மணிக்கட்டு

in கவிதை

இடது மணிக்கட்டை
நீண்ட நேரமாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ரயிலுக்குத் தண்டவாளம்
காத்திருப்பது போல்
மணிக்கட்டிலும் கோடுகள்
“Cut here” போன்ற வழிகாட்டிகள்
வலதுகை சும்மா இருக்கிறது
ஆனால் அதற்கு ஒரு
முக்கியமான வேலை உண்டு
ஒரு கத்தி பிடித்திருப்பது போல்
மிக லேசான உணர்வு
அதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது
மணிக்கட்டை விட்டு
என் பார்வை நகரவில்லை
எண்ணங்கள் அலைகின்றன
தொடர்பான நினைவுகள்
வந்து போகின்றன
உணர்ச்சியற்ற படிமமாக
ஆத்மாநாமின் உத்திரம்
தோன்றி மறைகிறது

அறுத்தால் ரத்தம்
கூடத்தில் பாதியை நிறைக்குமா?
இல்லை, ஆனால்
எதை நோக்கியாவது மெல்ல ஓடும்
பீரோவுக்கு, சோபாவுக்கு
டிவி ஸ்டாண்டுக்கு அடியில்
துடைக்கச் சிரமமான இடங்களில்
இஷ்டம் போல் ஓடும்
கூடத்தைத் தாண்டிப் போகாது
என்னிடம் அவ்வளவு இல்லை
முழு ரத்தமும் துடைத்தெடுக்க
இரண்டு நாட்கள் ஆகலாம்
வாடை போகவும் இரண்டு
போகாததாக நினைத்து
வீடு முழுக்க ரூம் ஸ்ப்ரே
அடித்துக்கொண்டிருப்பார்கள்
இன்னும் சில நாட்கள்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar