சாகும் வயதும் பிற அக்கறைகளும்

in கவிதை

துக்கம் விசாரிப்பவர்கள் வயதைக் கேட்கிறார்கள்
எழுபத்தெட்டு என்றதும் திருப்தியடைகிறார்கள்

நல்ல வேளை, பத்து வயதில் சாகவில்லை
சாக வேண்டிய வயதில் செத்துவிட்டார், நியாயஸ்தர்
நாங்களாகக் கொல்லும் வரை காத்திருக்கவில்லை, நல்ல மனிதர்…
என்பது போல.

சாகும் வயதின் வரையறை என்ன?
ஒருவர் எந்த வயதில் செத்தால் ஏற்கத்தக்கது?

●  0-10
●  11-20
●  21-30
●  31-40
●  41-50
●  51-60
●  61-70
●  70க்கு மேல்
●  மேற்கண்ட எதுவும் இல்லை

எந்தச் சூழலில் சாகலாம் என்று நிபந்தனைகள் உள்ளனவா?

எ.கா.:

கோர மரணம் அடையலாம், ரத்தம் ஜாஸ்தி
இளவயதில் சாகலாம், துயரம் எகிறும்
திடீரென்று சாகலாம், நல்ல வேதனை (கட்-ஆஃப் ஏஜ் 60)
காத்திருக்கவைத்து சாகக் கூடாது, சஸ்பென்ஸ் இல்லை
மருத்துவமனையில் வசித்துச் சாகக் கூடாது, கௌரவம் இல்லை

பரிச்சயமில்லாத ஒரு பொருள் போல்
என்னைப் பார்த்து விசாரிப்பவர்கள் யாரும்
அடுத்த முறை வயதைக் கேட்கும்போது
நான் என் வயதைச் சொல்லப்போகிறேன்

அல்லது

உங்களுக்கு 78 ஆகும்போது நான் உயிரோடிருந்தால்
உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கைக்கடிகாரம் பார்த்து
“இன்னுமா சாகவில்லை?” என்று கேட்பேன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar