிய பலகோடீஸ்வரர் ‘லயன்’ கே.சி. பாலகுருவுடையது. சுழற்றுத் தாழ்ப்பாளுக்கு மேலே ஒரு ஓம், அஷ்டலட்சுமி, சிரிக்கும் புத்தர், இருவேறு சாய்பாபாக்கள், விநாயகர், முருகன், திருப்பதி பாலாஜி ஆகியோரின் ஸ்டிக்கர்கள் அருள் பாலித்தன.

“இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம் குமார்” என்றார் பாலகுரு இன்ஸ்பெக்டர் குமாரிடம்.

“இன்ஸ்பெக்டர் குமார். ஷார்ட்டா இன்ஸ்பெக்டர்.”

பாலகுரு திடுக்கிட்டு, “ரைட் சார். இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வந்தேன்னா இந்த மேட்டர் – ”

“இந்த ரூமை விட்டு வெளிய போகாது” என்ற குமார், திரும்பிப் பார்த்துத் தடயவியல் நிபுணர்களிடம் லேசாகத் தலையசைத்தார். அறையின் மற்ற பகுதிகளில் பவுடர் பூசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பெட்டகத்திற்கு வந்து வேலையைத் தொடங்கினார்.

குமார் அறையைத் துருவினார். 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சாமான் வைக்குமளவு பாதுகாப்பான அறை இல்லை. உட்கார்ந்து பெட்டகத்தைப் பார்த்தார். அடியில் வைக்கும் வெல்வெட் துணியைக்கூட சுட்டிருந்தார்கள். மூன்று இலக்க எண் பூட்டு மட்டும்தான் பாதுகாப்பு. அலாரம்கூட இல்லை.

“எப்ப காணாம போச்சு?”

“திருட்டுப் போயிருச்சு சார்! காலைல தெனமும் போல வந்து தொறந்து பாத்தேன். பீரோவே காலியாக் கெடக்குது.”

“சரியா எவ்ளோ கட்டி இருந்துது?”

“எரநூறு சார். நூறு கிராம் கட்டி. பத்து ரூவாய்க்கு மேல வேல்யூ.”

“நம்பர் லாக் பாஸ்வேர்டு உங்களத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?”

“யாருக்குமே தெரியாது சார். என் ஒய்ஃப், பசங்களுக்குக்கூடத் தெரியாது.”

“ஆனா இங்க தங்கக் கட்டி இருக்குன்னு தெரியும்.”

“அது தெரியும் சார். எங்க நாலு பேருக்கு மட்டும். நான், என் ஒய்ஃப், மகன், மவ.”

“பாஸ்வேர்டு 108-தானே?”

“இல்ல சார்,” பாலகுரு திருப்தியுடன் தலையசைத்துப் புன்னகைத்தார்.

“சரி, 801.”

பாலகுருவின் வாய்பிளந்த முகத்தில் அவமானமும் கலவரமும் சங்கமித்தன.

“எப்பிடி டக்குனு கண்டுபுடிச்சீங்க?”

“திருடுனவனே கண்டுபுட்டிச்சிட்டான். நான் கண்டுபுடிக்க மாட்டனா? ஸ்டிக்கரே சொல்லுதே. சேஃப்டி வால்ட்ட வீட்ல வெச்சிருக்கீங்க, அதுவும் எங்க தாத்தா காலத்துது…”

“சார், அந்த வால்ட்டும் தங்கக் கட்டியும் ஒண்ணா எனக்குப் பரம்பர சொத்தா வந்துது சார். வால்ட்டுக்கும் ஆன்டிக் வேல்யூ இருக்கு.”

“ஃபிங்கர்ப்ரின்ட்ஸ் ஏதாவது கெடச்சுதா?” குமார் தடயவியல் நிபுணர் சேகரனிடம் கேட்டார்.

“வால்ட்ட சுத்தமா வெல்வெட் துணிய வெச்சே தொடச்சிட்டாங்க. இடுக்குல சின்னதா வெல்வெட் இழைகள் மாட்டிக்கிட்ருக்கு. ரூம் கதவு, தாழ்ப்பாள், தரைலல்லாம் நிறைய ஃபிங்கர்ப்ரின்ட், மண் துகள்கள், ஒரு கை ரோமம் கெடச்சிருக்கு. கம்ப்பேர் பண்ணணும்.”

“ஓக்கே மிஸ்டர் பாலகுரு. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ், ஸ்டாஃப், வாட்ச்மேன் எல்லாரையும் வரச் சொல்லுங்க.”

கொஞ்சம் விசாரணை, சில கைரேகைப் பதிவுகள் என்று சம்பிரதாயமாகக் கழிந்தது அடுத்த அரை மணிநேரம். முட்டுச்சந்தான சூழ்நிலை.

* * *

குமார் காவல் நிலையத்தை அடைந்து காலை உணவுப் பொட்டலத்தை மேஜை மேல் எடுத்துவைத்ததும் பாலகுரு தொலைபேசியில் பதறினார். “சார், அவங்க கால் பண்ணாங்க சார்! மெரட்னாங்க சார்! நான் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கேன். கொஞ்சம் வாங்க சார், ப்ளீஸ்!”

சிறிது நேரத்தில் குமாரும் 114உம் தடயவியல் நிபுணர்களும் தலத்தில் இருந்தார்கள்.

“ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கேன் சார். ரெக்கார்டர் ஆப் வச்சிப் பண்ணேன்.” துன்பத்திலும் ஒரு பெருமை.

பாலகுரு தமது பிரம்மாண்டமான செல்பேசியை நீட்ட, கைக்குட்டையால் வாயைப் பொத்திய குரல் சொன்னது:

“பாலகுரு, எரநூறு தங்கக் கட்டி எங்ககிட்டதான் இருக்கு. முழுசா வேணுமா, இப்பலேந்து நாலு மணிநேரத்துக்குள்ள பத்து லட்சம் கைக்கு வரணும். அரை அவருக்கு முன்னாடி ஃபோன் பண்ணி சொல்லுவேன். பணம் கைக்கு வரணும். பத்து லட்சம். இல்லன்னா நாங்க யார்னு தெரிஞ்சிக்குவ.”

பாலகுரு குமுறினார். “எரநூறு தங்கக் கட்டிக்குப் பத்து லட்சமா? தங்கத்தோட மதிப்பு தெரியுமாடா உனக்கு, பிச்சக்காரப் பயலே!”

“டேய், மரியாதையாப் பேசு! மதிப்பு தெரியும்டா. பத்து கோடிய சொமந்துகிட்டு அலையச் சொல்றியா? எல்லாம் எங்குளுக்குத் தெரியும். போலீஸ், டிடெக்டிவ்னு போனே, மவனே தங்கம் கிடைக்காது. பரம்பரை சொத்தாம்ல? பரம்பர மானம் காத்துல பறக்குதா இல்லியான்னு பாப்போம்.”

கூட்டம் ஒலிப்பதிவைச் சில நொடிகளுக்கு உள்வாங்கியது.

குமார் பாலகுருவிடமிருந்து செல்பேசியை வாங்கினார். தமது செல்பேசியிலிருந்து ஒரு எண்ணை அழைத்து ஸ்பீக்கர் ஃபோனை இயக்கினார். “குணவதி, நான் சொல்ற காலை ட்ரேஸ் பண்ணு. இன்னிக்குக் காலைல 8 எட்டு மணிக்கு 9xxxx xxxxx-ன்ற நம்பருக்கு +1 415 6068-ன்ற* நம்பர்லேந்து ஒரு கால் வந்துது. ஒண்ரை நிமிஷம். லைன்ல இருக்கவா, நீ பண்றியா?”

“கொஞ்சம் லைன்ல இருங்க சார்.”

“ஓக்கே.”

“சாரி சார், இது நெட்லேந்து பண்ண அனானிமஸ் கால். பண்ண ஆளப் புடிக்கணும்னா ப்ரொசீஜர்ஸ்லயே ரெண்டு நாள் ஓடிரும்” என்றாள் குணவதி.

“தேங்க்ஸ் குணவதி. இது போதும்.”

114 சொன்னார், “நாங்க, நாங்கன்னான் சார். ஒரு டீமா ஒர்க் பண்றாங்க போலயே.”

“அல்லது அப்படி நினைக்க வெக்கிறதும் திருடனோட உத்தியா இருக்கலாம்” என்றார் குமார்.

“அல்லது ஒரு டீமாவும் இருக்கலாம். முதல்ல ஒரு ஆளால மொத்த வேலையவும் பண்ண முடியும்னு தோணல” என்றார் சேகரன்..

குமார் நிமிர்ந்து உட்கார்ந்தார். “போலீஸ்கிட்ட போவாதேன்னான். அவன் தனி ஆளோ ஒரு டீமோ, நம்மள வேவு பாக்க அவனுக்கு ஆளுங்க போதாது. டீம்னா அதிகபட்சம் ரெண்டு பேர்தான் இருப்பாங்க. இந்நேரம் நாம இன்வால்வ் ஆகியிருக்குறத அவன் கண்டுபுடிச்சிருக்கணும். சோ இது ரொம்ப சின்ன டீம்.”

ஆமோதிப்பதே சிறந்தது என்று மற்றவர்களுக்குத் தோன்றியது.

“அரை அவருக்கு முன்னாடி ஃபோன் பண்ணா பணத்தக் கொண்டு வரணும்னான். சோ அவன் பக்கத்துலயே எங்கியாவது இருக்க சான்ஸ் இருக்கு. 114, இந்த ஏரியால ஆரம்பிச்சு எல்லா பிரவுசிங் சென்டருக்கும் போயி டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணுங்க.”

குமார் மீண்டும் குணவதியை அழைத்தார்: “குணவதி, நம்ம ஆளு பக்கத்துலயே எங்கியாவது இருப்பான்னு தோணுது. இமீடியட்டா நம்ம டீம் ஒண்ணு இந்த ஏரியா பிரவுசிங் சென்டர் எல்லாத்துக்கும் போவுது. நீ அவங்களோட போ. எட்டு மணிக்கு யார் வந்தாங்கன்னு பாரு. எல்லா எடத்துலயும் இந்த ஒரு வாரத்து பிரவுசர் ஹிஸ்டரி, சிசி காமிரா டேப் எல்லாம் செக் பண்ணு. யூ நோ வாட் டு டூ.”

குமார் தொடர்ந்தார். “அவன் கண்டிப்பா வீட்லேந்து பண்ணிருக்க மாட்டான். அது ரிஸ்க்கு.”

“எட்டு மணிக்குல்லாம் பிரவுசிங் சென்டர் தொறக்க மாட்டாங்க சார். பத்து மணி ஆவும்” என்றார் 114.

“அவன் பிரவுசிங் சென்டர் ஓனரா இருந்தா அஞ்சு மணிக்குக்கூடத் தொறப்பான்யா. அதெல்லாம் அப்புறம்” என்றார் குமார் எரிச்சலுடன்.

தாடை தொங்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாலகுருவிடம் திரும்பினார் குமார். “இந்த மாதிரி நம்பர்லேந்து ஃபோன் வந்தா எடுக்காதீங்க. நோட் பண்ணி வைங்க. பணம் குடுக்காதீங்க. திருடுனவன் திரும்பத் திரும்ப ட்ரை பண்ணுவான். அவன் பொறுமைய சோதிங்க. எவ்ளோ மெரட்னாலும் பயப்படாதீங்க. நாங்க இருக்கோம். புரீதா?”

* * *

காவல் நிலையத்தில் இருந்த குமாருக்கு 12 மணியளவில் குணவதியிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது. “இந்த ஏரியால இல்ல சார்.”

“ஓக்கே, அடுத்தது.”

குமார் அழைப்பைத் துண்டித்தவுடன் பாலகுரு வந்தார்.

“சார், பத்து நிமிஷத்துல எங்க வீட்டு வாசல்ல பணத்த வெக்கணுமாம் சார். ஃபோன் பண்ணாங்க சார். அதே மாதிரி நம்பர்.”

“விட்ருங்க. ஒண்ணும் பண்ணாதீங்க.”

“சரி சார்.”

* * *

சேகரன் இரண்டு ஏ4 தாள்களைக் குமாரின் மேஜை மேல் வீசினார்.

“இது ரெண்டும் புதுசு. எந்த டேட்டாபேஸ்லயும் இல்ல. நம்மளுதுலயும் இல்ல, ஆதார்லயும் இல்ல.”

“அப்படின்னா இது அவுங்களோட முதல் க்ரைமா இருக்கலாம்.”

“சொல்ல முடியாது. ஆனா கைரேகையோட இன்னொண்ணு கெடச்சுது” என்று நிறுத்தினார் சேகரன்.

“என்ன?”

“இங்க்கு. ஜெராக்ஸ் இங்க்கு. ரொம்ப லைட்டா ஒட்டிக்கிட்ருக்கு. கொஞ்சம் வேர்வையும் கலந்திருக்கு. எதிர்காலத்துல யூஸ் ஆகும்.”

“நம்ம ஆளு பிரவுசிங் சென்டர் வசதியோட ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.”

“அவ்ளோதான். அப்புறம் அவனுக்கு வேக்கும்” என்றார் தடயவியல்.

“அல்லது இன்டர்நெட் வசதி இருக்குற ஒரே கம்ப்யூட்டர் இருக்கிற ஜெராக்ஸ் கடையாவும் இருக்கலாம்.”

“நீங்க தியரியா எடுத்து விட்டுட்ருங்க. நான் போய் என் வேலையப் பாக்குறேன்.”

குமார் “குணவதி!” என்றதும் குணவதி வந்தாள். அவளிடம் புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். தேடலை அப்போதைக்கு நிறுத்தச் சொன்னார்.

“அந்த இங்க்கோட டீலரைப் புடிச்சு ஏஜை வெச்சு யாருக்கு வித்தார்னு கண்டுபுடிச்சிரலாம் சார்!” குணவதி பரபரத்தாள்.

“பிரில்லியன்ட். நீ பாட்டுக்கு உன் ஸ்டைல்ல வொர்க் பண்ணிட்டிரு. நாங்க ட்ரெடிஷ்னல் வழில போறோம்.”

* * *

இரவு எட்டு மணிக்குக் குமாரும் அவரது நிபுணர் குழுவினரும் மஃப்டியில் ரகசியமான ஒரு பாதை வழியே பாலகுருவின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

காபி மேஜை மேல் ஒரு ஐஃபோன் டப்பா அளவில் இருந்த ஒரு தெர்மக்கோல் பெட்டிக்கு முன் பாலகுரு தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார்.

“இதப் பாத்தாலே பயமா இருக்கு சார். இன்னும் ஓப்பன் பண்ணவேல்ல” என்றார் பாலகுரு.

குமார் பெட்டியின் அருகில் ஒண்ணரைக் காலில் அமர்ந்து அதை நெருங்கிக் காதை வைத்துப் பார்த்தார். பிறகு கையில் எடுத்து மிகமிக லேசாக அசைத்துப் பார்த்தார். மூடியைத் திறந்தார். உள்ளே இருந்தது ஒரு 100 கிராம் தங்கக் கட்டி. கூடவே கணினியில் தட்டச்சு செய்த ஒரு ஏ4 தாள் குறிப்பு: “இது ஆரம்பம்தான். காலைல 6 மணிக்குள்ள பத்து லட்சம் வந்தாகணும். இல்லன்னா உன் தங்கம் பஸ்பமாயிடும்!!”

குமாருக்கு உறைத்தது.

“நாம இதத் திருட்டு கேஸா ஹேண்டில் பண்ணிட்ருக்கோம். திருடங்க இதக் கடத்தல் கேஸா ஹேண்டில் பண்ணிட்ருக்காங்க! மிஸ்டர் பாலகுரு, நான் சொல்ற வரைக்கும் இவங்களோட தொடர்பு வச்சிக்காதீங்க, புரீதா?”

“புரீது சார்!”

குமார் குறிப்பைத் தொட்டுப் பார்த்தார். பாண்ட் பேப்பர் சில்லென்று இருந்தது. யோசித்தார்.

“குணவதி, இந்த பேப்பர் ஏன் சில்லுன்னு இருக்கு?”

குணவதி தோளைக் குலுக்கினாள்.

“ஏன்னா இது சூடா இருக்கக் கூடாது!”

குணவதி துள்ளினாள். “சூடா இருந்தா அவங்க பக்கத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சிரும். அதனால ஃப்ரீசர்க்குள்ள கொஞ்ச நேரம் பேப்பர நீட்டிக் காமிச்சிட்டு கூல் ஆக்கிருக்காங்க!”

“பிரில்லியன்ட்” என்ற குமார், “நீங்க ரீசன்ட்டா எதையாவது ஜெராக்ஸ் எடுத்தீங்களா? சொத்துப் பத்திரம், பாஸ்புக், அந்த மாதிரி?”

“இல்ல சார், ஆனா ரேஷன் கார்டு எடுத்தேன்.”

“காமிங்க.”

பாலகுரு காண்பித்தார்.

வி. கௌரி, மனைவி (47), பி. குரு, மகன் (19), பி. பால்யா, மகள் (20), தங்கம் 20 கிலோ (90).

“இதென்ன சார்?” என்று தங்கத்தைக் காட்டி பாலகுருவிடம் கேட்டார் குமார்.

“அது கையால எழுதுனது சார். ரெக்கார்டுல இல்ல. எங்க பாட்டி எறந்தப்புறம் பதினஞ்சு வருஷத்துக்கு அவங்கள ரேஷன் கார்டுல வெச்சிருந்தோம். ஃபேமிலி சென்டிமென்ட்.”

குமார் அவரை முழுசாக ஒரு நொடி முறைத்தார். பாலகுரு நெளிந்தார்.

“எந்தக் கடைல ஜெராக்ஸ் எடுத்தீங்க?”

“தெரீல சார். நம்ம பையன் ஒருத்தன் எடுத்துட்டு வந்தான். அவன் ஒரு வாரம் லீவு. இன்னிக்கு அவனுக்குக் கல்யாணம். காலைல போயிட்டு வந்தேன்.”

“இப்ப ஊர்லதான் இருக்கானா?”

பாலகுரு நெளிந்தார். “அது… சொல்ல முடியாது. நான் அவனுக்கு இருவதாயிரம் பணம் குடுத்து மூணாறுக்கு அனுப்பிருக்கேன். ஹனிமூன். விசுவாசமான பையன்.”

* * *

இரவு சுமார் ஒன்பது மணி. ‘மித்ரா வெப் சென்டர்’ என ஒரு குட்டிக் கடை இருந்தது. கண்ணாடிக் கதவு. ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், இன்டர்நெட், புகைப்பட லாமினேஷன், வெப் டிசைன், வழக்கமான இத்யாதிகள்.

நீண்ட நேரமாக அந்தப் பகுதியை முகர்ந்துகொண்டே ஊர்ந்துவந்த குமாரின் சொந்த மாருதி எஸ்டீம், இரண்டு கடை தள்ளி நின்றது. மஃப்டியில் இருந்த குமார், குணவதி, 114, பால் மணம் மாறாத இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு புகைப்படக்காரர் ஆகியோர் கடையை நோக்கிச் சென்றார்கள். குமாரை பாலகுரு அழைத்தார்: “சார், இன்னிக்கி ரெண்டு கட்டி வந்திருக்கு சார்!”

குமாரும் குணவதியும் மட்டும் கடைக்குள் சென்றார்கள். உள்ளே ஒரே ஒரு ஆள் – ஓர் இளைஞன் இருந்தான். வயது முப்பதுக்குள் இருக்கும். இரண்டு ஜெராக்ஸ் இயந்திரங்கள். ஒன்று அணைந்திருந்தது. இன்னொன்று தாள்களைத் துப்பிக்கொண்டிருந்தது. குமார் வாசலுக்குச் சென்று கதவைத் திறந்து பார்த்தார். எதிரே ஒரு குளிர்பானக் கடையும் பெட்டிக் கடையும் இருந்தன.

அந்தப் பையன் ஒரு கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தான்.

“குளோஸ் சார்” என்றான்.

குமார் உணர்ச்சியே இல்லாத, ஊடுருவும் பார்வை ஒன்றைப் பார்த்தார். சந்தேகத்திற்கு உரியவர்களுக்காகவே அவர் பிரத்தியேகமாக வைத்திருந்த உத்தி அது.

இளைஞனுக்கு மூச்சு வாங்கியது. அவன் பார்வை குமாரின் கால் பக்கம் போனது.

“என்னா வேணும்?” என்றான்.

குமார் திரும்பி குணவதியிடம் “இத எப்பிடி மிஸ் பண்ணே?” என்றார்.

குணவதி சங்கடத்துடன் “தெரில சார்” என்றாள்.

“கொஞ்சம் எழுந்துக்குறீங்களா? ஒண்ணு பாக்கணும்” என்றாள் அந்த இளைஞனிடம்.

இளைஞன் உடனே வழி விட்டான். குணவதி உலாவியின் பதிவுகள், புக்மார்க்குகள், தற்காலிகக் கோப்புகள் எல்லாவற்றையும் தேடினாள்.

“கூகுளத் தேட்றீங்களா மேடம்?” என்றான் அந்த இளைஞன் கொஞ்சம் புன்னகைத்து.

குணவதி தன் கைப்பையிலிருந்து ஒரு பென் டிரைவை எடுத்துக் கணினியில் பொருத்தினாள். அடுத்துக் கணினித் திரையில் தோன்றியவற்றைப் பார்த்து இளைஞனின் முகம் வெளிறியது. அழிக்கப்பட்ட தரவுகளை மீட்கும் மென்பொருள்.

“சார், இதப் பாருங்க சார்” என்றாள் குமாரிடம்.

இணையம் மூலமாக அநாமதேயமாகத் தொலைபேசியில் அழைப்பது எப்படி, தங்கக் கட்டிகளின் விலை என்ன என்ற இரண்டு கூகுள் தேடல்களும் அவற்றின் விடைகளும் தனியாகத் தெரிந்தன.

“பேர் என்ன?” என்றார் குமார் அந்த இளைஞனிடம்.

“சத்யா சார்.”

“முழுப் பேர்.”

“முழுப் பேரே சத்யாதான் சார்.”

“உங்கூட எத்தன பேரு?”

“சார்?”

“பாலகுரு வீட்ல தங்கத்தைத் திருடுனவங்க எத்தன பேரு?”

‘சத்யா’வால் வாயால்தான் மூச்சு விட முடிந்தது.

“ஒருத்தன்தான் சார். அவன் பேர் கணேஷ். அவன் பாலகுரு பையன் சார்.”

“பாலகுருவுக்கு அந்தப் பேர்ல பையனே இல்ல.”

“அது யாருக்கும் தெரியாது சார்.”

“அட, அதில்ல ஈஸியான தங்கம்!” என்றார் குமார்.

இயங்காத ஜெராக்ஸ் இயந்திரத்தின் மூடியைத் திறந்தார் குமார். உள்ளே அதன் பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் தங்கக் கட்டிகள் இருந்தன. குமார் கண்ணாடிக் கதவைத் தட்டினார். காத்திருந்த போலீஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள்.

குணவதி சத்யாவைப் பார்த்து, “கூகுளத்தான் தேடுனேன்” என்றாள். அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

“ஆதார் கார்டு இல்லியா? வாங்கி வச்சிக்கப்பா ஒண்ணு, யூஸ் ஆவும்” என்றார் 114 அவனிடம்.

“முடிச்சிட்டு சொல்லுங்க. நான் கமிஷ்னர் ஆபீஸ் போகணும்” என்று குமார் வெளியேறினார்.

பாலகுருவின் செல்பேசியை அழைத்தார். “வாழ்த்துக்கள் சார். திருடங்களப் புடிச்சிட்டோம் – ”

“சூப்பர் சார், சூப்பர் சார்! பாக்கிய எப்ப அனுப்புவாங்கன்னு கேட்டு சொல்றீங்களா சார்?”

– –

* கற்பனை எண்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar