இந்தப் படுகுழி சூப்பராக உள்ளது

in கவிதை

இந்தப் படுகுழி சூப்பராக உள்ளது
போன முறை விழுந்த குழி
ஒப்பீட்டளவில் கேவலமாக இருந்தது
இந்தக் குழியில் வசதிகள் உண்டு

முந்தைய குழியில் விழும்போது
சுற்றுச்சுவர்கள் – சுவர்கள் அல்ல,
இயற்கையாக உருவான மண் தடுப்புகள் –
காய்ந்து கரடுமுரடாய்க்
கூரிய கற்களும் உடைந்த கிளைகளும் துருத்திப்
போகும் வழியெல்லாம் உடலைக் கீறும்,
குத்தும், சிராய்க்கும், கிழிக்கும், மோதும்,
படாத இடத்தில் பதம் பார்க்கும்
ஒரு முவ்வயதுக் குழந்தை செய்வதை
யெல்லாம் செய்யும், கொசுறும் கொடுக்கும்

ஆனால் இந்தப் படுகுழி இருக்கிறதே,
அது கருணையின் குழாய் வடிவம்
நீர்ச் சறுக்குமரத்தில்
வழுக்கிச் செல்வது போல் லாவகம்
பாசியோ, சேறோ, அழுகிய காய்கறிக்
குப்பையோ, மனித மலமேதானோ,
சுற்றுச்சுவர்கள் எல்லாம் சிநேகக் கொழகொழப்பு

இந்தக் குழி ஆழம்தான், ஆனால்
எல்லாக் குழியும் ஆழம்தான்
இருந்தாலும் தரம் இருக்கிறது பாருங்கள்,
அதுதான் இங்கே வித்தியாசம்

கடந்த குழியில் விழுந்தபோது
வழியெல்லாம் அவஸ்தைப்பட்டேன்
இந்தக் குழியில் பிடிமானம் இன்றிக்
கீழே போய்க்கொண்டே இருந்தபோது
எங்கே இடித்தாலும் எதில் மோதினாலும்
தாயின் மடி போல் கவனிப்பு
அதிர்ஷ்டத்தில்கூட வாய்க்காது
இப்படியொரு மகாகுழி

சுற்றுச்சுவர்களின் சகதியில் தோய்ந்தேன்
கண், காது, மூக்கு, வாய் உள்படக்
கோவில் தூண் போல் பிசுபிசுத்துவிட்டேன்
அடியைத் தொடும்போது காய்ந்திருக்கும்
என்றே நினைக்கிறேன்
அடி நிச்சயம் உண்டு
இல்லாவிட்டால் இது குழியாகுமா?

அனுபவ ரீதியாக,
‘லேண்ட்’ ஆகையில் அடி பலமாக இருக்கும்
ஆனால் எல்லாக் குழியும் அப்படித்தான்
அடிவாரத்தில் நமக்கு ஆட்கள் வெயிட்டிங்
என்றாலும் மெத்தை போட்டு வைக்க மாட்டார்கள்
(என்ன, உயிரா போய்விடப்போகிறது?)

இதுவும் ஒரு பயணந்தான் பார்த்துக்கொள்ளுங்கள்
என்ன, முன்பே தெரிந்திருந்தால்
கழுத்தோடு ஒரு எமர்ஜென்சி லைட்டும்
கையோடு ஒரு கதை புக்கும்
எடுத்துவந்திருப்பேன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar