ரவுண்ட்ஸ்

in கவிதை

வீட்டு வாசலில் நின்று ஒரு பெண் கத்தினார்
பெருமாள் வந்துண்ட்ருக்கார்
நான் போய்ப் பாத்துட்டு வரேன்
நான் திரும்பிப் பார்த்தேன்
சற்றுத் தூரத்தில் மேளம் பலக்க
நாகஸ்வரம் ஒலிக்க
ஏழெட்டுப் பேர்கள் முன்னே
அஞ்சலி போல் பொடிநடை போடப்
பெருமாள் வந்தார் பல்லக்கில்
பெருமாள் நம்ம சந்துக்குள்ள வந்துட்டார்
வீட்டை நோக்கிக் கத்தினார் பெண்மணி
இந்த ஊரிலிருந்து அந்த ஊருக்குச் செல்லும்
குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ்
இப்போது மூன்றாவது பிளாட்பாரத்தில்
வந்துகொண்டிருக்கிறது
என்று சொல்வது போலிருந்தது
அறிவிப்பாளர்
கண்கூசும் வெப்ப ஒளியுடன்
சந்துக்குள் வந்து நின்றது ரயில்
வாசல்களில் காத்திருந்த
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்
தண்டவாளத்தின் மேல் விழுந்து
மறியல் செய்து எழுந்தனர்
ஊழியர்கள் தட்டில் நெருப்பு காட்டினர்
சந்து மக்கள் கை சுட்டுக்கொள்ளாமல்
நெருப்பை ஒத்தி எடுத்தார்கள்
கையில் புனிதம் வாங்கிக்கொண்டார்கள்
சட்டை போடாத சுமார்
முப்பது பேர் பின்தொடர
ரயில் கடக்கையில்தான் கவனித்தேன்
அது வெறும் எஞ்சின்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar