ஒரு வாழ்நாள் காலம்

in கட்டுரை

காலையில் வெளியே போக செருப்பை மாட்டிக்கொண்டேன். கொஞ்சம் கனைத்தேன். மாட்டிக்கொண்டேன். கூடத்தில் சுவர்ச் சாமி படத்திற்குப் பூமாலை மாட்டிக்கொண்டிருந்த மனைவி திரும்பிப் பார்த்தார்.

“வெளியவா போறீங்க?” என்றார், ‘என்னை மீறிப் போய்விடுவாயா?’ என்ற தொனியில்.

“இல்லையே, செருப்பு சரியா இருக்கான்னு மாட்டிப் பாத்தேன்” என்றேன்.

“யாருகிட்ட கத வுடுறீங்க? இந்த செருப்பு நாலு மாசத்துக்கு முன்னாடி வாங்குனீங்க. அன்னிக்கு லாரி ஸ்ட்ரைக்கு, நல்லா ஞாபகம் இருக்கு.”

“நான் இது புதுசுன்னு சொல்லலியே.” வியர்த்தம்தான். இருந்தாலும் நான் போராளி.

“பின்ன அப்ப கவனிச்சு வாங்காம இப்ப என்ன ஆராஞ்சுக்கிட்ருக்கீங்க?”

“பெட்டர் லேட் தேன் நெவர்-ன்னுவாங்களே…”

“அந்தக் கதையெல்லாம் எங்கிட்ட வேணா….ம், வர்ற வழியில அரைக் கிலோ துவரம்பருப்பு, காக்கிலோ வெங்காயம், பையனுக்கு ஒரு மீடியம் டூத் பிரஷ்ஷு…. அப்புறம் சன்ஃப்ளவர் ஆயில் ஒரு கிலோ, எல்லாம் வாங்கிட்டு வாங்க.”

“நான் பஸ் ஸ்டாண்டு பக்கமா போறேன். நீ போய் வாங்கிக்கயேன்.”

“நான் டிரஸ் மாத்திட்டு மூஞ்சு கழுவிட்டுக் கெளம்பணும். அதெல்லாம் ஆவற வேலையில்ல. எனக்கு வீட்ல வேல இருக்கு. போய்ட்டு சீக்கிரமா வந்துருங்க.”

வாழ்வியல் மீது வெறுப்பு மண்டிட, நடைப்பிணமாய்ப் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு எங்கள் தெரு மளிகைக்கடைக்கு நடந்தேன். இதே போன்ற ஒரு சூழ்நிலையில் “ரிலாக்சு ரிவிட் ஆயிருச்சு” என்று லபக்குதாஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு கணவன் சாலையில் வெறுங்கையை வீசி நடக்கக் கூடாது இந்த மனைவிகளுக்கு.

கடையில் கூட்டம். மூன்று படி ஏற வேண்டும். இரண்டு படிகள் அவுஸ்புல். குடும்பஸ்திரீகள், குடும்பஸ்தர்கள், மாமாக்கள், சிறுவர்கள், சிறுமிகள், பட்டியல் வைத்திருப்பவர்கள், இரண்டு ரூபாய்க்கு வெற்றிலை வாங்க நீண்ட நேரம் நின்றிருந்த வாய் ஓயாத கட்டைக் குரல் ஆசாமி என்று எல்லோருடைய முறையும் முடிந்த பின்பு என்னுடைய பொருட்களை வாங்கிக்கொண்டு “சில்றையா குடுங்க சார்”-க்கு மௌனமாக ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு ஒருவழியாக வேலை முடிந்து கிளம்பினேன்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். வீட்டிலிருந்து கிளம்பி 35 நிமிடங்கள் ஆகியிருந்தன. ஆனால் மத்தியானம் ஆகிவிட்ட மாதிரி இருந்தது. இரு கைகளிலும் வெங்காயச் சருகை அடுக்குகளாகப் பிளந்த மாதிரி பாலித்தீன் பைகள் (கிழிந்து எல்லாம் கொட்டிவிடுமோ!!! “அட அவங்கிட்ட ரெண்டு ரெண்டு பையா வாங்கத் தெரியாதா உங்களுக்கு?”) சுமந்து தோள்கள் வலிக்க நினைத்துப் பார்த்தேன்… மூன்று வருசங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனுக்கு அப்பனாகி அவனே ஓர் அப்பன் போல் வளர்ந்து அரசு வேலை, தனியார் வேலை, முழுநேர எழுத்து, பதினெட்டு ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள், உறவு அரசியல், பஞ்சாயத்துகள், வக்காலத்துகள், பயணங்கள், கவலைகள், வீண் செலவுகள், விவாகரத்து நம்பிக்கைகள், சாவுகள், நட்புகள், தேர்தல்கள் என்று பல வாழ்நாள் காலங்களை ஓட்டித் தள்ளிவிட்ட எவனாவது வெளியே கிளம்பும்போது கனைத்துவைப்பானா?

Tags: , , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar