அம்மாவுக்கு வழி விடு!

in கவிதை

மனைவி வரும் நேரம்
அழைப்பு மணி ஒலித்தது
அம்மாதான், போய்க் கதவைத் திற என்றேன்
மகன் திறந்தான். வேறு யாரோ.

வந்தவருக்கு 55 வயது இருக்கும்
நடுத்தர வர்க்கம் மற்றும் உடல்
கண்ணாடிக்காரர், கொஞ்சம் மீசை
இவரைப் போலவே இருப்பார்
எங்கள் மளிகைக் கடைக்காரர்
சட்டையில் ‘பன்னீர்,
அசிஸ்டன்ட் இஞ்சினியர்’ என்று
ஒரு பேட்ஜ். சுருக்கமாக ஏ.இ.
என் பெற்றோர் இருவரும்
முன்னாள் அரசுப் பணியாளர்கள்
எப்போதும் ஏ.இ., ஜே.இ. என்று
பேசிக்கொண்டிருப்பார்கள்
கடைசியில் அந்தப் பாடல்பெற்ற
ஏ.இ.-யை நேரில் பார்த்துவிட்டேன்.

ஏ.இ. கையில் என் மனைவி
வாங்கச் சென்ற மளிகைப் பொருட்கள்
காய்கறிகள், எங்கள் கருப்புக் குடை இருந்தன
பொருட்கள் தவறான ஆளோடு வந்துவிட்டன

மகன் திரும்பி என்னைப் பார்த்தான்
நான் பேசட்டுமென்று.
பேசுவதற்கு முன்பு நான் யோசிப்பவன்
ஒரு மனைவி இல்லாவிட்டால்
கணவனாக எனக்கு நஷ்டமில்லை
ஆனால் மகனுக்குத் தாயில்லை என்றால் எப்படி?
தாயில்லாப் பிள்ளை, நூலில்லாச் சேலை

நான் மகனை அதட்டினேன்
ஏன் வழியில் நிற்கிறாய்?
அம்மாவுக்கு வழி விடுடா!

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar