கதைகள்

in கவிதை

என்னிடம் ஏராளமாகக் கதைகள் இருக்கின்றன
என்னைப் பற்றி, உன்னைப் பற்றி,
மற்ற பெண்களைப் பற்றி, காதலைப் பற்றி,
உறவுகள், அறிமுகங்கள், பிரிவுகள், சண்டைகள் பற்றி
நான் பார்த்தவை சில, கேட்டவை சில
உன்னிடம் இவற்றைச் சொல்லியே ஆக வேண்டும்

எல்லாம் அழகான, சுவையான கதைகள்
சில கதைகள் கண்ணீர் மூட்டும்
இன்னும் சில, நம்மைத்தான் சொல்கிறானோ
என்று நினைக்கவைக்கும்

அத்தனைக் கதைகள்

ஆச்சரியம், எல்லாமே எனக்கு நினைவிருக்கின்றன
கதைகளின் அருமைக்கு இதுவே ஆதாரம்

ஒவ்வொரு கதைக்கும் என்
கூர்மையான விளக்கங்கள் உண்டு
விளக்கங்களும் யூகங்களும் தனிக் கதைகள்
அவற்றுக்கும் பின்னணிகள் இருக்கும்
பின்னணிகளும் கதைகள்தானே
இதற்கு முடிவே இருக்காது
இது நம் இருவர் உலகம்

இவற்றைச் சொல்லத்தான்
நான் இல்லை, நீயும் இல்லை
எனவே ஒரு புதிய கதை விளைகிறது
இப்புறாக்கள் என்னோடு இறந்துபோகும்
சலிப்பூட்டும் வடிவங்களாய் நீடூழி வாழும்.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar