ஆடை அரசியல்

in கட்டுரை

என் மனைவியின் ஆடை ஆபரண விசயங்களில் நான் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. இதை அணி, இதை அணியாதே என்று நான் தடை விதிக்க மாட்டேன். நான் அந்த அளவுக்குப் பிற்போக்கானவன் அல்ல. வேறு அளவுக்கு இருக்கலாம், தெரியாது. பெண்கள் விசயத்தில் எந்த ஆணும் முழு முற்போக்காளனாக இருக்க முடியாது.

ஆனால் நகை விசயம் வேறு. நகைகள் விலையுயர்ந்தவை. எந்த நேரத்திலும் நடுத்தெருவில் டூவீலர் ஓட்டுநர்களாலும் வீட்டில் தனியாக இருக்கும்போது அந்நியர்கள் வீட்டுக்குள் புகுந்தும் பறிக்கத் தக்கவை. எனவே இவ்வளவு நகை அணிந்து வெளியே போகாதே என்பேன். அவர் அணிவதே கால்காசு பெறாத மெலிதான இரண்டு சங்கிலிகள். அதுவே எனக்கு பயக் கவலை தரும். ஏதாவது விசேசம், வைகுந்தம் என்று போகும்போது கண்ணைப் பறிக்கும் நெக்லஸ் கழுத்தில் ஏறி முகபடாம் போல் தெரியும். நான் வேண்டாம் என்று ஒருமுறை சொல்லி, எதற்கு இந்தத் தரித்திரக் கோலம் என்று பெரும் சண்டையாகி யார் கல்யாணமோ நிற்கும்படி ஆயிற்று. அதன் பிறகு நான் எதுவும் சொல்வதில்லை.

ஆடைகள் சமரச பூமி. “இந்தப் புடவை நன்றாக இருக்கிறதா? முறுக்கு கலர்” என்பார் மனைவி. நான் அவரது தேர்வைப் பாராட்டும் விதமாகக் கட்டைவிரலைக் காட்டுவேன். அதாவது கட்டைவிரலை உயர்த்த மாட்டேன்; இடதுகை ஆள்காட்டி விரலால் வலதுகையில் கட்டைவிரல் இருக்கும் இடத்தைக் காட்டுவேன். கருத்துச் சொல்ல மாட்டேன். அதிகபட்சம் “முறுக்கு என்ன கலர்?” என்று கேட்பேன். ஆட்சேபிக்க மாட்டேன். இருந்தாலும் சமீப காலமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்: “அருமையாக இருக்கிறது. என் எதிரில் வராதே.”

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar