விமர்சனம்: தருணனின் கவிதைத் தொகுப்பு

in கட்டுரை

கவிஞர் தருணன் ஒரு புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் (யாக்கை பதிப்பகம்). இவர் இதற்கு முன்பே ஐந்து தொகுப்புகளை வெளியிட்டிருப்பதால் இவர் விசயத்தில் நமக்கு அனுபவப் பாடம் உள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். அதனால் குறிப்பிடுகிறேன்.

‘இலக்குவ ரேகை’ என்ற இத்தொகுப்பு ஒரு படைப்பாளி என்ற முறையில் தருணனின் சரிவை விரிவாகப் பிரதிபலிக்கிறது. இவரது முந்தைய தொகுப்புகளைப் படித்தால் இந்தச் சரிவு இன்றைக்கு-நேற்றைக்கு விசயம் அல்ல என்பது புலனாகும்.

தருணனின் முதல் தொகுப்பாகிய ‘பொட்டாசியப் பூக்கள்’ நம்பிக்கையளிக்கும் கவிஞர் ஒருவரைத் தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியது. தொகுப்புக்கு முன்னுரை எழுதிய நிலவினிதான் அவர். அத்தொகுப்பு மிகவும் சராசரியாக இருந்தது. முதல் தொகுப்பு, போனால் போகட்டும் என்று பாராட்டும் தொனியில் ஒரு குறிப்பை ஒரு நடுவிதழில் எழுதியிருந்தேன்.

தருணனின் புதிய தொகுப்பு ஒரு ‘சராசரிவு’ எனலாம். கவிதைகளின் தரம், பரவாயில்லை > சுமார் > நன்றாக இல்லை > மோசம் > கோபம் வருகிறது > நெஞ்சு வலி > சாம்பல்நிறச் சந்தையில் நாட்டுத் துப்பாக்கியின் விலை எவ்வளவு இருக்கும்… என்று இறங்குமுகமாகப் பயணப்பட்டு வந்திருக்கிறது.

கவிஞர் ஆறு தொகுப்புகளிலும் ஓயாமல் பெண்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எனக்குத் தருணனைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. எனவே, இந்த ஒருதலை உரையாடல்கள் மனைவியிடம் அல்லது காதலியிடம் பேச வாய்ப்பு கிடைக்காத துன்பத்தில் பிறந்த துன்பியலா, அல்லது கவிதைப் பாணியா என்று சொல்ல முடியவில்லை. விமர்சகனாக, அதுவும் ஒரு விமர்சகனாக, நான் இதைக் கவிதைப் பாணியாகவே பார்க்க விரும்புகிறேன்.

பெண்களிடம் காதல், இரக்கம், துரோகம், நினைவுகள், உடல் பாகங்கள் பற்றியெல்லாம் சீரான உரைநடையில் அரற்றும் கவிதைசொல்லி, ஒரே பெண்ணைக் குறிப்பிடுவதாகத் தோன்றவில்லை. காரணம், கவிதைகள் வர்ணிக்கும் பெண்கள் தமது இயல்புகளில் மாறுபடுகிறார்கள். ஒரு பெண் கல்லூரிப் பருவக் காதலியாக இருந்து நிராகரிக்கிறாள், கவிதைசொல்லியின் சமூக வெறுப்புப் போக்கைக் காரணம் காட்டுகிறாள். இன்னொரு பெண் அவர் படிக்கும் ஒரு புனைவில் வரும் வசீகரமான கதாபாத்திரம்; வர்ணனையைக் கொண்டு பார்த்தால் அவள் வை.மு. கோதைநாயகியின் புஸ்திரீ (மணிப்பிரவாளத்தில் ‘மகள்’) என்று சொல்லத் தோன்றுகிறது. இன்னொரு பெண்ணோ, ஒரே சமயத்தில் பல ஆண்களை சாவிக்கொத்தாக விரலில் மாட்டிக்கொண்டு சுழற்றி விளையாடுபவள். ஊரில் ஆயிரம் பேர் இருக்க, கவிதைசொல்லி அவளிடம் சிக்கிவிட்டார் பாவம்; நாம்.

ஆளுக்கேற்ற வேசம் போடாத ஒற்றைப் பரிமாண ஆளுமையாகிய கவிதைசொல்லி, அன்பைச் சம்பாதிக்காமல் இல்லை. சில பெண்கள் திருமணம் ஆன பின்பும் பரந்த மனதோடான ஒரு நட்பைப் பேணுகிறார்கள் இவரிடம். இவரோ இன்னும் அவர்களிடம் சிக்னல் வருவதாக நினைத்துக் காதலித்துக்கொண்டிருக்கிறார். எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை மிஸ்டர்!

பின்பு உவமைகள் சில: முத்தமிடும் வேளை நம் உதடுகளிடையே குறுக்கிடும் சூரிய ஒளி போல் (அதாவது இவர் ஒரு பெண்ணை முத்தமிட்டிருக்கிறாராம்), ஈரக்கால் பதிந்து அகன்றதுமே மறையத் தொடங்கும் சுவடு போல் (தண்ணீரில் எழுதுவது, மணலில் எழுதுவது என நிலையாமையைக் குறிக்கும் புராதன உருவகங்களுக்குத் தரப்படும் வெறும் வார்னிஷ் அல்லவா இது), இப்படி “இன்னும் பல போல்கள்.”

பிறகு சக மனிதர்களைப் பற்றிய புலம்பல்கள், எள்ளல்கள், வசைகள், அறைகூவல்கள், வீறாப்புகள், பிரியங்கள், நன்றி தெரிவிப்புகள், மேஜை விரிப்புகள் (ஒரு பரிசோதனைக் கவிதையில் வருகிறது) என்று கவிதைசொல்லி தம்மை ஒரே சமயத்தில் பல தவறுகள் செய்யும் சராசரியான, ஆனால் நுண்ணுணர்வு பீறிடும் நல்ல மனிதராக முன்வைத்துக்கொள்கிறார். தமது முக்கியத்துவத்தைக் காட்டிக்கொள்ள நிறைய எதிரிகளைக் கவிதைகளில் சிருஷ்டித்துக் கொண்டுவருகிறார்; அவர்களின் “தந்திர ரேகைகள்” தமக்கு நெட்டுரு என்று அலட்டுகிறார். அதுகூடப் பரவாயில்லை, ஒரு கவிதையில் ஒரு பெண்ணை “பிராணினி” என்று குறிப்பிடுகிறார். செய்யலாமா இப்படி? தப்பில்லை?

தருணனிடம் வசீகரமான மொழி இருக்கிறது – தமிழ். அதை அவர் பயன்படுத்த வேண்டும். அவர் எழுதும் விசயங்களைத் தாண்டி, அவரது உதிரும் பளபள மழைத் துளி உலகுக்கு வெளியே ஓர் உலகம் இருக்கிறது. தருணன் சக கவிஞர்களைப் படித்து அந்த உலகைப் பற்றிய புரிதலைத் தமதாக்கிக்கொள்ள வேண்டும். மற்றபடி இதை இப்படியே விட்டுவிடலாம்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar