வெண்டைக்காய் ஃப்ரை

in கவிதை

வெண்டைக்காய் ஃப்ரை
என ஒன்று செய்திருக்கிறேன்
சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச்
சொல்லுங்கள் என்றார் மனைவி

சாப்பிட்டுப் பார்த்தேன்
விளக்கவியலாத அருமை
கசப்பிழந்து எண்ணெய் புகுந்த
கொத்தவரங்காய் வற்றல் போல் சுவை
தன்னியல்பான கொழகொழப்பின்றி
மென்மையும் மொறுமொறுப்பும்
மறந்துபோய்ச் சங்கமித்த பதம்
வெண்டைக்காயானது இதைவிடச்
சிறப்பாக நடத்தப்பட்டு
நான் பார்த்ததில்லை

பதிலளிப்பதில்தான் ஒரு பிரச்சினை
நன்றாக இருப்பதாகச் சொன்னால்
வாரம் நான்கு நாள் இதை
வெறுக்கும் வரை தின்ன வேண்டும்
(‘உங்களுக்குத்தான் பிடிக்குமே’)
பிடிக்கவில்லை என்றாலோ
இதுதான் வாழ்க்கையில்
எங்கள் கடைசிச் சந்திப்பு
(‘அவருக்குப் பிடிக்காது’)

வெண்டைக்காய் ஃப்ரையின்
முதன்மைக் கச்சாப் பொருள்
வெண்டைக்காயிலிருந்து வருகிறது
வெண்டைக்காய் ஃப்ரை சார்ந்து
நிரந்தர முடிவொன்றை
மேற்கொள்ளும் முன்பு
அதனுடைய கருத்தையும்
அறிய விரும்புகிறேன்

யாருமற்ற வெளியில்
முகமறியாத் தோட்டக்காரன்
பிஞ்சில் பறித்த வெண்டைக்காயே,
என்னால் வதக்கி உண்ணப்படுவதை
நீ விரும்புகிறாயா?
அல்லது நறுக்கிப் பொரியலாவதில்
கண் வைத்திருக்கிறாயா?
ஆண்டவன் தோட்டத்துத் தின்மலரே,
உனக்கு வெண்டைக்காய் ஃப்ரை
பிடிக்குமா, வெண்டைக்காய்ப்
பொரியல் பிடிக்குமா?

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar