பெயின்ட் வாசனை!

in கவிதை

பெயின்ட் வாசனை!
எனக்கு பெயின்ட் நெடியே ஆகாது
அக்கம்பக்கத்தில் யாரோ
பெயின்ட்டில் குளிக்கிறார்கள்
வீட்டில் இருக்க முடியவில்லை
அலர்ஜி. மூச்சுத் திணறுகிறது
சட்டையை மாட்டிக்கொண்டு
வீட்டைப் பூட்டிவிட்டுத்
தெருவில் பறக்கிறேன்
பின்னாலேயே வருகிறது
பெயின்ட் வாடை
நான் மெதுவாக நடந்தால்
அதுவும் மெதுவாக நடக்கிறது
வேகமாக நடந்தால்
அதுவும் வேகமாக நடக்கிறது
வாடையைப் போக்க
நாலு தெரு சுத்தினால்
நாலு தெரு அதுவும் சுத்துகிறது
சாமர்த்தியமாய்க் கழற்றி விட
சாலையைக் கடப்பது போல்
பாவ்லா காட்டிச் சட்டென்று
அனாமத்துச் சந்தொன்றில் புகுந்தால்
அதுவும் சாலையைக் கடப்பது போல்
பாவ்லா காட்டிச் சட்டென்று
அதே சந்தில் நுழைகிறது சனியன்
சந்துக் கோவிலில் விபூதியை அள்ளி
நெற்றியெல்லாம் பூசிக்கொண்டால்
மூக்கிற்கு ஏதோ நிவாரணம் கிடைக்கிறது
ஆனால் எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள்
பார்த்துக்கொள்ளுங்களடா, மூடர்களா
உங்களுக்கு வந்தால் தெரியும் பெயின்ட் வாடை
எனினும் யாரோ குளித்த பெயின்ட்டின்
வாடை என் மீதடிப்பதேனோ முருகா?
இங்கே பொதுக் குளியலறைதான்
ஏதேனும் உண்டா? இல்லை
அண்ணாநகர் போக வேண்டும்
கடலுக்குப் போகலாம், சுவர்கள் இருக்காது
கைகளை, தோள்களை, வயிற்றை
முதுகை, உள்ளந்தொடைகளை
உச்சந்தலையை முகர்ந்துபார்க்கிறேன்
பெயின்ட் வாடை என்னிடமிருந்தா?
எனதல்ல என்று அமைதியாகி
சரி, போ என வீடு திரும்புகிறேன்
அரை இருளின் அணைப்பில்
பொருட்களின் மோனத்திடையே
திருதிருவென நான் நிற்க
இன்னும் குளிக்கிறார்கள்
யாரோ பெயின்ட்டில்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar