பவர்ஃபுல்

in கவிதை

…ஆனா எனக்குப் பெரியவா மேல
ரொம்ப அபிமானம் உண்டு
பெரியவான்னா பெரிய பெரியவா
நடுப்பெரியவா இல்ல
நடுப்பெரியவா நல்ல மனுஷர்
மடத்த நன்னா பாத்துக்கறார்
அவ்வளோதான்
சின்ன பெரியவா பத்தித் தெரியாது
ஆனா பெரிய பெரியவா மஹான்!
பெரிய யோகி அவர்! ஞானி!
ஷிர்டி சாய்பாபா, ரமண மகரிஷி
மேலல்லாம் ரொம்ப மதிப்பு உண்டு…
ஆமா, அவரும்தான்
ரொம்ப பவர்ஃபுல் அவாள்ளாம்
ஆனா இவரோட தேஜஸ்,
ஒரு உண்மையான, அக்மார்க்
தபஸ்வியோட தேஜஸ்
யாருக்குமே இல்லேம்பேன்
சொன்னா நம்ப மாட்டேள்
நான் எங்க போனாலும் –
எங்க போனாலும் –
அங்க கண்டிப்பா பெரிய பெரியவா
படம் ஒண்ணாவது இருக்கும்
ஒரு மெடிக்கல் ஷாப் போறேன்னா
சொவத்துல அவர் படம் வெச்சிருப்பான்
ஆட்டோல ஏறுனா அவர் படம் இருக்கும்
ரோட்ல போகும்போது யதேச்சையா
அப்டி இப்டி பாக்கறச்சே பாத்தா
எங்கயாவது பலகைல சிரிச்சிண்ட்ருப்பார்
என்னமோ நீ போடீம்மா கோந்தே
நான் பாத்துக்கறேன் உன்னே
பத்திரமான்னு சொல்ற மாரியே இருக்கும்!
அஷோக் டாக்டர் இருக்காரோன்னோ?
மாமாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம்
அவர்தான் கண்டுபுடிச்சார்
நான் அவரோட க்ளினிக் போறேன்
மொதமொதலா.
எங்களுக்கு முன்னாடியே ஸ்வாமிகள்
அங்க வந்து எங்களுக்காக
வெய்ட் பண்ணிண்ட்ருக்கார்
பெரிய ஃபோட்டோ ஃப்ரேம்ல.
மாமாவுக்கு ஃபர்ஸ்ட் அட்டாக் வந்தப்போ
ஐசியூ-ல ரெக்குபரேட் பண்ணிக்
காப்பாத்தினாரே அந்த டாக்டர் பேர்
என்ன தெரியுமா? சந்திரசேகர்!
நான்தான் சொல்றனே நம்ப மாட்டேள்னு!
அதுக்கப்புறம் மாமா நன்னா இருந்தார்
பதினோரு மாசம் கல்லு மாரி இருந்தார்
ரெண்டாவது அட்டாக்ல
எனக்கு உயிர் போயிடுச்சு மாமி!
நன்னா டயட்டாத்தான் இருப்பார்
மருந்தெல்லாம் நான்ஸ்டாப்பா எடுத்துக்குவார்…
தெரிலியே மாமி!
விதி காலிங் பெல் ப்ரெஸ் பண்ணிட்டா வரது,
என்ன சொல்றேள்?
பெரியவ மாமியாரோட மல்லுக்கு நின்னு
ஜ்வல் லோன் போட்டுக் குடுத்தா
சமாளிச்சிட்டோம்
இன்ஷுரன்ஸ்ல ஒண்ணுமே வர்ல…
இதக் கேளுங்கோ,
ரெண்டாவது வாட்டி அவர
ரெக்குபரேட் பண்ணது லேடி டாக்டர்
அவ பேர் சந்திர”கலா”! எப்பிடி –
பாதிப் பேர் வந்துடுத்தா?
கடசியா தேங்க்ஸ் சொல்றதுக்கு
அந்த சந்திரகலாவப் பாக்கப் போறேன்
அவ டேபிள்ல சிரிச்சிண்ட்ருக்கார் பெரியவா
இத்துனூண்டு படம், அத ஃப்ரேம் பண்ணி
உள்ள சின்னதா லைட் வெச்சு
அரை மொழம் மல்லிப்பூ வெச்சு…
எனக்கு ஒரு நிமுஷம்
கண்ல தண்ணி வந்துடுச்சு!
ஒண்ணுமே புரில எனக்கு!
ஒண்ணுமே புரில.
மாமா மூணாவது அட்டாக்ல
போய் சேந்துட்டார்
மூணடி அடிச்சா எம்ஜிஆருக்குக்
கோவம் வருமே அந்த மாரி!
மொத ரெண்டு அட்டாக்கோட கடனே
இன்னும் தீரல
சின்னவ பர்சனல் லோன் போட்டா
அது இன்னும் ஓடிண்ட்ருக்கு
அப்புறம் சீராமுக்கு ஆக்சிரென்ட் ஆகி
ஒரு மாசம் வீட்ல கெடந்தான்
யாருக்கும் வரக்கூடாது இந்த நெலம
மாமா போன சமயத்ல பெரியவாளோட
உபன்யாசங்கள்தான் எனக்கு எல்லாம்
அவரோட யோகத்துல நான் பொழச்சேன்
பெரியவா பாத்துண்ட்ருக்கார்னு நெனக்கறச்சே
மனசுக்குத் தெம்பா இருக்கும்
அதான் அவரோட பவர்
அந்த பவர் இப்ப இங்கிலீஷ்ல பேசற
சாமியார்கள்ட்ட இருக்கா சொல்லுங்கோ.
ஆனா மஹான்கள் காலம் முடிஞ்சுபோச்சு
அவர மாதிரி யாரும் இனிமே வர மாட்டா
வேண்டாங்கறேன்!
அவரே போற எடத்துலல்லாம் இருக்கார்!
நம்ம கஷ்டங்களப் பாத்து
அருள் பாலிச்சிண்ட்ருக்கார்…

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar