விடாதீர்கள்

in கவிதை

இப்போதே
வீடியோ எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்
நிறைய புகைப்படம் எடுங்கள்
பேசவைத்து, பாடவைத்து, சிரிக்கவைத்து
ஒலிப்பதிவு செய்துவைத்துக்கொள்ளுங்கள்
இப்போதே கூட உட்கார்ந்து பேசுங்கள்
குழந்தை போல் துருவித் துருவிக் கேட்டு
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்
பிறந்தநாளை மறந்துவிடாதீர்கள்
நினைவில் இருப்பதைத் தட்டச்சும்
செய்து வைத்துக்கொள்ளுங்கள்
அவர் மீதிருந்து பார்வையை எடுக்காதீர்கள்
ஒவ்வொரு முகபாவத்தையும் பார்த்து
ஒவ்வோர் உடலசைவையும் பார்த்து
மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்
உங்கள் பெயரைச் சொல்ல நேர்ப்பித்து
ஒலியை மனதில் பதித்துக்கொள்ளுங்கள்
ஏதேனும் காரணம் சொல்லி
வாழ்த்திக் கைகுலுக்குங்கள்
சாலையைக் கடக்கும்போது
கைகோர்த்துக்கொள்ளுங்கள்
சும்மா ரேகை பாருங்கள்
பார்த்தவைக்கு, கேட்டவைக்கு, தொட்டதற்கு
தொட்டபோது உணர்ந்த வெப்பத்திற்கு
மனத்திற்குள் நினைவுத் தேர்வுகளை
அடிக்கடி நடத்திக்கொண்டிருங்கள்
மதிப்பெண் விஷயத்தில் கறாராக இருங்கள்
ரத்த மாதிரி, கூந்தல் மாதிரி
சேகரித்துக்கொள்ளுங்கள்
வேண்டாத பொருட்களை, குப்பைத் துண்டுகளை
இப்போதே கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்
ஆள் உங்களை விட்டுப் போவதற்குள்
அவரை உறிஞ்சியெடுத்துவிடுங்கள்
இங்கேதானே கிடக்கிறார்
எங்கே போய்விடப்போகிறார்
என்று நினைக்காதீர்கள்
நாளைக்கு நீங்கள் இருப்பீர்கள்
அவர் இருக்க மாட்டார்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar