நமக்கு வேண்டியது

in கட்டுரை

எனக்குப் பிடித்த ஐரோப்பிய நாவல்களின் பட்டியலைத் தருவதாகச் சொல்லி ஒரு வாசகியை வீட்டுக்கு அழைத்திருந்தேன். ஸ்டீக் ஃப்ரைடு லார்ஸ்ஸன் (Steak Fried Larçon), போரிஸ் அகுனின் (Boris Akunin), ஜான்ல கார் (John Le Carré) என்று பல பெயர்களை மாறிமாறி வீசிக்கொண்டோம்.

பேச்சுக்கிடையில், “இருங்க, லிஸ்ட்டைக் குடுத்துர்றேன். அப்புறம் மறந்துரும்” என்று பேன்ட் பையிலிருந்து நான்காய் மடித்த பாதி ஏ4 தாளை வெளியே எடுத்தேன். தாளோடு சேர்ந்து வெளியே விழுந்தது என் தீப்பெட்டி. எனக்கு ஐயையோ என்று இருந்தது. வாசகி அதைப் பார்த்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தார்.

நான் சுதாரித்து அடுப்பங்கரையோர மனைவியிடம், “தீப்பெட்டி தேடிட்ருந்தியே, இங்க இருக்கு பாரு,” என்றேன்.

“நான் எங்க தேடுனேன்? லைட்டர் இருக்கே.” புதினா மணம் பதிலைச் சுமந்து வந்தது.

வழமை போல் நான் விடவில்லை. “லைட்டர்தான் ரிப்பேரு-ன்னியே?”

“அது எப்ப சொன்னது? ரெண்டாயிரத்துப் பதிநாலு மார்ச்சு பதினெட்டு அன்னிக்கு உங்கள வாங்கிட்டு வரச் சொன்னேன். அப்புறம் உங்க மவன்தான் வாங்கிட்டு வந்தான்,” என்றார் மனைவி.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வாசகியிடம் திரும்பினேன். “கேட்டீங்களா? பெண்களோட நினைவுத் திறன் பெண்மையோட அற்புதங்கள்ல ஒண்ணு. ஒரு மண்ணாங்கட்டிக்கும் உதவாத விசயம். அத எந்தவித முன்முடிவும் இல்லாம, சுயலாபம் பாக்காம, தன்னை ஒரு பீடத்துல உக்காத்திக்கிட்டு மதிப்பீடுகள்-ங்கிற கண்ணாடிய அணிஞ்சிக்காம, ஒரு அமெச்சூர் காமிரா ஃபோன் புகைப்படக் கலைஞரோட அப்பாவித்தனத்தோட உண்மையப் பதிவுசெய்ற அறம் இருக்கே, அதுதான் பெண்மையோட சாரம்னு நினைக்குறேன். நளினம்-ங்கிறது வெறும் உடல் சார்ந்த மேட்டர் இல்லை. அது பெண்மையோட கூறுகளின் கூட்டுத்தொகை. உதாரணமா நீங்களே கொஞ்ச நேரம் முன்னாடி ஒண்ணு சொன்னீங்க…” என்றேன்.

வாசகி பலியாடு போல் கட்டுண்டிருந்தார். நமக்கும் அதுதானே வேண்டும்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar