சம்பவ இரவு

in சிறுகதை, புனைவு

மழையைப் பார்த்தால் மயிலுக்கு நடனமாடவும் எனக்கு சிகரெட் பிடிக்கவும் வேண்டும். கனத்த மழை. பத்தரை மணிக்கு ஆரம்பித்து இன்னும் நிற்கவில்லை. இப்போது மணி பதினொன்றேமுக்கால். மயிலுக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்த மாதிரி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான் வருணன். இடையில் ஒரு ஐந்து நிமிடம் எங்கேயாவது நிறுத்துவானா என்று பார்த்தால் அறிகுறியே காணோம்.

இது சரிப்பட்டு வராது என்று செருப்பு, குடையோடு வீட்டை விட்டு வெளியே வந்தேன். வாசலில் நின்று உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி, மகனைப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்குவதற்குள் பேன்ட் நனைந்துவிட்டது. என் தெருவில் பெரிதாகப் பள்ளம் எதுவும் இல்லை. எதிர்பாராமல் மழைநீர்ப் பள்ளத்தில் காலை விடுவதற்கு, விழுவதற்கு வாய்ப்பில்லை. அது வேறு தெருவில் வேறு ஆட்களுக்கு.

நேராகப் போய் வலப்பக்கம் திரும்பிச் சிறிது தூரம் நடந்தால் ஒரு பெட்டிக்கடை எப்போதும் இருக்கும். நம்பிப் போகலாம். பாதி தூரம் நடக்கும்போது ‘டுப்’ என்ற சத்தத்தோடு மொத்த இடமும் அவிந்துபோனது. மழை வரும் முன்னே, மின்வெட்டு வரும் பின்னே என்பது நியூட்டனின் நான்காம் விதி.

ஒரே இருட்டு. எதுவுமே தெரியவில்லை. இந்த இருட்டில் சின்னக் கல் போதும் தடுக்கி விட. எனக்குத் தரை மேல் ஒரு புதிய மரியாதை வந்தது. மெதுவாக நடந்தேன். குடையும் கருப்பாகப் போயிற்றா, நான் நனையாமல் இருந்தது மட்டும்தான் எனக்குத் தெரிந்தது. கையில் குடையின் பிடியை உணர்ந்தது வாஸ்தவம்தான். ஆனால் நான் சொல்ல வருவது புரிந்துகொள்ளப்படும் என்று நினைக்கிறேன். தெருவில் வேறு யாரும் இல்லை. மழை காரணத்தால் புழுக்கம் இல்லாததால் மக்கள் உள்ளேயே கிடந்தார்கள். ஓர் உள்ளூர் சிற்பியின் இன்ஸ்டாலேஷன்கள் போல் ஆங்காங்கே மாடுகள் நனைந்தபடி படுத்திருந்தன அல்லது அமர்ந்திருந்தன, வித்தியாசம் தெரியவில்லை. எப்படித் தெரிந்தது என்றால் கண்களுக்கு மை போன்ற இருட்டு பழகத் தொடங்கியிருந்தது.

குல்ஃபிகாரன் அமைதியாகச் சின்ன விளக்கோடு போய்க்கொண்டிருந்தான். திருப்பம் வந்தது. தலையைத் திரும்பிப் பார்த்தால் அந்தக் கடையைக் காணவில்லை. மூடியிருந்தது. மூடித்தான் இருந்ததா மெழுகுவர்த்தி இல்லையா என்று அருகில் போய்ப் பார்த்தேன். கடை முழுமையாக மூடியிருந்தது. முதல் தூறலிலேயே ஏறக்கட்டியிருப்பான் போல. உன்னை நம்பி நான் பிறக்கவில்லை என்று கடை கடந்து நடந்தேன்.

கொஞ்சூண்டு நிலவொளியில் ஒரு குழந்தைகளின் தெருவோர கிரிக்கெட் பிட்ச் அளவுக்குப் பெரிய மழைநீர்க் குட்டை இருந்தது. சற்று முன் வேகமாகக் கடந்து குழப்பிவிட்டுப் போன வாகனம் எழுப்பிய அலைகள் ஓயத் தொடங்குவதும் பெய்துகொண்டிருந்த மழை கிளப்பிய நீர்த்துளிச் சிதறல்களும் காற்றின் தள்ளி விடலும் தள்ளாடி மிதந்து ஒதுங்கிய குப்பைகளுமாய்க் குட்டை பிஸியாக இருந்தது. எவ்வளவு ஆழம் என்று தெரியவில்லை. வீடுகளின் வாசற்படிக்கட்டுகள் வழியே பாதம் மூழ்காமல் நடக்கத் தடையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

பெரும் மழைக் குட்டையில் இறங்கினேன். செருப்பு மூழ்கியது. கால்களை நீரில் வைத்து எடுக்க எடுக்கக் குட்டை நீர் பேன்ட்டின் பின்னால் அடித்தது. எதிரில் ஒரு ஆட்டோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டு வந்தான். நான் மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்து வழி விட்டேன். தேங்கிய நீரை என் மேல் அடித்துவிட்டு அவன் போய்விட்டான். வண்டியை நிறுத்தித் திட்டு வாங்கிக்கொள்ளக்கூடப் பொறுமை இல்லை கூமுட்டைக்கு.

எங்கே போய்க்கொண்டிருந்தேன்? நெடுஞ்சாலையில் பல கடைகள் திறந்திருக்கும். மழையோ புயலோ திறந்திருக்கும். ஏனென்றால் லாரிகள், சரக்கு வண்டிகள் கடக்கும் வழி அது. சற்றுத் தொலைவில் ஒரு டூவீலர்காரன் விழுந்து வாரியிருந்தான். நான்கு பேர் கைகொடுத்து உதவிக்கொண்டிருந்தார்கள். பிரச்சினை எதுவும் இல்லை. அந்த ஆள் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். இந்தப் பக்கமெல்லாம் கரன்ட் இருந்தது.

குறிஞ்சிப்பூவாக ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் திறந்திருந்தது இதயத்துக்கு அமுதமாக – ஹ்ருதயாமிர்தமாக – இருந்தது. மூடிகீடித் தொலைத்துவிடப்போகிறான் என்று அவசரமாகச் சென்று ஒரு சிகரெட் கேட்டு சட்டைப்பையில் கையை விட்டால் நூறு ரூபாய் வந்தது. இளித்துக்கொண்டே நீட்டினேன். கடைக்காரன் ‘தோடா’ என்ற முகபாவத்துடன் தலையசைத்து “சில்ற குடுங்க சார். கொடைய மடக்குங்க” என்றான். “சில்ற இல்லீங்க” என்றேன் குடையை மடக்கி. “எங்கிட்டயும் இல்ல, என்ன பண்ணச் சொல்றீங்க?” என்றான் அதே மனநிலையில். “நூர்ருவா வெச்சிக்கிங்க. சில்றைய அப்புறமா வாங்கிக்கிறேன்” என்றேன். “இல்ல சார், சில்ற இருந்தா குடுங்க.”

நான் கொஞ்சம் சும்மா இருந்தேன். அங்கிருந்தபடியே வேறு ஏதாவது கடை திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. கோபம், வெறுப்பு, ஏமாற்றம் பொங்கின. “இந்த நூர்ருவா எனக்கு யூஸ் ஆகாதுப்பா, வெச்சிக்க” என்று ரூபாயை ஒரு சாக்லெட் டப்பா மூடி மேல் அறைந்து வைத்து வேகமாக நகர்ந்தேன். “அலோ, அலோ!” என்று பின்னாலிருந்து கத்தினான் கடைக்காரன். நான் வந்த வழியே சென்றுகொண்டிருந்தேன்.

சகலத்தையும் சபித்துக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின்பு பின்னால் ‘தபதப’. கூடவே, “அலோ, சார்!” திரும்பிப் பார்த்தேன். நான் வாழ்க்கையில் அதற்கு முன்பு பார்த்தேயிராத ஓர் இளைஞன் என் கையில் சிகரெட்டையும் நூறு ரூபாய்க்கு மீதிச் சில்லறை மாதிரியான ஒரு தொகையையும் அழுத்திவிட்டுத் திரும்பி ஓடிப்போனான்.

எனக்குக் காறித் துப்ப வேண்டும் போல் இருந்தது. நான் எந்நேரமும் தீப்பெட்டியைச் சுமந்து செல்பவன் அல்லன். குறிப்பாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கும்போது. செல்பேசியைக்கூட வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தேன். சிகரெட்டையும் பணத்தையும் அதனதன் இடத்தில் வைத்தேன். அந்தக் கடைக்குத் திரும்பிப் போய் பற்றவைப்பது பின்விளைவுகள் கொண்டதாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கும் அதில் ஆர்வம் தணிந்திருந்தது.

இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்பது போல் மழை அப்படியே பெய்துகொண்டிருந்தது. நான் என் வீட்டை நெருங்கினேன். பார்க்கவே பயங்கர போர் அடித்தது. நாம் இதற்குள் இருக்க வேண்டிய ஆள். வெளியே வந்ததற்குக் கிடைத்த தண்டனைதான் இத்தனையும் என்று தோன்றியது. இடதுகையால் பூட்டைப் பிடித்துக்கொண்டு வலதுகையை பேன்ட் பைக்குள் விட்டேன். சாவி இல்லை துழாவினேன். கடையில் நின்றபோது தலையைத் துடைத்துக்கொள்ளக் கைக்குட்டையை வெளியே எடுத்தபோது வெளியே விழுந்திருக்கும். இப்போது நான் அந்தக் கடைக்குப் போய் சிகரெட்டைப் பற்றவைத்தே ஆக வேண்டும்.

*

சம்பவக் காலை
சம்பவ மதியம்
சம்பவ மாலை

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar