அப்படித்தான் இருக்கும்

in கவிதை

எதிர்காலத்தில்
சிலர் ரொம்ப வெறுத்துப்போய்
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பொரு
நாளை நோக்கிக் காலப் பயணம் செய்தனர்
தங்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டு
ஒரு பொத்தான் அழுத்தத்தில்
குரங்கு வகைகள் அனைத்தையும்
கொன்று குவித்தனர்
இனிமேலும் மனித இனம் வேண்டாம் என்று
குரங்குகள் அத்தனையும் அழிந்தால்
பயணிகளும் மாயமாக வேண்டுமல்லவா?
அவர்கள் பத்திரமாக இருந்தார்கள்
குரங்குசார் வெப்பக் கையொப்பத்தைக்
கொண்டு சல்லடையிட்டுத் தேடினார்கள்
ஐயமின்றி ஒரு குரங்கும் மிஞ்சவில்லை
குரங்குகளைக் கொன்ற காலப் பயணிகள்
குழப்பமும் பீதியுமாய்க் காலம் திரும்பினர்
உலகின் பெருமளவு மனிதர்கள்
மறைந்துவிட்டிருந்தார்கள், நல்லது
ஆனால் பல கோடிப் பேர் மட்டும் எஞ்சி
ஷோக்காய் உலகாண்டுகொண்டிருந்தார்கள்
எப்படி?
பயணிகள் தலையைப் பிய்த்துக்கொண்டார்கள்
ஒரு பயணி தயக்கமாய்ச் சொன்னார்:
ஒருவேளை எல்லா மனிதர்களும்
குரங்கிலிருந்து வரவில்லையோ என்னவோ.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar